சென்னை-சேலம் 8 வழிச்சாலை திட்டம் நிறைவேற்றப்படாது; தி.மு.க. தேர்தல் அறிக்கையில் திருத்தங்கள்


சென்னை-சேலம் 8 வழிச்சாலை திட்டம் நிறைவேற்றப்படாது; தி.மு.க. தேர்தல் அறிக்கையில் திருத்தங்கள்
x
தினத்தந்தி 14 March 2021 5:55 AM GMT (Updated: 2021-03-14T12:45:38+05:30)

தி.மு.க. தேர்தல் அறிக்கையில், சென்னை-சேலம் 8 வழிச்சாலை திட்டம் நிறைவேற்றப்படாது உள்பட 3 திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன.

சென்னை,

தமிழக சட்டசபை தேர்தலை முன்னிட்டு சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. தேர்தல் அறிக்கையை கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்டார்.

அப்போது பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு, துணை பொதுச்செயலாளர்கள் பொன்முடி, ஆ.ராசா, சுப்புலெட்சுமி ஜெகதீசன், மகளிர் அணி செயலாளர் கனிமொழி எம்.பி., திருச்சி சிவா எம்.பி. ஆகியோர் உடன் இருந்தனர்.

மு.க.ஸ்டாலின் வெளியிட்ட தி.மு.க. தேர்தல் அறிக்கையில் 505 அறிவிப்புகள் இடம் பெற்றுள்ளன.

அவற்றில் இடம்பெற்றுள்ள முக்கிய அறிவிப்புகள் வருமாறு:-

* அரசியலமைப்பு சட்டத்தில் பொதுப்பட்டியலில் உள்ள கல்வித்துறையை மீண்டும் மாநில அரசு பட்டியலில் இடம் பெற செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்படும். தமிழகத்திற்கென தனியே மாநில கல்வி கொள்கை உருவாக்கப்படும். இதற்கென கல்வியாளர்களை உள்ளடக்கிய உயர்நிலைக்குழு அமைக்கப்பட்டு உரிய பரிந்துரைகள் அடிப்படையில் இந்த கொள்கை உருவாக்கப்படும்.

* மத்திய அரசு பணிகளுக்கும், மத்திய பணியாளர் தேர்வு வாரியம் உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் நடைபெறும் பணியாளர் தேர்வுகளுக்கும் தமிழ் உள்ளிட்ட அந்தந்த மாநிலங்களின் ஆட்சி மொழிகளாக உள்ள மொழிகளையும் இணைத்து எழுத்து மற்றும் நேர்முகத் தேர்வுகளை நடத்த வேண்டும் என்று தி.மு.க. வலியுறுத்தும்.

திருக்குறள் தேசிய நூலாக அறிவிக்க வலியுறுத்தல்

* தமிழகத்தில் உள்ள மத்திய அரசு அலுவலகங்கள், நிறுவனங்கள், தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் அனைத்தும் தமிழிலும் செயல்பட வேண்டும். இதற்காக இந்திய அரசியலமைப்பு சட்டம் 343-வது பிரிவில் உரிய சட்டத்திருத்தம் கொண்டுவர வேண்டும் என்றும் மத்திய அரசை, தி.மு.க. தொடர்ந்து வலியுறுத்தும்.

* மேல்முறையீட்டு நீதிமன்றங்களை உடனடியாக அமைத்திட மத்திய அரசை தி.மு.க. வலியுறுத்தும். தெற்கு மண்டலத்துக்கான மேல்முறையீட்டு நீதிமன்றத்தை தமிழகத்தில் அமைக்குமாறும் வலியுறுத்தும். தமிழை, சென்னை ஐகோர்ட்டின் வழக்காடு மொழியாக ஏற்கவேண்டும் என தி.மு.க., மத்திய அரசை தொடர்ந்து வலியுறுத்தும்.

* செம்மொழி தமிழுக்கு மேலும் சிறப்பு சேர்க்கும் வகையில் உலகப் பொதுமறையான திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க வேண்டும் என்று மத்திய அரசை தொடர்ந்து, தி.மு.க. வலியுறுத்தும்.

