பெண்ணிடம் 5 பவுன் நகை பறிப்பு
ராமநத்தத்தில் லிப்ட் கொடுப்பது போல் நடித்து பெண்ணிடம் 5 பவுன் நகையை பறித்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராமநத்தம்,
பெரம்பலூர் மாவட்டம் திருமாந்துறையை சேர்ந்தவர் ஜெயராமன். இவரது மனைவி விஜயா (வயது 59). இவர் சென்னையில் உள்ள தனது சகோதாி வீட்டுக்கு சென்றிருந்தார். பின்னர், அங்கிருந்து, சொந்த ஊருக்கு திரும்பிய அவர், நேற்று முன்தினம் அதிகாலை ராமநத்தம் பஸ் நிலையத்துக்கு வந்தார். அப்போது, அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த 35 வயது வாலிபர், விஜயாவிடம் எங்கு செல்ல வேண்டும் என்று கேட்டார். அப்போது அவர், திருமாந்துறை செல்ல வேண்டும் என்று கூறியுள்ளார். அந்த வழியாக தான் நான் போகிறேன், என்னுடன் வாருங்கள் அங்கு விட்டுவிடுகிறேன் என்று கூறியுள்ளார். இதை நம்பி, அந்த வாலிபரின் மோட்டார் சைக்கிளில் விஜயா ஏறி சென்றார். அப்போது, திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலை வெள்ளாறு பாலம் அருகே சென்ற போது, தனது மோட்டார் சைக்கிளை நிறுத்தினார். பின்னர், விஜயா அணிந்திருந்த 5 பவுன் நகையை பறித்துக்கொண்டு, அங்கிருந்து அந்த வாலிபர் தப்பி சென்றுவிட்டார். இதுகுறித்து விஜயா அளித்த புகாரின் பேரில், ராமநத்தம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். லிப்ட் கொடுப்பது போன்று நடித்து வாலிபர் ஒருவர் நகையை பறித்து சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.