உலக செய்திகள்

சீனாவிற்கு அழைப்பு விடுப்பு; ‘இந்தியாவைதான் முதலில் நாடினோம்’ மாலத்தீவு தூதர் தகவல் + "||" + India was first stop for special envoy but MEA declined visit says Maldives Ambassador

சீனாவிற்கு அழைப்பு விடுப்பு; ‘இந்தியாவைதான் முதலில் நாடினோம்’ மாலத்தீவு தூதர் தகவல்

சீனாவிற்கு அழைப்பு விடுப்பு; ‘இந்தியாவைதான் முதலில் நாடினோம்’  மாலத்தீவு தூதர் தகவல்
மாலத்தீவில் குழப்பான அரசியல் சூழ்நிலை நீடித்து வரும் நிலையில் சீனா உள்பட நட்பு நாடுகளுக்கு மாலத்தீவு தூதரை அனுப்புகிறது.
புதுடெல்லி,

மாலத்தீவில் பயங்கரவாதம் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளுக்காக சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள முன்னாள் அதிபர் முகமது நஷீத் உள்ளிட்ட ஒன்பது பேரை விடுவிக்குமாறு அரசுக்கு அந்நாட்டு சுப்ரீம் கோர்ட்டு கடந்த வியாழக்கிழமை உத்தரவிட்டது.

 மேலும், அதிபர் அப்துல்லா யாமீன் கயூம் தலைமையிலான மாலத்தீவு முன்னேற்றக் கட்சியிலிருந்து விலகிய 12 எம்.பி.க்களின் தகுதி நீக்கம் செல்லாது எனவும் உத்தரவிட்டு உள்ளது. 

அவர்களுக்கு எம்.பி. பதவி வழங்கப்பட்டால் அப்துல்லா யாமீனுக்கு எதிராக தீர்மானம் கொண்டு வந்து அவரை தகுதி நீக்கம் செய்ய முடியும் என்ற நிலை காணப்படுகிறது. எனவே சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை  செயல்படுத்தப்போவதில்லை என்று அதிபர் அப்துல்லா யாமீன் முடிவு செய்து உள்ளார் என கூறப்படுகிறது.

அவசரநிலை பிரகடனம்

பாராளுமன்றத்தை காலவரையின்றி முடக்குவதாக மாலத்தீவு அரசு அறிவித்தது. சிறையில் அடைக்கப்பட்டுள்ள எதிர்க்கட்சி தலைவர்களை விடுவிக்குமாறு தீர்ப்பு வழங்கப்பட்ட பின்னர் அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் தீவிரமடைந்தது.
 
சிறையில் அடைக்கப்பட்டுள்ள அரசியல் தலைவர்களை விடுவிக்க உத்தரவிட்டும், விடுவிக்காத அரசை கண்டித்து எதிர்க்கட்சியினர் போராட்டம் அறிவித்திருந்த நிலையில் பாராளுமன்றத்தை ராணுவம் தங்களது கட்டுப்பாட்டில் கொண்டு வந்தது.

மாலத்தீவு பாராளுமன்றம், சுப்ரீம் கோர்ட்டு மற்றும் முக்கிய இடங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது.

இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாகவே மந்திரி ஹூசைன் ரஷீத் தனது மந்திரி பதவியை ராஜினாமா செய்தார். இதுபற்றி அவர் அதிபர் அப்துல்லா யாமீனுக்கு அனுப்பியுள்ள பதவி விலகல் கடிதத்தில், ‘‘நாட்டின் உயரிய அமைப்பான சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவை மதித்து நடக்கப்போவதில்லை என்ற அரசின் முடிவில் எனக்கு உடன்பாடு இல்லை. இது எனது மனசாட்சியை உறுத்துகிறது. அதனால் பதவியில் இருந்து விலகுகிறேன்’’ என்று குறிப்பிட்டு இருந்தார். 
 
 இதற்கிடையே உத்தரவை ரத்து செய்யும்படி சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகளுக்கு அதிபர் யாமீன் கடிதம் எழுதினார். 

