வங்கியில் புதிய கணக்கு தொடங்க குவிந்த பெண்கள்


வங்கியில் புதிய கணக்கு தொடங்க குவிந்த பெண்கள்
x

மகளிர் உரிமைத்தொகை பெறுவதற்காக ஆலங்குடியில் உள்ள மத்திய கூட்டுறவு வங்கியில் புதிய கணக்கு தொடங்க குவிந்த பெண்களால் பரபரப்பு ஏற்பட்டது.

புதுக்கோட்டை

மகளிர் உரிமைத்தொகை

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் கீழ் குடும்ப தலைவிகளுக்கு மாத மாதம் ரூ.1,000 வழங்கக்கூடிய திட்டம் வருகிற செப்டம்பர் மாதம் 15-ந் தேதி அண்ணா பிறந்தநாள் அன்று தொடங்கப்பட உள்ளது. குடும்ப தலைவிகளுக்கு ரூ.1,000 வழங்க பயனாளிகளை தேர்வு செய்ய ரேஷன் கடை ஊழியர்கள் மூலம் வீடு, வீடாக விண்ணப்ப படிவம், டோக்கன்கள் வழங்கப்பட்டு வருகிறது.

மேலும் உரிமைத்தொகை நேரடியாக பயனாளிகள் வங்கி கணக்கில் மாதாமாதம் வரவு வைக்கப்பட உள்ளது. இதனால் ரூ.1,000 பெற வேண்டும் என்றால் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் கணக்கு இருக்க வேண்டும் என்று தகவல் பரவியது.

பெண்கள் குவிந்தனர்

எனவே வங்கி கணக்கு இல்லாத குடும்பத் தலைவிகள் மற்றும் வேறு வங்கியில் கணக்கு உள்ள குடும்ப தலைவிகள் ஆலங்குடி அரசமரம் பஸ் நிறுத்தம் எதிரில் உள்ள மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி ஆலங்குடி கிளையில் புதிய வங்கி கணக்கை தொடங்க ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மற்ற வங்கிகளில் சேமிப்பு கணக்கு தொடங்க வைப்பு தொகை செலுத்த வேண்டும் என்ற நிலையில் மத்திய கூட்டுறவு வங்கி ஆலங்குடி கிளையில் வைப்புத்தொகை இல்லாமல் வங்கி கணக்கு தொடங்கப்படுவதால் குடும்ப தலைவிகள் தங்களது கணவருடன் வந்து படிவத்தை நிரப்பி வழங்கினர். இதனால் அங்கு ஆலங்குடி போலீசார் குவிக்கப்பட்டனர்.

விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்

இதுகுறித்து தகவல் அறிந்த ஆலங்குடி தாசில்தார் விஸ்வநாதன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தார். பின்னர் அங்கு குவிந்திருந்த பெண்களிடம் எந்த வங்கியில் கணக்கு வைத்திருந்தாலும் அந்த வங்கி கணக்கை கொடுத்தால் இந்த திட்டத்தின் கீழ் ரூ.1,000 கிடைக்கும் என்று தெரிவித்தார்.

இதையடுத்து சிலர் அங்கிருந்து கலைந்து சென்றனர். சில பெண்கள் புதிய வங்கி கணக்கை தொடங்க காத்து நின்றனர். மகளிர் உரிமைத்தொகை பெற பெண்கள் எந்த வங்கியில் கணக்கு இருக்க வேண்டும் என்று மாவட்ட நிர்வாகம் தெளிவுப்படுத்தி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.


Next Story