* உலக புகழ்பெற்ற பிறமொழி நூல்கள் தமிழில் மொழி பெயர்க்கப்பட்டு அச்சிட்டு வெளியிடப்படும். இதைப்போலவே மிகச்சிறந்த தமிழ் நூல்கள் உலக மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டு தமிழ், தமிழர்களின் பெருமை உலக அளவில் பெருகி பரவிட அச்சு மற்றும் இணையதள வசதிகளை பயன்படுத்த ஆவன செய்யப்படும். எழுத்து வடிவம் சிதைந்திடா வகையில் 
பின்பற்றப்படும் தூய தமிழ் வரிவடிவத்தை மட்டுமே எல்லா இடங்களிலும் கண்டிப்பாக பயன்படுத்திட வேண்டும் என உரிய சட்டம் இயற்றி அரசு ஆணை வெளியிட்டு நடைமுறைக்கு கொண்டுவரப்படும்.

* ஒவ்வொரு துறையிலும், அலுவலகத்திலும் தமிழ் மொழி அலுவலக பயன்பாட்டில் உறுதி செய்வதற்கும், மேம்படுத்துவதற்கும் தமிழ் அலுவல் மொழி வளர்ச்சிப் பிரிவு அமைக்கப்படும்.

* இலங்கையில் நடைபெற்ற மனித உரிமை மிறல்கள், போர்க் குற்றங்கள், இனப்படுகொலை ஆகியவை குறித்து சர்வதேச விசாரணையை மேற்கொள்ள இந்திய அரசு உலக நாடுகளை வலியுறுத்திச் செயல்படுத்தவேண்டும் என தி.மு.க. வலியுறுத்தும். இலங்கையில் புதிதாக உருவாக உள்ள அரசியல் அமைப்பு சட்டத்தில் முழுமையான அதிகாரங்கள், தமிழர்களுக்கு கிடைத்திடும் வகையில் சட்டப் பிரிவுகளை உருவாக்கவும் இலங்கை அரசை நிர்ப்பந்திக்க வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்துவோம்.

* வெளிநாடு வாழ் தமிழர்கள் நலனுக்காக தமிழக அரசில் வெளிநாடு வாழ் தமிழர்கள் துறை என்ற புதிய துறை உருவாக்கப்படும்.

* லோக் ஆயுக்தா முறையாகவும், முழுமையாகவும் செயல்பட தேவையான நடவடிக்கைகளை தி.மு.க. அரசு உடனடியாக மேற்கொள்ளும்.

* பொதுமக்களுக்கு அரசிடம் இருந்து கிடைக்கவேண்டிய சாதி சான்றிதழ், பிறப்பு, இறப்பு சான்றிதழ், வருவாய் சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ், ஓய்வூதிய பலன்கள், பொது வினியோக திட்டப் பலன்கள் உள்ளிட்டவற்றை விண்ணப்பித்தபின் குறிப்பிட்ட நாட்களுக்குள் பெறுவதை உறுதி செய்யும் வகையில் சேவை உரிமைச் சட்டம் நிறைவேற்றப்படும்.

* ஊழல் செய்பவர்கள் மீது சட்ட விதிமுறைகளின்படி நடவடிக்கை எடுக்கவும் தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்படும். தி.மு.க. ஆட்சி அமைந்த உடன் ஊழல் புகார்களுக்கு ஆளாகி இருக்கும் அ.தி.மு.க. அமைச்சர்கள் மீதான புகார்களை விசாரித்து நடவடிக்கை மேற்கொள்ள தனி நீதிமன்றங்கள் அமைக்கப்படும்.

* முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் இறப்பில் உள்ள மர்ம மரணம் குறித்து தி.மு.க. ஆட்சியில் முறையான விசாரணை நடத்தப்பட்டு தவறு இழைத்தவர் எவராக இருந்தாலும் அவர் உரிய சட்ட நடவடிக்கைக்கு உள்ளாக்கப்படுவார்.

