விருப்ப மனு கொடுத்தவர்களிடம் 2-வது நாளாக நேர்காணல்: மக்கள் நீதி மய்யத்துடன் கூட்டணியை உறுதி செய்த 2 கட்சிகள்


விருப்ப மனு கொடுத்தவர்களிடம் 2-வது நாளாக நேர்காணல்: மக்கள் நீதி மய்யத்துடன் கூட்டணியை உறுதி செய்த 2 கட்சிகள்
x
தினத்தந்தி 3 March 2021 4:01 AM GMT (Updated: 3 March 2021 4:01 AM GMT)

மக்கள் நீதி மய்யம் கட்சியுடன் 2 கட்சிகள் கூட்டணியை உறுதி செய்துள்ளன. தேர்தல் அறிவிப்புக்கு பிந்தைய பிரசாரத்தை கமல்ஹாசன் இன்று தொடங்குகிறார்.

சென்னை, 

தமிழகத்தில் சட்டசபை தேர்தல் வருகிற ஏப்ரல் 6-ந் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பில் போட்டியிடுவதற்கு விருப்ப மனு கொடுத்தவர்களிடம் அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தலைமையிலான வேட்பாளர் தேர்வு குழுவினர் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் நேற்று முன்தினம் முதல் நேர்காணல் நடத்தி வருகிறார்கள்.

விழுப்புரம், வேலூர், கடலூர், திருச்சி, தஞ்சாவூர், புதுக்கோட்டை, மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோரிடம் நேற்று 2-வது நாளாக நேர்காணல் நடைபெற்றது. நேர்காணலின்போது, விருப்ப மனு கொடுத்தவர்களிடம் தேர்தலுக்கான செலவு எதையும் கட்சி கொடுக்காது என்று திட்டவட்டமாக வேட்பாளர் தேர்வு குழுவினர் கூறியதாக தெரிகிறது.

கூட்டணியை உறுதி செய்த 2 கட்சிகள்

இதற்கிடையே, பா.ம.க.வில் இருந்து விலகி அனைத்து மக்கள் அரசியல் கட்சியை தொடங்கிய ராஜேஸ்வரி பிரியா நேற்று பிற்பகல் 1.30 மணியளவில் மக்கள் நீதி மய்யம் தலைமை அலுவலகத்தில், கமல்ஹாசனை நேரில் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு சுமார் 30 நிமிடங்கள் நடந்தது. சட்டசபை தேர்தலில் மக்கள் நீதி மய்யத்துடன் கூட்டணி அமைத்து போட்டியிடுவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

இதேபோல தமிழ்நாடு இளைஞர் கட்சியின் பொதுச்செயலாளர் ராஜசேகரனும் கமல்ஹாசனை சந்தித்து பேசினார். மக்கள் நீதி மய்யத்துடன் அனைத்து மக்கள் அரசியல் கட்சி, தமிழ்நாடு இளைஞர் கட்சியின் கூட்டணி உறுதி செய்யப்பட்டு உள்ளது. இந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்படும்? என்பது குறித்து இன்றோ அல்லது நாளையோ அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட உள்ளது.

கமல்ஹாசன் இன்று பிரசாரம்

ஏற்கனவே நேர்காணல் நடத்தப்பட்ட மாவட்டங்களை தவிர்த்து, பிற மாவட்டங்களில் இருந்து விருப்ப மனு கொடுத்தவர்களிடம் இன்று (புதன்கிழமை) காலையில் நேர்காணல் நடைபெற உள்ளது. இதனைத் தொடர்ந்து பிற்பகல் சென்னை ராமாவரம் எம்.ஜி.ஆர். இல்லத்தில் இருந்து கமல்ஹாசன் தனது தேர்தல் அறிவிப்புக்கு பிந்தைய பிரசாரத்தை தொடங்குகிறார். இதில் 4 இடங்களில் கமல்ஹாசன் திறந்த வேனில் நின்றவாறு மக்கள் நீதி மய்யத்துக்கு வாக்கு சேகரிக்கிறார். இதனைத் தொடர்ந்து மாலை 6 மணிக்கு மயிலாப்பூர் மாங்கொல்லையில் நடைபெறும் பொதுக்கூட்டத்திலும் கமல்ஹாசன் பேசுகிறார்.

Next Story