கோடை கால விளையாட்டு பயிற்சி முகாம் பயன்தரக்கூடியதாக இருந்ததா


கோடை கால விளையாட்டு பயிற்சி முகாம் பயன்தரக்கூடியதாக இருந்ததா
x
தினத்தந்தி 20 May 2023 12:15 AM IST (Updated: 20 May 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

கோடை கால விளையாட்டு பயிற்சி முகாம் பயன்தரக்கூடியதாக இருந்ததா வீரர்கள், வீராங்கனைகள் கருத்து

கடலூர்

கடலூர்

தமிழகம் முழுவதும் பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது. இந்த விடுமுறை நாளில் சுற்றுலா தலங்களுக்கு செல்வது, தங்களுக்கு பிடித்த விளையாட்டை விளையாடி மகிழ்வது என்று ஒரு புறம் இருந்தாலும், பெரும்பாலான மாணவ செல்வங்கள், செல்போனையே உலகமாக நினைத்து, அதில் மூழ்கி கிடக்கிறார்கள். எப்போதும் செல்போனும், கையுமாக சுற்றித்திரிவதை பார்க்க முடிகிறது.

குழந்தை அழுதால் கூட, அதன் கையில் செல்போனை கொடுத்து, பெற்றோர்களே ஊக்கப்படுத்தி வருகிறார்கள். இதனால் குழந்தைகள் அடம் பிடித்தவுடன், அவர்கள் கையில் செல்போனை கொடுத்து விடுகிறார்கள். இதன் காரணமாக எப்போதும் செல்போனை பார்ப்பதால், கண்களும் பாதிக்கப்பட்டு, சிறு வயதிலேயே மூக்கு கண்ணாடி போடும் நிலைக்கு வந்து விடுகிறார்கள்.

இது போன்ற நிலை வரக்கூடாது என்பதற்காகவும், கோடை விடுமுறையை மாணவ-மாணவிகள் பயன்தரக் கூடியதாக மாற்ற வேண்டும் என்பதற்காக தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் மாவட்டந்தோறும் இலவச கோடை கால விளையாட்டு பயிற்சி முகாம் கடந்த 1-ந்தேதி தொடங்கியது.

அதன்படி கடலூர் மாவட்டத்தில் மாணவ-மாணவிகளுக்கு மாவட்ட அளவிலான இலவச கோடை கால விளையாட்டு பயிற்சி முகாம் கடலூர் அண்ணா விளையாட்டு மைதானத்தில் கடந்த 1-ந் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வந்தது. தினந்தோறும் காலை 6.30 மணி முதல் 8.30 மணி வரையிலும், மாலை 4.30 மணி முதல் 6.30 மணி வரையில் கால்பந்து, குத்துச்சண்டை, டேக்வாண்டோ, தடகளம், கூடைப்பந்து உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டன.

இதில் மாணவ-மாணவிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர். இந்நிலையில் இந்த கோடை கால பயிற்சி முகாம் பயன் உள்ளதாக இருந்ததா? என்று வீரர்கள், வீராங்கனைகள் கருத்து தெரிவித்தனர். இதன் விவரம் வருமாறு:-

பயன் உள்ளதாக இருந்தது

தடகள வீராங்கனை கேஷினி:- ஓட்டப்பந்தயம் எனக்கு பிடிக்கும். இதனால் தான் ஒரு தடகள வீராங்கனையாக மாற வேண்டும் என்ற எண்ணத்தில் பயிற்சி பெற்று வருகிறேன். இந்த கோடை கால பயிற்சி முகாம் எங்களுக்கு பயன் உள்ளதாக இருந்தது. 100 மீட்டர். 200 மீட்டர் ஓட்டப்பந்தயம், தடை தாண்டி ஓடுதல் ஆகிய பயிற்சிகளை செய்தேன். ஏற்கனவே நான் அண்ணா விளையாட்டு மைதானத்தில் தான் பயிற்சி பெற்று வருகிறேன். தற்போது கோடை கால பயிற்சியிலும் பங்கேற்று பயிற்சி பெற்றதால் முழு திறமையோடு இருக்கிறேன். மேலும் மாவட்ட, மண்டல அளவிலான ஓட்டப்பந்தயத்தில் பங்கேற்று பதக்கம் பெற்றுள்ளேன். இது போன்ற பயிற்சிகள் மாணவர்களுக்கு பயன் உள்ளதாக இருக்கிறது.

