டாக்டர் ராமதாசின் 40 ஆண்டு கால உழைப்புக்கு கிடைத்த பலன் தான் 10.5 சதவீத இடஒதுக்கீடு டாக்டர் அன்புமணி ராமதாஸ் பிரசாரம்


டாக்டர் ராமதாசின் 40 ஆண்டு கால உழைப்புக்கு கிடைத்த பலன் தான் 10.5 சதவீத இடஒதுக்கீடு டாக்டர் அன்புமணி ராமதாஸ் பிரசாரம்
x
தினத்தந்தி 2 April 2021 9:38 PM GMT (Updated: 2 April 2021 9:38 PM GMT)

டாக்டர் ராமதாசின் 40 ஆண்டுகால உழைப்புக்கு கிடைத்த பலனாக தான் வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு கிடைத்துள்ளது என்றும், அனைத்து சமுதாயங்களும் தனி இட ஒதுக்கீடு கிடைக்க போராடுவதே லட்சியம் என்றும் டாக்டர் அன்புமணி ராமதாஸ் பிரசாரம் செய்தார்.

ஆரணி, 

பா.ம.க. இளைஞரணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் ஆரணி தொகுதியில் நேற்று பிரசாரம் மேற்கொண்டார்.

வாக்காளர்கள் மத்தியில் டாக்டர் அன்புமணி ராமதாஸ் பேசியதாவது:-

உள்ளே போவார், வெளியே வருவார்

இந்த தேர்தல் நமக்கு மிக முக்கியமான தேர்தல். டாக்டர் ராமதாஸ் இந்த கூட்டணியில் சேர்ந்தது சமூக நீதி அடிப்படையில் தான். 40 ஆண்டு காலம் டாக்டர் ராமதாசின் உழைப்புக்கு, போராட்டத்திற்கு பலனாக மிகவும் பின்தங்கிய சமுதாயமான வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு கிடைத்துள்ளது. அனைத்து சமூகங்களுக்கும் தனித்தனியே இட ஒதுக்கீடு பெற்றுத் தர வேண்டும் இதுதான் என் லட்சியம்.

பின்தங்கிய நிலையில் உள்ள சமுதாயங்கள் எல்லாம் முன்னுக்கு வரவேண்டும். மு.க. ஸ்டாலின் சட்டமன்றத்தில் பேசியது கிடையாது, உள்ளே போவார் வெளியே வருவார். எதுக்கு வெளிநடப்பு செய்கிறேன் என்று அவருக்கே தெரியாது.

தி.மு.க.வை புறக்கணிக்க வேண்டும்

ஸ்டாலினுக்கும் சமூக நீதிக்கும் ஏதேனும் தொடர்பு உள்ளதா?, சமூகநீதி பற்றி ஸ்டாலினுக்கு ஏதேனும் தெரியும?, ஸ்டாலினுக்கு கணக்கு சுத்தமாக வராது இப்படிப்பட்ட ஒரு நபர் முதல்-அமைச்சராக வர வேண்டுமா? அன்று ஒரு நிகழ்ச்சியில் ஒரு பேப்பரில் எழுதி கொடுத்து இருக்காங்க, அந்த காலத்தில் பனை ஓலையில் என்று எழுதியிருந்ததை, பானை ஓலையில் என்று படிச்சிருக்காரு. இவர் முதல்-அமைச்சராக வரணுமா?.

தி.மு.க.வின் அனைத்து நிர்வாகிகளையும் பிரசாந்த் கிஷோர் தான் முடிவு செய்வார். ஸ்டாலின் அவங்க கட்சியை நடத்த தகுதி இல்லாதவர், அவரால் தமிழ்நாட்டை ஆட்சி நடத்த முடியுமா?. அதனால் நீங்கள் இதையெல்லாம் சிந்தியுங்கள். இது தமிழ்மண். பெண்களை தெய்வங்களாக வணங்கக்கூடிய மண். தி.மு.க.வை புறக்கணிக்கவேண்டும். ஒட்டுமொத்த பெண்களும் முடிவு செய்துவிட்டார்கள்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story