* எம்.எல்.ஏ.க்கள் தங்கள் வலைதளத்தில் தொகுதிவாழ் மக்களிடம் இருந்து பெறப்பட்ட மனுக்கள் ஒவ்வொன்றின் மீதும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளின் விவரங்களை பதிவிடவேண்டும். இதற்கு ஏதுவாக ஒவ்வொரு எம்.எல்.ஏ. அலுவலகத்திலும் 2 கணினி அலுவலர்கள் சட்டப்பேரவை செயலகத்தால் நியமிக்கப்படுவார்கள்.

* அமைச்சர்கள், அதிகாரிகள் ஆகியோரின் தேவையற்ற செலவுகள், பயணங்கள் ஆகியவை தவிர்க்கப்பட்டு அதன்மூலம் செலவினங்கள் கட்டுப்படுத்தப்படும்.

* தமிழகத்தின் கடன் சுமை ரூ.9 லட்சம் கோடி அளவில் உள்ளது. இந்த கடன் சுமையை இறக்குவதற்கும், மாநிலத்தின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கும் தேவையான, நடவடிக்கைகளை அரசுக்கு பரிந்துரைக்க உயர்நிலைக் குழு அமைக்கப்படும். குழுவின் அறிவுரைகள் உரிய ஆய்வு செய்யப்பட்டு, அரசு முடிவுகளை விரைந்து எடுக்கும்.

* அரசு பொதுத்துறை நிறுவனங்களை தொழில்நுட்ப ரீதியாகவும், மேலாண்மை அடிப்படையிலும் நவீன மயமாக்குவதற்கும், பொருட்களையும், சேவைகளையும் திறம்பட சந்தைப்படுத்துவதற்கும் உயர்நிலை வல்லுநர் குழு அமைக்கப்படும். இந்த குழுவின் அறிவுரைகள் 3 மாதங்களுக்குள் பெறப்பட்டு அவற்றின் மீது உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

* மாநில அரசு நடத்தி வரும் மருத்துவ கல்லூரிகளில் உள்ள மொத்த இடங்களையும் மாநில தொகுப்புக்கே கொண்டுவர தி.மு.க. அரசு தீவிரமான நடவடிக்கைகளை மேற்கொள்ளும்.

* அனைத்து அரசு பள்ளி மற்றும் கல்லூரிகளில் பயிலும் மாணவிகளுக்கு சானிட்டரி நாப்கின்கள் இலவசமாக வழங்குவதற்கு தானியங்கி எந்திரங்கள் அமைக்கப்படும். அரசு உதவி பெறும் பள்ளி மற்றும் கல்லூரிகளிலும் இந்த வசதி செய்து தரப்படும்.

* தமிழகத்தில் மேல்நிலைப்பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்கு பயன்படும் வகையில் 4-ம் தலைமுறை, 5-ம் தலைமுறை (4ஜி, 5 ஜி) மாதம் 10 ஜி.பி. பதிவிறக்கம் செய்யும் வசதியுடன் கூடிய இணையதள இணைப்புடன் ‘டேப்லெட்' அரசு செலவில் வழங்கப்படும். அனைத்து கல்வி நிலையங்களிலும் வைபை வசதி செய்து தரப்படும்.

* தமிழக மாணவர்கள் ஐ.ஐ.டி., என்.ஐ.டி., எய்ம்ஸ், ஐ.ஐ.எம். போன்ற உயர் கல்வி நிறுவனங்களில் சேருவதற்கான நுழைவுத்தேர்வுகளில் அதிக அளவு வெற்றி பெற அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் அரசின் சார்பில் உயர்சிறப்பு பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும்.

* ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.எப்.எஸ்., ஐ.ஆர்.எஸ். போன்ற தேர்வுகளுக்கும், தமிழக அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் தேர்வுகளுக்கும் ரெயில்வே மற்றும் வங்கிகளால் நடத்தப்படும் போட்டித் தேர்வுகளுக்கும் பயிற்சிகள் அளிப்பதற்கான மையங்கள் சென்னை, மதுரை, திருச்சி, கோவை, சேலம், நெல்லை ஆகிய நகரங்களில் தொடங்கப்படும்.

* அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு காலை வேளையில் பால் வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்படும்.