தொடர்ந்து விளையாடுவேன்

கால்பந்து பயிற்சி பெற்ற மாணவர் ரவி:- கடலூர் அண்ணா விளையாட்டு மைதானத்தில் இலவச கோடை பயிற்சி முகாம் நடைபெறுவதாக தகவல் அறிந்து, நான் கால்பந்து பயிற்சி பெற்றேன். இந்த 15 நாட்களும் எங்களது பயிற்சியாளர் நிறைய விஷயங்களை கற்றுக்கொடுத்தார். பந்தை எப்படி கடத்தி செல்வது, கோல் போடுவது போன்ற பல்வேறு விஷயங்களை தெரிந்து கொண்டேன். இருப்பினும் இந்த கோடை கால பயிற்சி 15 நாட்களுக்குள் முடிந்து விட்டது. இந்த நாளை மேலும் அதிகரித்து இருக்கலாம். இருப்பினும் நான் தொடர்ந்து விளையாட விரும்புகிறேன். சிறந்த கால்பந்து வீரராக வர வேண்டும் என்பது தான் என்னுடைய ஆசை.

முழு நேர பயிற்சி

டேக்வாண்டோ வீரர் யோகேஸ்வரன்:- முழு நேரமும் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறேன். தற்போது கோடை பயிற்சியும் எங்களுக்கு உதவிகரமாக இருந்தது. ஏற்கனவே நான் மாவட்ட அளவில் பள்ளிகளுக்கு இடையே நடந்த போட்டியில் வெற்றி பெற்று வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளேன். விளையாடுவதால் செல்போன் பார்க்க நேரம் இல்லை. இருப்பினும் கிடைக்கும் நேரத்தில் செல்போன் பார்க்கிறேன். என்னை போல மற்ற மாணவர்களும், அவர்களுக்கு பிடித்த விளையாட்டை விளையாட வேண்டும்.

குத்துச்சண்டை பயிற்சி பெற்று வரும் மாணவி ஷர்மி:- மற்ற விளையாட்டுகளை விட குத்துச்சண்டை எனக்கு பிடிக்கும். நான் அதிகமாக யாரிடமும் பேச மாட்டேன். இதனால் நான் தைரியமாகவும், தன்னம்பிக்கையுடன் இருக்க குத்துச்சண்டையை தேர்வு செய்தேன். இந்த கோடை பயிற்சி முகாம் எனக்கு பயன் உள்ளதாக இருந்தது. தொடர்ந்து காலை, மாலை இரு வேளையிலும் விளையாட்டு மைதானத்திற்கு வந்து குத்துச்சண்டை கற்றுக்கொள்வேன். எங்களுக்கு சிறந்த பயிற்சியை பயிற்சியாளர்கள் அளித்து வருகிறார்கள்.

டென்னிஸ் வீராங்கனை எவலின் லூட்ஸ்:- 10-ம் வகுப்பு தேர்வு எழுதி உள்ள நான் மாநில அளவிலான டென்னிஸ் போட்டியில் 19 வயதுக்குட்பட்டோர் பிரிவில் பங்கேற்று வெற்றி பெற்று பதக்கம் பெற்றுள்ளேன். மற்ற விளையாட்டுகளை விட டென்னிஸ் எனக்கு பிடித்தமான விளையாட்டு. இந்த விளையாட்டு விளையாடுவதால் உடல் ஆரோக்கியமாகவும், மனம் தெளிவாகவும் இருக்கிறது. இந்த கோடை பயிற்சியும் மிகவும் பயன் உள்ளதாக இருந்தது. நிறைய மாணவர்கள் புதிதாக வந்து சேர்ந்தார்கள். அவர்களும் தொடர்ந்து பயிற்சி பெற விரும்புவதாக தெரிவித்து சென்றுள்ளனர்.

