மீன்வளத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை: கடலூர் துறைமுகத்தில் இருந்து மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை


மீன்வளத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை:  கடலூர் துறைமுகத்தில் இருந்து மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை
x

மீன்வளத்துறை அதிகாரிகள் எச்சரிக்கையை அடுத்து கடலூர் துறைமுகத்தில் இருந்து மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை.

கடலூர்


கடலூர் முதுநகர்,

கடலூர் துறைமுகத்தில் இருந்து 1,000-க்கும் அதிகமான மீனவர்கள், 100-க்கும் மேற்பட்ட விசை மற்றும் பைபர் படகுகளில் நாள்தோறும் ஆழ்கடலுக்கு சென்று மீன் பிடித்து வருவது வழக்கம். இந்த நிலையில் தமிழக கடலோர பகுதிகளில் மணிக்கு சுமார் 60 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என வானிலை மையம் எச்சரித்ததாக தெரிகிறது.

இதையடுத்து கடலூர் மீன்வளத்துறை அதிகாரிகள், கடலூர் துறைமுகத்தில் நேற்று ஒலிபெருக்கி மூலம், பலத்த கடல் காற்று வீசகூடும் என்பதால், மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் எனவும், மறு உத்தரவு வரும் வரை கடலுக்கு சென்று மீன் பிடிப்பதை தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தி இருந்தனர்.

மேலும், கடலில் தங்கி மீன் பிடித்து வரும் விசை படகு மீனவர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் பெரும்பாலான மீனவர்கள் கரைக்கு திரும்பிவிட்டனர். இன்னும் ஒரு சில மீனவர்கள் மட்டும் கரைக்கு திரும்பவில்லை. அவர்களும் விரைவில் திரும்புவார்கள் என்று மீனவர் ஒருவர் தெரிவித்தார்.

அதேநேரத்தில் இன்று துறைமுகத்தில் இருந்து யாரும் மீன்பிடிக்க செல்லவில்லை. படகுகள் அனைத்தும் கரைப்பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. இதேபோல் பரங்கிப்பேட்டை, முடசல்ஓடை, அன்னங்கோவில் பகுதி மீனவர்களும் கடலுக்கு மீன்பிடிக்க செல்லாமல் தங்களுடைய படகுகளை அந்தந்த பகுதி கடற்கரையோரம் நிறுத்தி வைத்திருந்தனர்.


Next Story