* 2013-ம் ஆண்டு முதல் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் நடத்தப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வில் கலந்துகொண்டு தேர்ச்சி பெற்று இன்னும் வேலை வாய்ப்பினை பெறாத இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

* குடும்பத்தில் முதல் தலைமுறை பட்டம் பெற்ற ஒருவருக்கு அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்கப்படும்.

* தமிழக இளைஞர்களின் எதிர்காலத்தை கருத்தில்கொண்டு 2020-21 முதல் ஒவ்வொரு ஆண்டும் 10 லட்சம் வேலைவாய்ப்புகள் என்ற அளவில் 2025-26 வரை 50 லட்சம் வேலைவாய்ப்புகளை தமிழக படித்த இளைஞர்களுக்கு வழங்க தீவிர முயற்சிகள் மேற்கொள்ளும். இந்த மாபெரும் திட்டத்தை திறம்பட நிறைவேற்ற மாநில திறன் பயிற்சி மற்றும் வேலைவாய்ப்பு உருவாக்க அமைப்பு எனப்படும் நிறுவனம் உருவாக்கப்படும்.

* தமிழகம் முழுவதும் உள்ள அரசு அலுவலகங்களில் காலியாக உள்ள பணியிடங்களில் 3 லட்சத்து 50 ஆயிரம் தமிழக இளைஞர்கள் நியமிக்கப்படுவார்கள்.

* கொரோனா தொற்றின் காரணமாக ஆயிரக்கணக்கான தொழிற்சாலைகள் இயங்கமுடியாத நிலை ஏற்பட்டு, வேலை இழப்பும், பொருளாதார சரிவும் உண்டானது. தொழிற்சாலைகளை மீண்டும் இயங்க வைக்கவும், அங்கேயே பணியாற்றிய தொழிலாளர்கள் மீண்டும் வேலை பெறவும், இந்த நிறுவனங்களுக்கு கடன் உதவி செய்வதற்கென்று ரூ.15 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.

* தமிழகத்தில் அமைந்துள்ள தொழில் நிறுவனங்களில் 75 சதவீதம் வேலைவாய்ப்புகளை தமிழர்களுக்கே வழங்க சட்டம் இயற்றப்படும்.

* 12-ம் வகுப்பு மற்றும் தொழிற்கல்வி அடிப்படையில் தகுதியானவர், வேலைவாய்ப்பற்ற 40 வயதுக்கு உட்பட்ட இளைஞர்கள் குறைந்தபட்சம் 15 பேர் அடங்கிய இளைஞர் சுய முன்னேற்ற குழுக்கள் உருவாக்கப்பட்டு, அந்த குழுவினர் தொடங்க முன்வரும் சிறு, குறு தொழில்களுக்கு தேவையான முதலீட்டில் குழுக்கள் 10 சதவீதம் தொகையை செலுத்தினால் அரசு 25 சதவீத மானியமாக கொடுத்து, மீதி தொகையை வங்கி கடனாக பெற்றுத்தரும். இந்த திட்டத்தின் கீழ் ஒரு லட்சம் இளைஞர்கள் பயன் பெறுவர்.

* நாமக்கல்லில் குளிரூட்டப்பட்ட முட்டை சேமிப்பு கிடங்கு வசதிகள் அமைத்து முட்டை உற்பத்தியாளர்கள் இழப்பில் இருந்து விடுபட வழி காணப்படும்.

* மாதம் ஒரு முறை மின் உபயோகம் கணக்கிடும் முறை கொண்டுவரப்படும்.

* உடன்குடி மின் திட்டத்தையும், செய்யூர் அனல்மின் நிலைய திட்டத்தையும் சிக்கல்களை அகற்றி மீண்டும் உடனடியாக செயல்படுத்த போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும்.

* சூரிய ஒளி, காற்றாலை போன்ற மாசற்ற மின் உற்பத்தி நிலையஙு்களை அமைத்து, அவற்றின் மூலம் 20 ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி செய்து மக்களுக்கு குறைந்த விலையில் மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

* ரேஷன் கடைகளில் மாதந்தோறும் ஒரு கிலோ சர்க்கரை கூடுதலாக வழங்கப்படும். உளுந்தம் பருப்பு மீண்டும் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும்.

