மனித தவறால் நடந்துவிட்டது: “உக்ரைன் விமானத்தை நாங்கள்தான் சுட்டு வீழ்த்தினோம்” - ஈரான் ஒப்புதல்


மனித தவறால் நடந்துவிட்டது: “உக்ரைன் விமானத்தை நாங்கள்தான் சுட்டு வீழ்த்தினோம்” - ஈரான் ஒப்புதல்
x
தினத்தந்தி 11 Jan 2020 4:20 AM GMT (Updated: 11 Jan 2020 10:07 PM GMT)

உக்ரைன் விமானத்தை சுட்டு வீழ்த்தியது நாங்கள்தான் என்றும், இது மனித தவறால் நடந்ததாகவும் ஈரான் தெரிவித்துள்ளது.

டெஹ்ரான்,

ஈரான் ராணுவ தளபதி காசிம் சுலைமானி கொல்லப்பட்டதற்கு பதிலடியாக கடந்த 8-ந்தேதி ஈராக்கில் உள்ள அமெரிக்க ராணுவ நிலைகள் மீது, ஈரான் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது.

இந்த தாக்குதல் நடத்தப்பட்ட சிறிது நேரத்தில் ஈரான் தலைநகர் டெஹ்ரானில் இருந்து உக்ரைன் தலைநகர் கீவுக்கு புறப்பட்ட விமானம் கிளம்பிய சிறிது நேரத்தில் தரையில் விழுந்து நொறுங்கியது.

இதில் விமானத்தில் பயணம் செய்த 176 பேரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர். இவர்களில் பெரும்பாலானோர் ஈரானியர்கள் மற்றும் கனடாவை சேர்ந்தவர்கள்.

தொழில்நுட்ப கோளாறு காரணமாக விமானம் விபத்துக்குள்ளானதாக அறிவித்த ஈரான், விமானத்தின் கருப்பு பெட்டியை யாரிடமும் வழங்க மாட்டோம் என கூறியது.

இது விபத்து குறித்து சந்தேகத்தை கிளப்பிய நிலையில் ஈரானே ஏவுகணை மூலம் தாக்கி விமானத்தை வீழ்த்தியதாக அமெரிக்கா மற்றும் கனடா குற்றம் சாட்டியது.

ஆனால் இந்த குற்றச்சாட்டை நிராகரித்த ஈரான், விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதற்கான ஆதாரங்கள் இருந்தால் வழங்கலாம் என்று அமெரிக்கா மற்றும் கனடாவை சாடியது.

இந்தநிலையில் திடீர் திருப்பமாக உக்ரைன் விமானத்தை நாங்கள்தான் சுட்டு வீழ்த்தினோம் என கூறி ஈரான் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது மனித தவறால் நடந்ததாகவும், இதற்காக மன்னிப்பு கேட்டு கொள்வதாகவும் ஈரான் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக ஈரான் புரட்சிகர ராணுவம் வெளியிட்ட அறிக்கையில், பதற்றம் நிறைந்த ராணுவ பகுதிக்கு அருகே பறந்த பயணிகள் விமானத்தை எதிரி நாட்டின் போர் விமானம் என நினைத்து ஏவுகணையை வீசி தாக்கிவிட்டதாக கூறப்பட்டு உள்ளது.

அமெரிக்காவுடனான பதற்றம் காரணமாக ஈரான் உச்சக்கட்ட அழுத்தத்தில் இருந்த நிலையில் மனித தவறின் காரணமாகவும், தற்செயலாகவும் விமானம் தாக்கப்பட்டதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மேலும் விமானத்தை சுட்டு வீழ்த்தியதற்காக ஈரான் ராணுவம் மன்னிப்பு கோரியுள்ளது. அதோடு எதிர்காலத்தில் இதுபோன்ற தவறுகள் நடக்காத வகையில் ராணுவ அமைப்புகள் மேம்படுத்தப்படும் என ஈரான் ராணுவம் தெரிவித்துள்ளது.

விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதற்கு ஈரான் விமானப்படையின் தளபதி அமீர் அலி ஹாஜிசாதே முழு பொறுப்பு ஏற்றுள்ளார். இந்த தவறால் தன் மனம் முழுவதும் நொடிந்துவிட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

அதேபோல் மிகப்பெரிய சோகம் மன்னிக்க முடியாத தவறுக்காக ஆழ்ந்த வருத்தம் தெரிவித்து கொள்வதாக ஈரான் அதிபர் ஹசன் ருஹானி டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

இந்த விமான தாக்குதலுக்கு வழிவகுத்த சாத்தியமான குறைபாடுகள் அல்லது தவறுகள் குறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென அந்த நாட்டு ராணுவத்துக்கு ஈரானின் மூத்த மத தலைவர் அயத்துல்லா அலி காமெனி உத்தரவிட்டுள்ளார்.

இதற்கிடையே தங்கள் நாட்டு விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது தொடர்பாக முழுமையான விசாரணையை எதிர்பார்ப்பதாகவும், அதோடு இந்த சம்பவத்துக்கு ஈரான் இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.


Next Story