காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் நேர்காணல் நிறைவு


காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் நேர்காணல் நிறைவு
x
தினத்தந்தி 7 March 2021 9:50 PM GMT (Updated: 7 March 2021 9:50 PM GMT)

தமிழக சட்டமன்ற பொது தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் 6-ந்தேதி நடைபெற உள்ளது. இந்த நிலையில் காங்கிரஸ் கட்சி சார்பில் கடந்த மாதம் 25-ந்தேதி முதல் கடந்த 5-ந்தேதி வரை விருப்ப மனு பெறப்பட்டது.

சென்னை, 

தமிழக சட்டமன்ற பொது தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் 6-ந்தேதி நடைபெற உள்ளது. இந்த நிலையில் காங்கிரஸ் கட்சி சார்பில் கடந்த மாதம் 25-ந்தேதி முதல் கடந்த 5-ந்தேதி வரை விருப்ப மனு பெறப்பட்டது. இதில் தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளுக்கு 1,800-க்கும் மேற்பட்டவர்கள் விருப்ப மனு அளித்துள்ளனர்.

இதைத்தொடர்ந்து விருப்ப மனு அளித்தவர்களிடம், நேர்காணல் நேற்று முன்தினம் (சனிக்கிழமை) தொடங்கியது. சென்னை ராயப்பேட்டையில் உள்ள சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்ற இந்த வேட்பாளர் நேர்காணலில், விருப்ப மனு அளித்தவர்களை நேர்காணல் செய்ய முன்னாள் தலைவர்கள், எம்.பி.க்கள் உள்ளிட்ட 30 பேர் அடங்கிய 5 குழுக்கள் அமைக்கப்பட்டது.

முதல் நாளான நேற்று முன்தினம் 1,300-க்கும் மேற்பட்டவர்களுடன் இந்த குழுக்கள் நேர்காணல் செய்திருந்தனர்.

இந்த நிலையில் இரண்டாம் மற்றும் இறுதி நாளான நேற்று விருப்ப மனு அளித்த 500-க்கும் மேற்பட்டவர்களிடம் நேர்காணல் நடத்தப்பட்டு, வேட்பாளர் நேர்காணல் நிறைவடைந்தது. இந்த நேர்காணல் தொடர்பான விவரங்கள் கட்சி தலைமைக்கு தெரிவிக்கப்பட்டு, காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் பட்டியல் ஓரிரு நாட்களுக்குள் அதிகாரப்பூர்வமாக வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று காலை காங்கிரஸ்-தி.மு.க. இடையே தொகுதி பங்கீடு ஏற்பட்டு இருதரப்பினரும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். இதை கொண்டாடும் விதமாக சத்தியமூர்த்தி பவனில் தொண்டர்கள் இனிப்புகள் வழங்கினர்.

Next Story