 மாலத்தீவு அதிபர் அப்துல்லா யாமீன் தொடர்ந்து பதவி வகிக்கும் நிலையில் நீதிபதிகள் தொடர்ந்து பயத்தில் உள்ளனர் எனவும் தகவல் வெளியாகியது.இந்நிலையில் கடந்த திங்கள் கிழமை அவசரநிலையை பிரகடனம் செய்து அதிபர் அப்துல்லா யாமீன் உத்தரவிட்டார்.  அரசியல் தலைவர்கள், நீதிபதிகள் கைது நடவடிக்கை தொடங்கியது.

முன்னாள் அதிபர் கோரிக்கை

அதிபர் அப்துல்லா யாமீன் அதிரடி நடவடிக்கையால் பெரும் அரசியல் குழப்பம் நீடித்த நிலையில் இந்தியாவிற்கு முன்னாள் அதிபர் முகமது நஷீத் கோரிக்கை விடுத்தார். டுவிட்டரில் அவர் வெளியிட்ட செய்தியில், மாலத்தீவு மக்களின் சார்பாக இந்த கோரிக்கையை நாங்கள் விடுக்கிறோம். “மாலத்தீவு அதிபரால் கைது செய்யப்பட்ட நீதிபதிகள், அரசியல் கட்சியினரை கைது செய்ய ராணுவ பலத்துடன் இந்தியா தூதரை அனுப்ப வேண்டும். இந்தியா அங்கு ராணுவத்தை நிலை நிறுத்த கோருகிறோம். அமெரிக்க வங்கிகள் வழியாக மாலத்தீவு பிராந்திய தலைவர்களுக்கு செல்லும் நிதி பரிமாற்றத்தை அமெரிக்கா நிறுத்த வேண்டும்,” என குறிப்பிட்டார்.

இந்திய வெளியுறவுத்துறை

மாலத்தீவு முன்னாள் அதிபர் முகமது நஷீத் கோரிக்கை விடுத்த நிலையில் இந்திய வெளியுறவுத்துறை தன்னுடைய தரப்பு தகவலை வெளியிட்டது.

சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிற்கு அரசு இணங்க மறுத்ததை அடுத்து மாலத்தீவில் அவசரநிலை பிரகடனம் மற்றும் மாலத்தீவு மக்களின் அரசியலமைப்பு உரிமைகள் இடைநிறுத்தம் செய்யப்பட்டது எங்களுக்கு கவலையை அளிக்கிறது. சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் மற்றும் அரசியல் கட்சியினர் கைது கவலைக்குரியது. மாலத்தீவு நாட்டில் நிலவும் சூழ்நிலையை அரசு தீவிரமாக கண்காணித்து வருகிறது என இந்திய வெளியுறவுத்துறை தெரிவித்தது. ராணுவத்தை அனுப்புவது தொடர்பாக இந்தியா தரப்பில் எந்தஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

சீனா எதிர்ப்பு

இதற்கிடையே அதிபர் அப்துல்லா யாமீனுக்கு நெருக்கம் காட்டும் சீனா, மாலத்தீவில் ராணுவ தலையீட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்தது.

இதுபோன்ற நிலையானது மாலத்தீவில் நிலையை மேலும் மோசமாக்கும் என்று சீனா கூறியது. 

சீனாவின் எதிர்ப்புக்கு பதிலடி கொடுக்கும் வகையில் முன்னாள் அதிபர் முகமது நஷீத் முன்பு நடத்த சம்பவத்தை பட்டியலிட்டார். 

 “உங்களுக்கு உள்ளே பிரச்சனையை தீர்த்துக் கொள்ளுங்கள் என்பது எங்களை வன்முறையை அதிகரிக்க கேட்டுக் கொள்வது போலது, இதனால் நிலையை மேலும் குழப்பான நிலைக்கு தள்ளமுடியும். இந்தியாவின் செயல்பாட்டை மாலத்தீவு மக்கள் நேர்மறையாகவே பார்க்கிறார்கள். 1988-ல் அவர்கள் மாலத்தீவு வந்தார்கள், பிரச்சனையை சரிசெய்தார்கள். தங்கள் பணி முடிந்ததும் திரும்பிவிட்டார்கள். அவர்கள் ஆக்கிரமிப்பாளர்கள் கிடையாது, அவர்கள் எங்களை விடுவித்தவர்கள்தான். எனவே இப்போதும் மாலத்தீவு மக்கள் இந்தியாவை எதிர்பார்க்கின்றனர்,” என நஷீத் டுவிட்டரில் குறிப்பிட்டு உள்ளார். 