* மாமல்லபுரம், குற்றாலம், உதகமண்டலம், கொடைக்கானல், கன்னியாகுமரி, திருவரங்கம், செஞ்சி, ராமேஸ்வரம், மதுரை, நாகை, தரங்கம்பாடி, ஏற்காடு, ஏலகிரி உள்ளிட்ட பல்வேறு சிறப்பு வாய்ந்த சுற்றுலா நகர்களில் அடிப்படை கட்டமைப்பு வசதிகள் உருவாக்கப்படும்.

* அரசு பணிகளுக்கு செல்லும் பெண்களுக்கு பேறுகால விடுமுறையை 12 மாதங்களாக உயர்த்தி வழங்கப்படும்.

* அரசு வேலைவாய்ப்புகளில் பெண்களுக்கு 40 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படும்.

* பேறுகாலத்தில் மகளிர் உடல்நலம் பேணுவதற்காக 8 மாதத்துக்கு, மாதம் ரூ.3 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.24 ஆயிரமாக வழங்கப்படும்.

* மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதி உதவித்திட்டத்தின் கீழ் 10-ம் வகுப்பு வரை படித்த பெண்களுக்கு திருமண உதவித்தொகை ரூ.30 ஆயிரமாக உயர்த்தப்படும். அதோடு தாலிக்கு 8 கிராம் தங்கமும் வழங்கப்படும். பட்டப்படிப்பு படித்த மற்றும் பட்டய படிப்பு படித்த பெண்களுக்கு திருமண உதவித்தொகை ரூ.60 ஆயிரமாக உயர்த்தப்படும். அதோடு தாலிக்கு 8 கிராம் தங்கமும் வழங்கப்படும்.

* டாக்டர் தருமாம்பாள் அம்மையார் நினைவு விதவை மறுமண நிதி உதவித்திட்டத்தின் கீழ் தற்போது வழங்கப்படும் ரூ.25 ஆயிரம் என்பது ரூ.30 ஆயிரமாக உயர்த்தப்படும். அதோடு தாலிக்கு 8 கிராம் தங்கமும் வழங்கப்படும்.

* பட்டப்படிப்பு படித்த மற்றும் பட்டய படிப்பு படித்த விதவை பெண்களுக்கு திருமண உதவித்தொகையாக தற்போது வழங்கப்படும் ரூ.50 ஆயிரம் என்பது ரூ.60 ஆயிரமாக உயர்த்தப்படும். அதோடு தாலிக்கு 8 கிராம் தங்கமும் வழங்கப்படும்.

* மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு வழங்கப்பட்டு நிலுவையில் உள்ள கூட்டுறவு வங்கி கடன் தொகைகள் தள்ளுபடி செய்யப்படும்.

* வாரம் ஒரு நாள் அனைத்து தூய்மை பணியாளர்களுக்கும் விடுமுறை அளிக்கப்படும்.

* புதிய ஓய்வூதிய திட்டம் கைவிடப்பட்டு, பழைய ஓய்வூதிய திட்டம் மீண்டும் நடைமுறைக்கு கொண்டுவரப்படும்.

* இறக்குமதி செய்யப்பட்ட பட்டாசுகளின் விற்பனையை தமிழகத்தில் தடை செய்ய தேவையான முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.

* பெண் சிசு கொலைகளை தடுக்க கடுமையான சட்டங்கள் நிறைவேற்றப்பட்டு பெண் சிசு கொலை முற்றிலும் தடுக்கப்படும்.

* வாழ்க்கைக்கு தேவையான வருமானத்தை ஈட்ட முடியாத திருநங்கைகளுக்கு வழங்கப்படும் ஓய்வூதியம் ஆயிரம் ரூபாயில் இருந்து, ரூ.1,500 ஆக அதிகரிக்கப்படும்.

* ஏழை மக்களுக்கு மிக குறைந்த விலையில் உணவு வழங்கவேண்டும் என்ற நோக்கத்தில் 'கலைஞர் உணவகம்' அறிமுக்கப்படுத்தப்படும். முதல் கட்டமாக 'கலைஞர் உணவகம்' தமிழகம் முழுவதும் 500 இடங்களில் அமைக்கப்படும்.

