அரியலூரில் இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை களைகட்டுமா?-வியாபாரிகள் கருத்து


அரியலூரில் இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை களைகட்டுமா?-வியாபாரிகள் கருத்து
x

கொரோனாவால் அரியலூரில் இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை களைகட்டுமா? என்று வியாபாரிகள் கருத்து தெரிவித்து உள்ளனர்.

அரியலூர்

அலைமோதிய கூட்டம்

தீபாவளி பண்டிகை வருகிற 24-ந்தேதி (திங்கட்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி ஜவுளி உள்ளிட்ட பொருட்கள் வாங்க விடுமுறை தினமான நேற்று அரியலூரில் உள்ள கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது. இதனால் மார்க்கெட் தெரு, எம்.பி.கோயில் தெரு, வெள்ளாழ தெரு, காந்தி மார்க்கெட், பெரிய கடை தெரு, சின்ன கடை தெரு, செந்துரை சாலை ஆகிய பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

திருச்சி, தஞ்சாவூர், பெரம்பலூர் ஆகிய ஊர்களுக்கு செல்லும் அரசு மற்றும் தனியார் பஸ்கள், கிராமங்களுக்கு செல்லும் நகர மற்றும் மினி பஸ்கள் மார்க்கெட் தெரு வழியாக செல்கின்றன. அந்த பகுதியில் மக்கள் அதிகம் கூடும் இடமாக உள்ளதால் தீபாவளி வரை ஆட்டோ, கார், கனரக வாகனங்கள் சென்று வர தற்காலிகமாக தடை விதித்து நகர போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும், மக்கள் கூட்டத்துக்குள் புகுந்து மர்ம ஆசாமிகள் திருட்டு சம்பவங்களில் ஈடுபடக்கூடும் என்பதால் போலீசார் மாற்றுடையில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். தீபாவளி விற்பனை குறித்து கடை வியாபாரிகள் கூறியதாவது:-

வாகனங்களை நிறுத்த வசதி

நகர வணிகர் சங்க தலைவர் ராமலிங்கம்:- தீபாவளி பண்டிகையையொட்டி பொருட்களை வாங்குவதற்காக அரியலூர் நகரில் பொதுமக்கள் வருகை அதிகமாக உள்ளது. எனவே அனைத்து பஸ்களும் பைபாஸ் வழியாக திருப்பி விட வேண்டும். அரசு மேல்நிலைப்பள்ளி அருகே காலியாக உள்ள பெண்கள் உயர்நிலைப்பள்ளி இடத்தை நகராட்சி நிர்வாகம் தற்காலிகமாக சுத்தம் செய்து வாகனங்கள் நிறுத்த ஏற்பாடு செய்தால் வியாபாரிகளுக்கு பெரும் உதவியாக இருக்கும்.

பட்டாசு வியாபாரி இளங்கோவன்:- பட்டாசு விலை அதிகரித்துள்ளது. நகரில் கடைகளும் அதிகமாக உள்ளன. இந்த ஆண்டு அதிகளவு பட்டாசு வாங்குவார்கள் என்று எதிர்பார்க்கிறோம்.

கொரோனா தொற்று

சாலையோர வியாபாரி ராஜ் ஏசுராஜ்:- கொரோனா தொற்று காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக வியாபாரம் சரியாக நடக்கவில்லை. இந்த ஆண்டு தீபாவளி சிறப்பாக இருக்கும் என்று நினைக்கிறோம். நாங்கள் போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல் வியாபாரம் செய்து வருகிறோம்.

பூ வியாபாரி ராணி:- 2 ஆண்டுகளாக சாலையோரம் கடை வைத்து வியாபாரம் செய்தாலும் குறைந்த அளவே விற்பனை நடந்தது. இந்த ஆண்டு ஆயுத பூஜையில் இருந்து வியாபாரம் நன்றாக உள்ளது. தற்பொழுது பூக்களின் விலை உயர்ந்து வருகிறது. இருந்த போதும் நாங்கள் போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல் வியாபாரம் செய்து வருகிறோம். தீபாவளி வரை மழை இல்லாமல் இருந்தால் நன்றாக இருக்கும்.

தலைக்கவசம்

நகர போலீஸ் இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன்:- மார்க்கெட் தெரு வழியாக வரும் அனைத்து பயணிகள் பஸ்களும் வேறு பாதையில் செல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இருசக்கர வாகனத்தில் வருபவர்கள் தலைக்கவசம் அணிந்து பாதுகாப்புடன் வர வேண்டும். தாங்கள் கொண்டுவரும் பொருட்கள், நகைகளை பத்திரமாக பார்த்துக்கொள்ள வேண்டும். பட்டாசுகளை இருசக்கர வாகனங்களை எடுத்து செல்லக்கூடாது. போக்குவரத்தை பாதிக்காத வகையில் தங்களது வாகனங்களை சாலையோரத்தில் நிறுத்த வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story