‘தேர்தல் தோல்வி பயத்தால் என்னை கொல்ல சதி’ அமைச்சர் கடம்பூர் ராஜூ பரபரப்பு பேட்டி
தேர்தல் பிரசாரம் செய்த அமைச்சர் கடம்பூர் ராஜூவின் கார் அருகே பட்டாசு வெடித்ததால் பரபரப்பு நிலவியது. ‘‘தேர்தல் தோல்வி பயத்தால் என்னை கொல்ல சதி செய்கின்றனர்’’ என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறினார்.
கோவில்பட்டி,
கோவில்பட்டி தொகுதி அ.தி.மு.க. வேட்பாளரான அமைச்சர் கடம்பூர் ராஜூ நேற்று முன்தினம் இரவில் கோவில்பட்டி ராஜீவ் நகரில் பிரசாரம் மேற்கொண்டு விட்டு, அன்னை தெரசா நகரில் வாக்கு சேகரிக்க காரில் சென்றார்.
அங்கு் அ.ம.மு.க. வேட்பாளரை ஆதரித்து, அக்கட்சியினர் வாக்கு சேகரித்து கொண்டிருந்தனர். எனவே, அமைச்சர் கடம்பூர் ராஜூ பிரசாரம் செய்யாமல், காரில் திரும்பி செல்ல முயன்றார்.
அப்போது அமைச்சரின் காரின் அருகில் திடீரென்று சரவெடி பட்டாசு நீண்ட நேரம் வெடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த நிலையில் அமைச்சர் கடம்பூர் ராஜூ நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-
சட்டம்-ஒழுங்கை பாதுகாக்க...
கோவில்பட்டி அன்னை தெரசா நகரில் அ.ம.மு.க.வினர் பிரசாரம் செய்து கொண்டிருந்ததால், சட்டம்-ஒழுங்கை பாதுகாக்க வேண்டும் என்பதற்காக, எனது பிரசாரத்தை ரத்து செய்து விட்டு காரில் திரும்பி சென்று கொண்டிருந்தேன்.
ஆனால், அ.ம.மு.க. வினர் எனது காரை வழிமறித்தனர். நான் எனது டிரைவரிடம் காரை அப்படியே நிறுத்திவிடு, அந்த வாகனங்கள் சென்றவுடன் செல்லலாம் என்று கூறினேன்.
கொலை செய்ய சதி
அப்போது அ.ம.மு.க.வினர் எனது கார் மீது 5 ஆயிரம் வாலா பட்டாசு சரவெடியை தீப்பற்ற வைத்து எறிந்தனர். சில நிமிடங்கள் அந்த பட்டாசு வெடித்து கொண்டிருந்தது. அப்போது காரிலும் தீப்பற்றும் நிலையில், காருக்குள் இருந்தேன். கார் தீப்பற்றி இருந்தால் எனது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டிருக்கலாம்.
இதைக்கண்டு நான் அஞ்சப்போவதில்லை. எனக்கு மக்கள் ஆதரவு இருக்கிறது. என்னுடைய தேர்தல் பிரசார பணியை தடுப்பதற்காக, கொலை செய்ய சதி செய்கின்றனர். ஏனெனில் என்னுடைய வெற்றி உறுதி செய்யப்பட்டு விட்டது.
தேர்தல் தோல்வி பயத்தினால் இப்படிப்பட்ட செயல்களில் அ.ம.மு.க.வினர் இறங்கியுள்ளனர். எதையும் சந்திக்க நான் தயாராக உள்ளேன்.
தேர்தல் ஆணையத்திடம் புகார்
இந்த சம்பவத்தை தொடர்ந்து நான் போலீஸ் பாதுகாப்பு கேட்க மாட்டேன். இந்த பிரசார நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்த அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் நடந்த சம்பவம் தொடர்பாக தேர்தல் ஆணையத்திடம் புகார் தெரிவிக்க இருக்கிறார். அவர்கள் தேவையான நடவடிக்கை எடுப்பார்கள்.
இவ்வாறு அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறினார்.
Related Tags :
Next Story