உலக செய்திகள்

அமெரிக்க அரசிடம் 130 எம்.பி.க்கள் முறையீடு + "||" + 130 MPs appealed to the US government

அமெரிக்க அரசிடம் 130 எம்.பி.க்கள் முறையீடு

அமெரிக்க அரசிடம் 130 எம்.பி.க்கள் முறையீடு
‘எச்–1பி’ விசாதாரர்களின் வாழ்க்கை துணைவர்களுக்கு ‘ஒர்க் பெர்மிட்’ என்னும் பணி அனுமதி வழங்குவது தொடர வேண்டும் என்று அமெரிக்க அரசிடம், அந்த நாட்டின் 130 எம்.பி.க்கள் முறையீடு செய்து உள்ளனர்.

வாஷிங்டன்,

அமெரிக்க நாட்டில் 2015–ம் ஆண்டு ஒபாமா ஜனாதிபதியாக இருந்தார். அப்போது அவர், அங்கு குடியுரிமை பெறாமல் ‘எச்–1’ பி விசாவில் தங்கி வேலை செய்கிறவர்களின் வாழ்க்கை துணைவர்களுக்கு ‘எச்–4’ விசா அளித்து, வேலை பார்க்கும் வாய்ப்பினை வழங்கும் திட்டத்தை அமல்படுத்தினார். இதனால் ‘எச்–1’ பி விசாவில் அங்கு வேலை பார்க்கிற ஆண்களின் மனைவிமாரும், பெண்களின் கணவர்மாரும் வேலை வாய்ப்பினை பெற்று பலன் அடைந்தனர். அவர்கள் குடும்பமாக அங்கு வாழவும் அது வழி வகுத்துத்தந்தது.

இந்த அனுமதியால் அங்கு 1 லட்சத்துக்கும் அதிகமான ‘எச்–4’ விசாதாரர்கள் பலன் அடைந்து வந்தனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் இந்தியர்கள் ஆவார்கள்.

ஆனால் இப்போது அங்கு ஜனாதிபதியாக உள்ள டொனால்டு டிரம்ப், ‘அமெரிக்கர்கள் அமெரிக்க பொருட்களையே வாங்க வேண்டும், அமெரிக்க நிறுவனங்கள் அமெரிக்கர்களையே பணியில் அமர்த்த வேண்டும்’ என்ற கொள்கையை அறிமுகம் செய்து, அதை தீவிரமாக வலியுறுத்தி வருகிறார்.

அந்த வகையில் இப்போது அங்கு ‘எச்–1’ பி விசாவில் தங்கி வேலை செய்கிறவர்களின் வாழ்க்கை துணைவர்களுக்கு ‘எச்–4’ விசா அளித்து, ‘ஒர்க் பெர்மிட்’ என்னும் பணி அனுமதி வழங்கும் திட்டத்தை ஒழித்துக்கட்ட முடிவு செய்து உள்ளது.

இது அங்கு வேலை பார்க்கிற இந்திய தகவல் தொழில் நுட்பத்துறையினருக்கு சாபம் போல அமைந்தது. பல்லாயிரக்கணக்கான இந்தியர்கள் நாடு திரும்ப வேண்டிய நிலையை உருவாக்கி உள்ளது.

இது அமெரிக்காவை ஆளும் குடியரசு கட்சி மற்றும் எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சி எம்.பி.க்கள் இடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

முந்தைய ஒபாமா காலத்தில் ‘எச்–1’ பி விசாவில் தங்கி வேலை செய்கிறவர்களின் வாழ்க்கை துணைவர்களுக்கு ‘எச்–4’ விசா அளித்து பணி அனுமதி வழங்கி கொண்டு வந்த திட்டம் தொடர வேண்டும் என்று வலியுறுத்தி இந்திய வம்சாவளி எம்.பி., பிரமிளா ஜெயபால் தலைமையில் 130 எம்.பி.க்கள் அந்த நாட்டின் உள்நாட்டு பாதுகாப்பு மந்திரி கிறிஸ்ட்ஜென் நீல்சனிடம் முறையீடு செய்து உள்ளனர்.

அவர்கள் அனைவரும் கையெழுத்திட்டு வழங்கியுள்ள மனுவில் கூறி இருப்பதாவது:–

‘எச்–4’ விசாதாரர்களுக்கு அமெரிக்காவில் பணியாற்றுவதற்கு ஒர்க் பெர்மிட் வழங்கும் முறை, நமது நாட்டின் பொருளாதாரத்தை வலுவாக்கி இருக்கிறது. அதுமட்டுமின்றி பல்லாயிரக்கணக்கானவர்களுக்கு குறிப்பாக பெண்களுக்கு வேலை வாய்ப்பினை வழங்கி உள்ளது. இவர்கள் அனைவரும் பல்லாண்டு காலமாக இங்கு வசித்து வருகிறார்கள். இவர்களில் பலரும் நிரந்தர குடியுரிமை பெறுவதற்கான நடைமுறையை மேற்கொண்டு வருகின்றனர்.

எனவே ‘எச்–4’ விசாதாரர்களுக்கு வழங்கப்பட்டு வருகிற பணி அனுமதியை ரத்து செய்தால், அமெரிக்க நிறுவன அதிபர்களின் போட்டித்தன்மையில் பாதிப்பை ஏற்படுத்தும். அமெரிக்க பொருளாதாரத்திலும் பாதிப்பு உண்டாகும். ‘எச்–4’ விசாதாரர்களின் வாழ்க்கைத்துணைவர்களும், குடும்பங்களும் பாதிப்புக்கு ஆளாகும்.

எனவே ஏற்கனவே ‘எச்–4’ விசாதாரர்களுக்கு வழங்கி வருகிற பணி அனுமதி திட்டத்தை தொடர்ந்து பின்பற்ற வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.