உப்பள பாத்திகள் நீரில் மூழ்கின
தொடர் மழையால் உப்பள பாத்திகள் நீரில் மூழ்கியதால் கல்உப்பு உற்பத்தி முழுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது.
ஆர்.எஸ்.மங்கலம்,
தொடர் மழையால் உப்பள பாத்திகள் நீரில் மூழ்கியதால் கல்உப்பு உற்பத்தி முழுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது.
கல் உப்பு
ராமநாதபுரம் மாவட்டத்தில் மீன்பிடித் தொழிலுக்கு அடுத்தபடியாக உப்பு உற்பத்தி செய்யும் தொழில் அதிகமாக நடைபெற்று வருகிறது. ஆண்டுதோறும் பிப்ரவரி மாதம் முதல் அக்டோபர் மாதம் வரையிலும் உப்பு உற்பத்தி செய்யும் சீசன்.
இந்த ஆண்டு கடந்த பிப்ரவரி மாதம் கல் உப்பு உற்பத்தி செய்யும் சீசன் தொடங்கியது. அதைத்தொடர்ந்து ராமநாதபுரம் மாவட்டத்தில் உப்பூர், திருப்பாலைக்குடி, சம்பை பத்தனேந்தல் பல ஊர்களில் உள்ள உப்பள பாத்திகளில் கல் உப்பு உற்பத்தி செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வந்தது.
இந்த நிலையில் தமிழகத்தில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கடந்த சில நாட்களாக நல்ல மழை பெய்து வருகிறது. இதேபோல் ராமநாதபுரம் மாவட்டத்திலும் பல ஊர்களில் கடந்த 3 நாட்களுக்கு மேலாக இரவு நேரங்களில் நல்ல மழை பெய்து வருகிறது.
ஆர்.எஸ்.மங்கலம் அருகே திருப்பாலைக்குடி, உப்பூர், பத்தனேந்தல் உள்ளிட்ட பல ஊர்களிலும் கடந்த சில நாட்களாக நல்ல மழை பெய்து வருவதால் உப்பூர், திருப்பாலைக்குடி, பத்தனேந்தல் பகுதிகளில் உள்ள உப்பள பாத்திகள் முழுவதும் மழை நீரில் மூழ்கி போய் உள்ளன. உப்பளப்பாத்திகள் முழுவதும் மழை நீரில் மூழ்கி போய் உள்ளதால் கல் உப்பு உற்பத்தி செய்யும் பணி முழுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது.
வேலையிழப்பு
இன்னும் ஒரு சில வாரங்களில் வடகிழக்கு பருவமழை சீசனும் தொடங்க உள்ளதால் இந்த ஆண்டு கல் உப்பு உற்பத்தி செய்யும் சீசன் இத்துடன் முடிவடைந்து விட்டதாகவும் கூறப்படுகிறது.பாத்திகள் முழுவதும் மழை நீரில் மூழ்கி உள்ளதால் உப்பு உற்பத்தி செய்யும் தொழிலை நம்பி வாழும் ஏராளமான தொழிலாளர்கள் வேலை வாய்ப்பு இழந்து தவித்து வருகின்றனர்.