‘‘வெற்றிநடை போடும் தமிழகம் என்ற வரிகளை கேட்டாலே மு.க.ஸ்டாலின் அலறுகிறார்’’ தேர்தல் பிரசாரத்தின்போது எடப்பாடி பழனிசாமி பேச்சு


‘‘வெற்றிநடை போடும் தமிழகம் என்ற வரிகளை கேட்டாலே மு.க.ஸ்டாலின் அலறுகிறார்’’ தேர்தல் பிரசாரத்தின்போது எடப்பாடி பழனிசாமி பேச்சு
x
தினத்தந்தி 29 March 2021 1:00 AM GMT (Updated: 29 March 2021 1:00 AM GMT)

‘‘வெற்றிநடை போடும் தமிழகம் என்ற வரிகளை கேட்டாலே மு.க.ஸ்டாலின் அலறுகிறார்’’ என்று தேர்தல் பிரசாரத்தின்போது முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.

சென்னை, 

மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா பாணியில் தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சென்னையை நேற்று திறந்தவேனில் சுற்றி வந்து பிரசாரம் மேற்கொண்டார். அ.தி.மு.க. வேட்பாளர்கள் அமைச்சர் டி.ஜெயக்குமார் (ராயபுரம்), கே.குப்பன் (திருவொற்றியூர்), ஆர்.எஸ்.ராஜேஷ் (ஆர்.கே.நகர்), ஆதிராஜாராம் (கொளத்தூர்), ஜே.சி.டி.பிராபகர் (வில்லிவாக்கம்) ஆகியோரை ஆதரித்தும், பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன் (பெரம்பூர்), த.மா.கா. வேட்பாளர் கல்யாணி (திரு.வி.க.நகர்-தனி), தமிழக மக்கள் முன்னேற்ற கழகத் தலைவர் ஜான் பாண்டியன் (எழும்பூர்-தனி), பா.ஜ.க.வேட்பாளர் வினோஜ் பி.செல்வம் (துறைமுகம்) ஆகிய கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாகவும் வாக்கு சேகரித்தார்.

சென்னையை பம்பரம் போல் சுற்றி வந்த முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு அ.தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

தொண்டர்களின் ஆர்ப்பரிப்புக்கு மத்தியில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரட்டை இலை சின்னத்துக்கு ஆதரவு திரட்டி பேசியதாவது:-

முதன்மை மாநிலமாக தமிழகம்

சென்னை வளர்ந்து வரும் மாநகரம். சென்னையை பொறுத்தவரை எம்.ஜி.ஆர்-ஜெயலலிதா காலம் தொட்டே எண்ணற்ற திட்டங்கள் அறிவிக்கப்பட்டு இருக்கின்றன. சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் மெட்ரோ ரெயில் திட்டம் அறிவிக்கப்பட்டது. இப்போது 2-ம் கட்ட மெட்ரோ ரெயில் பணிகள் ரூ.62 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் தொடங்கப்பட்டு வருகிறது. இந்த பணிகள் நிறைவு பெற்றால் சென்னையில் எந்த மூலை முடுக்கில் இருந்தும் பொதுமக்கள் இன்னொரு இடத்திற்கு விரைவாக பயணிக்கலாம்.

தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சிறப்பாக இருக்கிறது. இந்தியாவிலேயே சிறந்த மாநிலமாக சட்டம்-ஒழுங்கு பேணிக் காக்கப்படுகிறது. ஒரு மாநிலம் வளமாக இருப்பதற்கு, தொழில் வளம் பெறுவதற்கு சட்டம்-ஒழுங்கு மிகவும் முக்கியம். அது தமிழகத்தில் சிறப்பாக இருப்பதால்தான் எண்ணற்ற தொழில் முதலீட்டாளர்கள் தொழில் தொடங்க தமிழகம் வருகிறார்கள். அந்த வகையில் தொழில் வளர்ச்சியில் தமிழகம் முதன்மை மாநிலமாக திகழ்ந்து வருகிறது.

