குருசடை தீவுக்கு செல்ல கூடுதலாக பெரிய படகுகள் இயக்கப்படுமா?
நீண்ட நேரம் காத்திருப்பதால் குருசடை தீவுக்கு செல்ல கூடுதலாக பெரிய படகுகள் இயக்கப்படுமா? என சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்
ராமேசுவரம்,
நீண்ட நேரம் காத்திருப்பதால் குருசடை தீவுக்கு செல்ல கூடுதலாக பெரிய படகுகள் இயக்கப்படுமா? என சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்..
குருசடை தீவு
ராமேசுவரம் அருகே உள்ள பாம்பன் குந்துகால் பகுதியில் இருந்து தூத்துக்குடி இடைப்பட்ட தென்கடலான மன்னார் வளைகுடா கடல் பகுதியில் மொத்தம் 21 தீவுகள் உள்ளன. 21 தீவுகளை சுற்றியுள்ள கடல் பகுதியில் ஆமை, டால்பின், கடல் பசு உள்ளிட்ட 3,600 வகையான கடல் வாழ் உயிரினங்கள் வாழ்ந்து வருகின்றன.
தீவு பகுதிகளுக்குள் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளும் செல்ல தடை விதிக்கப்பட்டு வனத்துறை மூலம் கண்காணிக்கப்பட்டு வருகின்றன.
அதுபோல் சூழல் சார்ந்த சுற்றுலா திட்டத்தின் கீழ் பாம்பன் குந்துகால் கடற்கரையில் இருந்து குருசடை தீவு வரையிலும் சுற்றுலா படகு போக்குவரத்தும் தொடங்கி இயக்கப்பட்டு வருகின்றது.
படகு சவாரி
குந்துகால் கடற்கரையில் இருந்து குருசடைதீவு வரை சென்று வருவதற்கு நபர் ஒருவருக்கு ரூ.300 கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டு காலை 7 மணியில் இருந்து பகல் 2 மணி வரையிலும் சுற்றுலா படகானது குருசடைதீவுக்கு இயக்கப்படுகின்றது.
12 பேர் அமர்ந்து பயணம் செய்யும் வகையில் பைபர் படகு ஒன்றும், 30 பேர் அமர்ந்து பயணம் செய்யும் வகையில் பெரிய பைபர் படகு ஒன்றும் என மொத்தம் 2 படகுகள் இயக்கப்பட்டு வருகின்றன.
சுற்றுலா பயணிகள் காத்திருப்பு
இந்த நிலையில் விடுமுறை நாளான நேற்று பாம்பன் குந்துகால் கடற்கரையில் இருந்து குருசடைதீவுக்கு செல்வதற்காக சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் வந்திருந்தனர். கோவை, மதுரை உள்ளிட்ட பல ஊர்களில் இருந்தும் வந்திருந்த சுற்றுலா பயணிகள் குருசடைதீவுக்கு செல்ல அங்கிருந்த டிக்கெட் கவுண்ட்டரில் டிக்கெட் எடுத்து காத்திருந்தனர். 20-க்கும் மேற்பட்டவர்கள் காத்திருந்ததால் சிறிய படகில் அவர்கள் அழைத்து செல்லப்படவில்லை. ஏற்கனவே பெரிய படகு குருசடை தீவுக்கு சென்று விட்டதால் இவர்கள் சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக படகுசவாரி செய்வதற்காக காத்திருந்தனர்.
கூடுதல் படகுகள் இயக்க கோரிக்கை
இது குறித்து சுற்றுலா பயணிகள் கூறும் போது, நாங்கள் பெரிய படகு வரும் வரை ஒரு மணி நேரத்துக்கும் மேலாக காத்திருக்கிறோம். எங்களை சிறிய படகில் அழைத்து சென்று குருசடை தீவை சுற்றி காண்பித்து இருக்கலாம்.
இதனால் நேரம் விரயமாகி இருக்காது. எனவே கூடுதலாக பெரிய படகுகளை இயக்க வேண்டும் என்றனர். இது குறித்து படகு ஓட்டுபவர்கள் கூறும் போது, படகு சவாரிக்காக 20-க்கும் மேற்பட்டவர்கள் காத்திருக்கும் போது பெரிய படகுகளை இயக்கினால் தான் குருசடை தீவுக்கு சென்று வர டீசல் செலவு சரியாக இருக்கும். அதனால் தான் பெரிய படகு வரும் வரை சுற்றுலா பயணிகள் காத்திருக்கப்பட்டனர் என்றனர்.