தமிழக மீனவர் மரணம்; மறுபிரேத பரிசோதனை செய்ய கோர்ட்டு உத்தரவு


தமிழக மீனவர் மரணம்; மறுபிரேத பரிசோதனை செய்ய கோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 16 Nov 2021 7:55 AM GMT (Updated: 16 Nov 2021 7:55 AM GMT)

தமிழக மீனவர் ராஜ்கிரண் உடலை மறுபிரேத பரிசோதனை செய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்து உள்ளது.



மதுரை,

புதுக்கோட்டை மாவட்டம், கோட்டைப்பட்டினத்திலிருந்து கடந்த 18ந்தேதி சுரேஷ்குமார் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் அதே பகுதியை சேர்ந்த சுகந்தன், சேவியர் மற்றும் ராஜ்கிரண் ஆகிய 3 மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குள் சென்றனர். அன்று இரவு நடுக்கடலில் மீன் பிடித்து கொண்டிருந்த மீனவர்களின் படகில் இலங்கை கடற்படையின் ரோந்து கப்பல் மோதியதில் படகு நடுக்கடலில் மூழ்கியது.

இதில் படகில் இருந்த 3 பேரும் நடுக்கடலில் தத்தளித்தனர். சுகந்தன் மற்றும் சேவியர் ஆகிய 2 பேரையும் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். மாயமான மீனவர் ராஜ்கிரண், 2 நாட்கள் தேடுதலுக்கு பின் கடந்த 20ந்தேதி நெடுந்தீவு அருகே சடலமாக மீட்கப்பட்டார். பின்னர் அவரது உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

இந்நிலையில் கைது செய்யப்பட்ட சேவியர், சுகந்தன் ஆகிய 2 பேரையும் சட்டவிரோதமாக உரிய ஆவணங்கள் இன்றி இலங்கைக்குள் நுழைந்ததாக இலங்கை கடற்படையினர் வழக்குப்பதிவு செய்து கடற்படை முகாமில் தங்க வைத்திருந்தனர். இந்த வழக்கு கடந்த மாதம் 26ந்தேதி ஊர்காவல்துறை நீதிமன்ற நீதிபதி முன்பு விசாரணைக்கு வந்தது.

வழக்கை விசாரித்த ஊர்காவல்துறை நீதிமன்ற நீதிபதி கிஷந்தன், மீனவர்கள் கடல் சீற்றம் காரணமாக தவறுதலாக இலங்கை எல்லைக்குள் வந்ததாகவும், படகு நடுக்கடலில் மூழ்கியதால் இவ்வழக்கிலிருந்து மீனவர்கள் 2 பேரையும் விடுவிப்பதாக உத்தரவிட்டார்.

இந்த நிலையில், உயிரிழந்த மீனவர் ராஜ்கிரண் உடலை மறுபிரேத பரிசோதனை செய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்து உள்ளது.  மீனவர் சுட்டு கொல்லப்பட்டாரா? அல்லது நீரில் மூழ்கி இறந்தாரா? என்பது குறித்து தெளிவுப்படுத்த வேண்டும்.  இலங்கை கடற்படையால் சுட்டு கொல்லப்பட்டிருந்தால் அதனை எளிதாக விட்டு விட இயலாது என்றும் நீதிபதி கூறியுள்ளார்.  மீனவரின் பிரேத பரிசோதனை அறிக்கையை வரும் 24ந்தேதி கோர்ட்டில் தாக்கல் செய்யவும் அவர் உத்தரவிட்டு உள்ளார்.


Next Story