* நீலகிரி, கொடைக்கானல் உள்ளிட்ட மலைநகரங்களில் பல்நோக்கு மருத்துவமனைகள் அமைக்கப்படும்.

* தாம்பரம், சோழிங்கநல்லூர், மதுரவாயல் ஆகிய 3 இடங்களில் நவீன வசதிகளுடன் கூடிய புதிய அரசு மருத்துவமனைகள் கட்டப்படும்.

* ஜல்லிக்கட்டு காளைகளை வளர்ப்பவர்களுக்கு ஊக்கத்தொகையாக மாதந்தோறும் ரூ.1,000 வழங்கப்படும்.

* தமிழகத்தில் மீண்டும் சட்டமன்ற மேலவையை விரைவில் கொண்டுவர உரிய அரசியல் சட்ட திருத்தம் செய்ய வலியுறுத்துவோம்.

* தமிழக சட்டப்பேரவை நிகழ்ச்சிகள் தொலைக்காட்சிகளில் நேரடியாக ஒளிபரப்பப்படும்.

* உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற தலைப்பில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் மாவட்டந்தோறும் பொதுமக்களின் அன்றாட பிரச்சினைகள் குறித்த மனுக்களை பெற்று தி.மு.க. ஆட்சிக்கு வந்த 100 நாட்களுக்குள் அந்த மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு தீர்வு காணப்படும் என வாக்குறுதி அளித்துள்ளார். அந்த வாக்குறுதி அடிப்படையில் தி.மு.க. அரசு அமைந்த உடன் இதற்கென ஒரு தனித்துறை முதல்-அமைச்சரின் நேரடி கட்டுப்பாட்டில் உருவாக்கப்படும். பெறப்பட்டுள்ள மனுக்களை ஆய்வு செய்ய, தொகுதி அளவில், ஊராட்சி அளவில் முகாம்கள் அமைத்து இந்த பிரச்சினைகள் 
குறித்து நேரடியாக விசாரணை நடத்தி நிறைவேற்றி தரப்படும்.

* காஞ்சீபுரம், தாம்பரம், கடலூர், திருவண்ணாமலை, கும்பகோணம், தேனி-பெரியகுளம்-அல்லிநகரம், கரூர், நாமக்கல், காரைக்குடி, புதுக்கோட்டை, விருதுநகர் ஆகிய நகராட்சிகள் மாநகராட்சிகளாக தரம் 
உயர்த்தப்படும்.

* அனைத்து போலீசாருக்கும் வாரத்தில் ஒரு நாள் விடுமுறை வழங்கப்படும்.

* கொரோனாவால் பாதிக்கப்பட்ட பொருளாதாரம் மேம்படுத்தப்படும் வரையில், சொத்து வரி அதிகரிக்கப்படாது.

* கொரோனா கொடுந்தொற்று காலத்தில் வாழ்வாதாரம் இழந்து தவித்த அரிசி அட்டை வைத்துள்ள குடும்பங்களுக்கு நிவாரணத்தொகையாக ரூ.4 ஆயிரம் வழங்கப்படும்.

* சட்டம் ஒழுங்கை காக்கும் பணியின் போது உயிரிழந்த காவலர் குடும்பத்துக்கு ஒரு கோடி ரூபாய் வழங்கப்படும்.

* குடிசைகளே இல்லாத தமிழகம் உருவாக்க ‘கலைஞர் சிறப்பு வீட்டு வசதித் திட்டம்' கொண்டு வரப்படும்.

* நகர்ப்புறங்களில் ஆட்சேபனை இல்லாத இடங்களில் குடியிருப்போருக்கு வீட்டு மனைப் பட்டா வழங்கப்படும்.

* சென்னை உள்ளிட்ட மாநகராட்சிகளில், லாரிகள் மூலமாக நீர் வழங்குவதை தவிர்க்க, குழாய் மூலம் குடிநீர் வழங்கப்படும்.

* முக்கியமான மலைக்கோவில்கள் அனைத்திலும் கேபிள் கார் வசதி ஏற்படுத்தித் தரப்படும்.

* இந்து ஆலயங்கள் புனரமைப்பு, குடமுழுக்கு பணிக்கு ரூ.1,000 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.

