மாற்றம் என்பது அதிமுக அகற்றி திமுகவை அமர வைப்பது அல்ல; மாற்று அரசியலை கொண்டுவருவதே உண்மையான மாற்றம் - சீமான்


மாற்றம் என்பது அதிமுக அகற்றி திமுகவை அமர வைப்பது அல்ல; மாற்று அரசியலை கொண்டுவருவதே உண்மையான மாற்றம் - சீமான்
x
தினத்தந்தி 28 March 2021 3:24 PM GMT (Updated: 2021-03-28T20:54:32+05:30)

மாற்றம் என்பது அதிமுக அகற்றி திமுகவை அமர வைப்பது அல்ல, மாற்று அரசியலை கொண்டுவருவதே உண்மையான மாற்றம் என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறினார்.

விழுப்புரம்,

தமிழகத்தில் ஏப்ரல் 6-ம் தேதி ஒரே கட்டமாக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மே 2-ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படுகிறது.

தேர்தல் களத்தில் அதிமுக கூட்டணி, திமுக கூட்டணி, அமமுக கூட்டணி, மக்கள் நீதி மய்யம் கூட்டணி, நாம் தமிழர் கட்சி என்று 5 முனை போட்டி நிலவுகிறது. சுயேச்சை வேட்பாளர்கள் பலரும் போட்டி களத்தில் உள்ளனர். தேர்தல் தேதி நெருங்கி வருவதால் அரசியல் கட்சிகள் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.

இந்நிலையில், செஞ்சியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சுகுமாரை ஆதரித்து அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:-

"தமிழகத்தில் அரசியல் மாற்றம் வேண்டும். ஆட்சி மாற்றம் முக்கியமல்ல அரசியல் மாற்றம் மிக முக்கியம். நாங்கள் அரசியல்வாதிகள் அல்ல புரட்சிவாதிகள். லஞ்சம் ஊழல் அதிக அளவில் உள்ளது. மாற்றம் என்பது அதிமுக அகற்றி திமுகவை அமர வைப்பது அல்ல, மாற்று அரசியலை கொண்டுவருவதே உண்மையான மாற்றம். 

புரட்சி என்பது இரத்தம் சிந்துவது மட்டும் இல்லை வெளிப்படையாக அநீதியை அகற்றி புதிய தேசம் அமைக்க போராடுவது. நாங்கள் ஆட்சி வந்தவுடன் ஆரம்பக் கல்வி முதல் ஆராய்ச்சி கல்வி வரை இலவசமாக வழங்குவோம். முதல் குடிமகனுக்கு என்ன மருத்துவம் கிடைக்கிறதோ சாதாரண குடிமகனுக்கும் அதே மருத்துவம்ன கிடைக்க வேண்டும் என்பது எங்கள் கோரிக்கையில் முதன்மையானது. அரசு அதற்கான சட்டம் இயற்ற வேண்டும்.

ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் வந்தாலும் மாறுதல் வரவில்லை. பரம்பரை காலங்காலமாக திமுக, அதிமுக என்றுதான் மாறியுள்ளது. இம்முறை உறுதியாக நாம் தமிழர் வெல்லும். நாம் தமிழரின் வெற்றி, தேர்தல் வெற்றி அல்ல வரலாற்று புரட்சியின் வெற்றி.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story