1988-ம் ஆண்டு அப்போதைய மாலத்தீவு அதிபர் அப்துல் கயூமை ஆட்சி கவிழ்ப்புக்கு எதிராக இந்தியாவின் உதவியை கோரினார். அவருடைய அழைப்பிற்கு மதிப்பளித்த இந்தியா, அங்கு படைகளை அனுப்பி நிலையை சரிசெய்தது. தேசத்தில் அமைதி திரும்பியதும் மீண்டும்  இந்திய ராணுவம் சொந்த நாடு திரும்பியது.

இந்தியா புறக்கணிப்பு?

இந்நிலையில் மாலத்தீவின் தற்போதய நிலவரம் குறித்து தகவல் தெரிவிக்க நட்பு நாடுகளுக்கு தூதர்களை அனுப்புவதாக மாலத்தீவு அரசு தெரிவித்தது. நட்பு நாடுகள் என மாலத்தீவு அதிபர் யாமீன் சிறப்பு தூதர்களை அனுப்பும் நாடுகள் பட்டியலில், சீனா, சவுதி அரேபியா மற்றும் பாகிஸ்தான் இடம்பெற்று இருந்தது. மாலத்தீவில் நிலவும் அவசரநிலை தொடர்பாக ஆலோசனையை மேற்கொள்ள இந்தியாவிற்கு அழைப்பு இல்லை என்ற நிலையானது இருநாடுகள் இடையிலான நட்புறவில் விரிசல்? என்ற நிலையை காட்டியது.
 
மாலத்தீவு தூதர் விளக்கம்

இந்நிலையில் இந்தியாவிற்கான மாலத்தீவு நாட்டின் தூதர் அகமத் முகமத் ஆங்கிலப் பத்திரிக்கைக்கு அளித்து உள்ள பேட்டியில் இந்தியாவைதான் முதலில் நாடினோம் என குறிப்பிட்டு உள்ளார். 

“மாலத்தீவின் சிறப்பு தூதரை முதலில் இந்தியாவிற்கு அனுப்பதான் திட்டமிடப்பட்டது. இதுதொடர்பாக முன்மொழியப்பட்ட தேதியானது இந்திய தலைவர்களுக்கு சரியான நேரமாக காணப்படவில்லை. இந்திய வெளியுறவுத்துறை மந்திரி இந்தியாவில் இல்லை, இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் ஐக்கிய அரபு எமிரெட்ஸ் பயணம் மேற்கொள்கிறார் என புரிந்துக் கொண்டோம்,” என முகமத் குறிப்பிட்டு உள்ளார் என தி இந்து செய்தி வெளியிட்டு உள்ளது.

மாலத்தீவு பயணம் தொடர்பான குறிப்பிட்ட கேள்விகளுக்கு இந்திய வெளியுறவுத்துறை பதில் அளிக்க மறுத்துவிட்டது.

 மாலத்தீவில் நிலவும் நெருக்கடி நிலை தொடர்பாக விரிவாக விளக்கத்தை எடுத்துரைக்க மாலத்தீவு அதிபர் யாமீன் கடந்த 9-ம் தேதி முடிவு எடுத்ததாகவும், ஆனால் இந்தியா கோரிக்கையை ஏற்க முடியாத நிலையை தெரிவித்தது எனவும் தகவல் வெளியாகி உள்ளது.

மாலத்தீவு நாட்டின் தூதர் அகமத் முகமத் இந்திய வெளியுறவுத்துறைக்கு விடுக்கப்பட்ட கோரிக்கை தொடர்பாக பேசுகையில், “இவ்விவகாரம் தொடர்பான நகர்வுக்கு இந்திய வெளியுறவுத்துறை இதுவரையில் எந்தஒரு கருத்தையும் தெரிவிக்கவில்லை,” என குறிப்பிட்டு உள்ளார். மாலத்தீவு முன்மொழிந்த தேதியை இந்தியா நிராகரித்துவிட்டது என்பது குறிப்பிடப்படுகிறது.