* மசூதி, தேவாலயங்களை சீரமைக்க ரூ.200 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.

* 60 வயதுக்கு மேற்பட்ட முதியோர் உதவித்தொகை ரூ.1,500 ஆக உயர்த்தப்படும்.

* நடைபாதைவாசிகளுக்கு இரவு நேர காப்பகங்கள் அமைக்கப்படும்.

* கலைஞர் காப்பீட்டு திட்டமும், வருமுன் காப்போம் திட்டமும் மேம்படுத்தப்படும்.

* தமிழக ஆறுகள் அனைத்தும் மாசு அடையாமல் காக்க தமிழ்நாடு ஆறுகள் பாதுகாப்பு திட்டம் உருவாக்கப்படும்.

* கொரோனா தொற்று தாக்கி உயிரிழந்த மருத்துவர்கள், அரசு அலுவர்கள், முன்கள பணியாளர்கள் குடும்பத்துக்கு உரிய இழப்பீடு வழங்கப்படும்.

* பணிக்காலத்தில் இறக்கும் அரசு ஊழியர், ஆசிரியர் குடும்பத்துக்கு வழங்கப்படும் நிதி, ரூ.3 லட்சம் என்பது ரூ.5 லட்சம் ஆக்கப்படும்.

* வேலையில்லா பட்டதாரிகள் குறுந்தொழில் தொடங்க 20 லட்சம் வரை கடன் வசதி வழங்கப்படும்.

* நெல் குவிண்டால் ஒன்றுக்கு குறைந்தபட்ச ஆதார விலை ரூ.2,500 ஆக உயர்த்தி வழங்கப்படும்.

* கரும்புக்கு ஆதார விலை டன் ஒன்றுக்கு ரூ.4,000 ஆக உயர்த்தி வழங்கப்படும்.

* புகழ்பெற்ற இந்து கோவில்களுக்கு ஆன்மிக சுற்றுலா செல்ல 1 லட்சம் பேருக்கு தலா 25 ஆயிரம் வழங்கப்படும்.

* சென்னை சிறுசேரி பகுதியில் நவீன பஸ் நிலையம் அமைக்கப்படும்.

* கூட்டுறவு வங்கிகளில் 5 பவுனுக்கு உட்பட்ட நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும்.

* அரசு நகர பஸ்களில் பெண்களுக்கு கட்டணமில்லா பயண வசதி வழங்கப்படும்.

* திரிசூலம் முதல் வண்டலூர் வரையிலும், திருமங்கலம்-முகப்பேர்-அம்பத்தூர் வரையிலும், கத்திப்பாரா முதல் பூந்தமல்லி வரையிலும் மெட்ரோ ரெயில் திட்டம் விரிவுபடுத்தப்படும். மேலும் கோவை, மதுரை, திருச்சி, சேலம், திருநெல்வேலி ஆகிய நகரங்களிலும் மெட்ரோ ரெயில் திட்டம் நிறைவேற்றப்படும்.

* ராஜீவ்காந்தி கொலையில் தண்டிக்கப்பட்டு 30 ஆண்டுகளாக ஆயுள் தண்டனை அனுபவித்து சிறையில் வாடும் பேரறிவாளன் உள்பட 7 பேரும் மனிதாபிமான அடிப்படையில் விடுதலை பெற அனைத்து முயற்சிகளையும் தி.மு.க. அரசு முழு முனைப்புடன் மேற்கொள்ளும்.

* ஏழை, நடுத்தர வர்க்க மக்களுடைய சுமையினை குறைக்கும் வகையில் மாதந்தோறும் ஒவ்வொரு குடும்ப அட்டைதாரருக்கும் (ஒரு சிலிண்டருக்கு மட்டும்) எரிவாயு மானியம் ரூ.100 வழங்கப்படும்.

* பெட்ரோல், டீசல் விலைகள் கொரோனா காலத்திலும், அண்மையிலும் கடுமையான வரி உயர்வுகள் காரணமாக முன்பு இல்லாத அளவுக்கு உயர்த்தப்பட்டுள்ளன. அனைத்து தரப்பு மக்களின் நலனை கருத்தில்கொண்டு பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.5-ம், டீசல் விலை லிட்டருக்கு ரூ.4-ம் குறைக்கப்படும்.