மு.க.ஸ்டாலின் அலறுகிறார்

தி.மு.க. ஆட்சியில் தமிழகம் இருண்டு கிடந்தது. அந்த வகையில் இருண்ட ஆட்சியாக தி.மு.க. ஆட்சி இருந்தது. ஆனால் தற்போது அ.தி.மு.க. அரசில் தமிழகம் மின்மிகை மாநிலமாக சிறந்து விளங்குகிறது. பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கி தமிழகம் வெற்றி நடை போட்டு வருகிறது. இதுதான் ஒரு நல்ல அரசுக்கு உதாரணம். ஆனால் வெற்றி நடை போடும் தமிழகம் என்ற வரிகளை கேட்டாலே போதும் மு.க.ஸ்டாலின் அலறுகிறார். பயந்து போகிறார். மு.க.ஸ்டாலினுக்கு மக்கள் நலனில் அக்கறை கிடையாது. தனது குடும்ப நலனை பற்றி மட்டுமே சிந்தித்து வருகிறார். அந்த வகையில் எதுவுமே தெரியாத தலைவராக அவர் இருக்கிறார்.

தமிழகத்தில் சாதி-மத சண்டை கிடையாது. கட்டப்பஞ்சாயத்து, ரவுடி ராஜ்ஜியம், கடைகளில் வசூல் வேட்டை என்பதெல்லாம் கிடையாது. எடப்பாடி பழனிசாமி சாதாரணமான கிராமத்து ஆள் தானே என்று நினைக்க வேண்டாம். எதையுமே சாதித்துக்காட்டுவேன். எதற்கும் அஞ்சமாட்டேன். மக்கள் நலமுடன் மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்பதே எனது நோக்கம். அதையே கடமையாக செய்து வருகிறேன்.

மக்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள்

எனது தலைமையிலான ஆட்சியில் மக்கள் அனைவரும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில் மக்கள் நலனுக்காக நிறைய அம்சங்கள் குறிப்பிடப்பட்டு உள்ளன. இல்லத்தரசிகளின் பணிச் சுமையை குறைக்கும் வகையில் விலையில்லா வாஷிங்மெஷின், மாதந்தோறும் ரூ.1,500, வருடத்திற்கு 6 விலையில்லா கியாஸ் சிலிண்டர்கள், கட்டணமில்லா கேபிள் வசதி, வீடு தேடி ரேஷன் பொருட்கள், அரசு சார்பில் ஓட்டுநர் உரிமம் வினியோகம், முதியோர் உதவித்தொகை உயர்வு உள்ளிட்ட பல அம்சங்கள் இருக்கின்றன.

அதேபோல மீனவர்களுக்கு எண்ணற்ற திட்டங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன. வீடுகள் இல்லாத மீனவர்களுக்கு கான்கிரீட் வீடுகள் கட்டித்தரப்படும். டீசல் மானியம் ரூ.18 ஆயிரத்தில் இருந்து ரூ.20 ஆயிரமாக உயர்த்தப்படும். மீன்பிடி தடைக்காலத்தில் மீனவர்களுக்கு வழங்கப்படும் நிவாரணம் ரூ.5 ஆயிரத்தில் இருந்து ரூ.7 ஆயிரத்து 500 ஆக உயர்த்தப்படும். குறிப்பாக மீனவர்களின் நீண்டநாள் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் தனி மீன்வள வங்கி செயல்படுத்தப்படும். இன்னும் மீனவ மக்கள் சார்பில் நிறைய கோரிக்கைகள் வந்துள்ளன. இந்த கோரிக்கைகள் அனைத்தும் படிப்படியாக நிறைவேற்றப்படும் என்று உறுதி தருகிறேன்.

நல்லாட்சி தொடர...

மக்களின் எண்ணத்தை செயல்படுத்தும் அரசு அ.தி.மு.க.. எனவே தமிழகத்தில் நல்லாட்சி தொடர, ஆனந்தமாக வாழ உங்களுக்காக சேவையாற்றும் நல்லதொரு வாய்ப்பை மீண்டும் எங்களுக்கு வழங்க வேண்டும். அதற்கு உங்களது பொன்னான வாக்குகளை இரட்டை இலை சின்னத்தில் அளித்து அ.தி.மு.க.வை மீண்டும் ஆட்சிக்கட்டிலில் அமர்த்திட வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Next Story