யுக்திகள்

டேக்வாண்டோ பயிற்சியாளர் இளவரசன்:- கடலூர் அண்ணா விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற கோடை கால பயிற்சி முகாமில் 300-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் கலந்து கொண்டு, பல்வேறு விளையாட்டு பயிற்சிகளை மேற்கொண்டனர். இதில் 3½ வயது முதல் 17 வயது வரை மாணவ-மாணவிகள் பங்கேற்றனர். அவர்களுக்கு டேக்வாண்டோவை பொறுத்தவரை சண்டை யுக்திகள் கற்றுக்கொடுக்கப்பட்டன. மாணவ-மாணவிகள் ஆர்வத்துடன் வந்து பங்கேற்றனர்.

அடுத்த மாதம்(ஜூன்) மாவட்ட அளவிலான டேக்வாண்டோ போட்டி விருத்தாசலத்தில் நடக்கிறது. அந்த போட்டியில் பங்கேற்க மாணவர்கள் ஆயத்தமாகி வருகின்றனர். பயிற்சி முடிந்தாலும், மாணவர்கள் தொடர்ந்து பயிற்சிக்கு வருகிறார்கள். இதற்கு பெற்றோர்களும் ஊக்கமளித்தனர். மாணவர்கள் நல்ல ஒழுக்கத்துடன் வளர, இது போன்ற ஏதாவது ஒரு விளையாட்டை தேர்ந்தெடுத்து பயிற்சி பெற வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

சத்தான உணவு

மாவட்ட விளையாட்டு அலுவலர் சிவா கூறுகையில், தமிழக அரசு கோடை கால பயிற்சி முகாமை ஆண்டு தோறும் நடத்தி வருகிறது. அதன்படி கடலூர் அண்ணா விளையாட்டு மைதானத்தில் தடகளம், கால்பந்து, கூடைப்பந்து, குத்துச்சண்டை, டேக்வாண்டோ, டென்னிஸ், இறகுப்பந்து ஆகிய விளையாட்டு பயிற்சிகள் 15 நாட்கள் நடைபெற்றன. ஒவ்வொரு பிரிவிலும் மாணவர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். இதில் 386 மாணவர்கள் பங்கேற்றனர். காலை, மாலை இரு வேளை பயிற்சி அளிக்கப்பட்டது. அனைவருக்கும் 2 நாட்கள் யோகா பயிற்சி, ஒரு நாள் கடற்கரையில் பயிற்சி அளிக்கப்பட்டது. அனைத்து மாணவர்களுக்கும் சத்தான உணவான முட்டை, பால், சுண்டல் ஆகியவை வழங்கப்பட்டது. இறுதி நாள் அனைத்து மாணவர்களும் சீருடை, சான்றிதழ் வழங்கப்பட்டது.

இந்த கோடை காலத்தை மாணவர்கள் பயன் உள்ள வகையில் பயன்படுத்திக்கொண்டனர். மாணவர்கள் செல்போனை பார்ப்பதை கைவிட்டு, உடற்பயிற்சியில் கவனம் செலுத்த வேண்டும். இதன் மூலம் தீய பழக்கத்தில் இருந்து விடுபட்டு, உடலை கட்டுக்கோப்புடன் வைத்துக்கொள்ள உதவியாக இருக்கும். மேலும் இந்த பயிற்சி மாணவர்களுக்கு விளையாட்டின் முக்கியத்துவம், வேலைவாய்ப்பு பற்றியும் அறிந்து கொண்டனர் என்றார்.


Next Story