* ஆவின் பாலின் விலை லிட்டருக்கு ரூ.3 குறைக்கப்படும்.

* 3 வேளாண் சட்டங்களையும் திரும்பப்பெற தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி, அவற்றை ரத்து செய்ய மத்திய அரசு சட்டம் இயற்றவேண்டும் என வலியுறுத்தப்படும்.

* சிறு, குறு விவசாயிகளின் கடன்கள் முறையாக நிதி ஒதுக்கி முழுவதுமாக தள்ளுபடி செய்யப்படும்.

* நம்மாழ்வார் பெயரில் இயற்கை வேளாண்மை ஆய்வு மையம் தொடங்கப்படும்.

* மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் வேலை நாட்களின் எண்ணிக்கை 100-ல் இருந்து 150 ஆக அதிகரிக்கப்படும். தினக்கூலி ரூ.300 ஆக உயர்த்தி வழங்கப்படும்.

* மின் இணைப்பு கோரி விண்ணப்பித்த விவசாயிகள் அனைவருக்கும் தடையின்றி இலவச மும்முனை மின் இணைப்பு வழங்கப்படும்.

* 3 ஏக்கர் வரை நிலம் வைத்திருக்கும் மின் மோட்டார் வசதி இல்லாத விவசாயிகளுக்கு புதிய மின் மோட்டார் வாங்கும்போது ரூ.10 ஆயிரம் வரை மானியம் வழங்கப்படும்.

* கிருஷ்ணகிரி மாவட்டம் ஜூனூரில் தோட்டக்கலை பல்கலைக்கழகம் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

* மதுரையில் வேளாண் பல்கலைக்கழகம் அமைக்கப்படும்.

* அரசின் நியாய விலை கடைகளில் மற்ற பொருட்களுடன் பனை வெல்லமும் குடும்ப அட்டைதாரர்களுக்கு விற்பனை செய்யப்படும்.

* ஈரோட்டில் மஞ்சள் ஆராய்ச்சி நிலையம் அமைக்கப்படும்.

* காவிரி-குண்டாறு இணைப்பு திட்டத்தை தி.மு.க. அரசு விரைந்து நிறைவேற்றி பாசன வசதியும், குடிநீரும் கிடைத்து வறண்ட பகுதிகள் பயன்பெறச்செய்யும்.

* தாமிரபரணி-கருமேனி-நம்பியாறு இணைப்பு திட்டத்தை அமைய உள்ள தி.மு.க. அரசு முன்னுரிமை அளித்து நிறைவேற்றி நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களின் வறண்ட பகுதிகளை வளப்படுத்தும்.

* ரூ.2 ஆயிரம் கோடி செலவில் 200 தடுப்பணைகள் கட்டப்படும்.

* நொய்யல் ஆறு சீர்ப்படுத்தப்பட்டு, பவானி-நொய்யலாறு-அமராவதியாறு இணைப்பு திட்டம் செயல்படுத்தப்படும்.

தி.மு.க. வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் மேற்கண்ட முக்கிய அம்சங்கள் இடம் பெற்றுள்ளன.  இந்நிலையில், தி.மு.க. தலைவர் ஸ்டாலின், தேர்தல் அறிக்கையில் சில திருத்தங்கள் செய்யப்பட்டு உள்ளன என இன்று தெரிவித்து உள்ளார்.  தேர்தல் அறிக்கையில் 3 வாக்குறுதிகள் புதிதாக சேர்க்கப்பட்டு உள்ளன.  இதன்படி,

* சென்னை - சேலம் 8 வழிச்சாலை திட்டம் நிறைவேற்றப்படாது என வாக்குறுதி 43ல் சேர்க்கப்படுகிறது.

* சுற்றுசூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு அறிக்கை நிராகரிக்கப்படும்.

* காட்டுப்பள்ளி துறைமுகம் அமைக்க அனுமதிக்கப்படாது என்று தேர்தல் அறிக்கையில் மேற்கொள்ளப்பட் திருத்தங்களை பற்றி தெரிவித்து உள்ளார்.

Next Story