சட்டப்பேரவையில் அதிமுக உறுப்பினர்கள் பேசும் போது நேரலை செய்யப்படுவதில்லை: எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு


சட்டப்பேரவையில் அதிமுக உறுப்பினர்கள் பேசும் போது  நேரலை செய்யப்படுவதில்லை: எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 12 April 2023 7:13 AM GMT (Updated: 13 April 2023 12:46 AM GMT)

சட்டப்பேரவையில் அதிமுக உறுப்பினர்கள் பேசும் போது நேரலை செய்யப்படுவதில்லை என்று எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.

சென்னை,

சட்டசபையில் நேரமில்லா நேரத்தில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி விருத்தாசலம் சிறுமி பாலியல் சம்பவம் தொடர்பாக அரசின் கவனத்தை எதிர்த்து பேசினார். அவரின் இந்த பேச்சு நேரலையில் ஒளிபரப்பு செய்யப்படவில்லை என அ.தி.மு.க. கொறடா எஸ்.பி. வேலுமணி சட்டசபையில் பேசினார்.

அப்போது அவர், பிரதான எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியின் பேச்சு தொடர்ந்து நேரலையில் (நேரடி ஒளிபரப்பு) காட்டப்படுவதில்லை என்றார்.

இதற்கு சபாநாயகர், 'இது தொடர்பாக உறுப்பினர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி என்னிடம் கூறியிருக்கிறார், நான் செயலாளரிடம் அது குறித்து விசாரிக்க சொல்லி இருக்கிறேன்' என்றார். அதனை தொடர்ந்து பேசிய எஸ்.பி.வேலுமணி, எதிர்க்கட்சித் தலைவரின் பேச்சு நேரலையில் தடை செய்யப்பட்டதை கண்டித்து வெளிநடப்பு செய்வதாக தெரிவித்தார்.

பின்னர் அ.தி.மு.க. உறுப்பினர்கள் சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

சட்டசபைக்கு வெளியே எடப்பாடி பழனிசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-

நேரமில்லா நேரத்தில் விருத்தாசலத்தில் நடந்த பாலியல் வன்கொடுமை சம்பந்தமாக நான் பேசினேன். பாதிக்கப்பட்ட சிறுமியை விசாரித்தபோது பல புகைப்படங்களை போலீசார் காட்டியுள்ளார்கள். அதிலே அந்த கல்லூரியினுடைய உரிமையாளரும், விருத்தாசலம் நகராட்சி 30-வது வார்டு தி.மு.க. நகர்மன்ற உறுப்பினர் புகைப்படத்தை அடையாளம் காட்டியுள்ளார்.

அந்த அடையாளத்தின் பேரிலேயே போலீசார் அவர் மீது மேல் விசாரணைக்காக அழைத்துச் சென்றார்கள். அந்த சிறுமியின் பெற்றோரும் இதுகுறித்து போலீஸ் நிலையத்தில் புகாரும் அளித்துள்ளார். ஆனால் உடனடியாக அந்த புகாரை பதிவு செய்து எப்.ஐ.ஆர். போடவில்லை. ஆனால் முதல்-அமைச்சர் என்ன சொல்கிறார் என்றால் அவருக்கு தகவல் கிடைத்த உடனேயே இந்த நிகழ்வில் ஈடுபட்டுள்ள, கொடுங்குற்றத்தில் ஈடுப்பட்டுள்ள அந்த பள்ளியின் உரிமையாளரை நாங்கள் கட்சியை விட்டு நீக்கியிருக்கின்றோம், அதோடு அவர் கைது செய்யப்பட்டு உள்ளதாக ஒரு தகவலை சொல்லியிருக்கிறார்.

இது ஒரு கொடூரமான சம்பவம். இரவு 8 மணியில் இருந்து காலை 9.30 மணி வரை கிட்டத்தட்ட 13 மணி நேரம் இவரை கைது செய்யவில்லை அதற்குகாரணம் அவர் ஆளும் கட்சியைச் சேர்ந்தவர். நகர்மன்றத்தின் உறுப்பினராக இருக்கிறார். அதனால் கைது செய்யவில்லை.

இதைத்தான் சட்டமன்றத்தில் நேரமில்லா நேரத்தில் பேச எழுந்தேன். நான் பேச எழுந்தவுடன் நேரலையில் இருந்து 'கட்' செய்துவிட்டார்கள். நான் இந்த சிறுமிக்கு ஏற்பட்ட நிலைமை பற்றி அரசின் கவனத்திற்கு நேரமில்லா நேரத்தில் கொண்டு வந்து பேசியபோது நான் பேசிய பேச்சுகள் நேரலையில் வரக்கூடாது என்பதற்காக அதனை நிராகரித்து உள்ளார்கள். 'கட்' செய்துள்ளார்கள். அதனை கண்டித்துத்தான் நாங்கள் வெளிநடப்பு செய்திருக்கின்றோம்.

ஆளும் கட்சி குறித்து எந்த ஒரு தகவலை சொன்னாலும் உடனடியாக அவைக்குறிப்பில் இருந்து நீக்கி விடுகிறார்கள். இது எப்படி ஒரு ஜனநாயகமாக இருக்கும். நாடாளுமன்றத்தில் அப்படி இல்லை. நான் எம்.பி.யாகவும் இருந்தேன். அனைத்தும் பதிவாகும், அதற்கு உண்டான பதிலை அவர்கள் சொல்வார்கள்.

முதியோர்களுக்கு உதவித்தொகை நாங்கள் 90 சதவீதம் பேருக்கு வழங்கினோம். இந்த ஆட்சியாளர்கள் ஏற்கனவே கொடுக்கப்பட்டு வந்த 7½ லட்சம் பேருக்கு நிறுத்திவிட்டார்கள். இதனை அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story