வடகொரிய தலைவருக்கு டிரம்ப் எச்சரிக்கை


வடகொரிய தலைவருக்கு டிரம்ப் எச்சரிக்கை
x
தினத்தந்தி 18 May 2018 10:45 PM GMT (Updated: 18 May 2018 7:32 PM GMT)

அமெரிக்காவுடன் ஒப்பந்தம் செய்யாவிடில், அழிவை சந்திக்க வேண்டி வரும் என்று வடகொரிய தலைவருக்கு டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

வாஷிங்டன்,

இரு துருவங்களாக விளங்கி வந்த அமெரிக்க ஜனாதிபதி டிரம்பும், வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன்னும், சிங்கப்பூரில் அடுத்த மாதம் 12–ந் தேதி சந்தித்துப் பேசுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இது உலக அரங்கில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஆனால் திடீரென வடகொரியாவின் போக்கில் மாறுதல் ஏற்பட்டு உள்ளது. அணு ஆயுதங்களை கைவிடும் பிரச்சினையில் அமெரிக்கா ஒருதலைப்பட்சமாக தனக்கு மென்மேலும் அழுத்தம் தருவதாக வடகொரியா கருதுகிறது.

இந்த நிலையில் சில தினங்களுக்கு முன் திடீரென வட கொரியா, டிரம்புடனான கிம் ஜாங் அன்னின் பேச்சுவார்த்தையை ரத்து செய்து விடப்போவதாக மிரட்டியது.

ஆனால் இந்தப் பேச்சுவார்த்தையில் டிரம்ப் ஆர்வம் காட்டுகிறார். இதுபற்றி நேற்று முன்தினம் அவர் கூறும்போது, ‘‘திட்டமிட்டபடி அடுத்த மாதம் 12–ந் தேதி (சிங்கப்பூரில்) நடக்க உள்ள உச்சி மாநாட்டுக்கு வேண்டிய வேலைகளை அமெரிக்கா மற்றும் வடகொரியா அதிகாரிகள் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறார்கள். கிம் ஜாங் அன் அணு ஆயுதங்களை கைவிட்டால், அவர் ஆட்சி அதிகாரத்தில் தொடர்வார். ஆனால் அவர் அமெரிக்காவுடன் அதற்காக ஒப்பந்தம் செய்துகொள்ளாவிடில் வடகொரியா அழிவை சந்திக்க வேண்டியது வரும்’’ என்று குறிப்பிட்டார்.

மேலும், ‘‘சந்திப்பு நடந்தால், நடக்கட்டும். அப்படி நடக்காவிட்டால் நாம் அடுத்தகட்ட நடவடிக்கை எடுப்போம். என்ன நடக்கிறது என்று பார்க்கலாம்’’ என்று எச்சரித்தார்.


Next Story