பிரமிப்பூட்டும் நட்பு


பிரமிப்பூட்டும் நட்பு
x
தினத்தந்தி 24 Jun 2018 9:44 AM GMT (Updated: 24 Jun 2018 9:44 AM GMT)

இந்தோனேசியாவில் புலிக்கும், அதனை பராமரிப்பவருக்கும் இடையேயான நட்பு பிரமிப்பூட்டும் வகையில் அமைந்திருக்கிறது.

35 வயதான அப்துல்லா ஷோலேவும், 10 வயதான வங்கப் புலியும் சிறந்த தோழிகளாகவே மாறிவிட்டார்கள். இருவரும் 24 மணி நேரமும் இணைந்தே இருக்கிறார்கள். ஒன்றாக விளையாடுகிறார்கள். ஒன்றாக சாப்பிடுகிறார்கள். சில நேரங்களில் இருவரும் சேர்ந்தே தூங்கவும் செய்கிறார்கள்.

அந்த பெண் புலியின் பெயர் முலன் ஜமீலா. அது 3 மாத குட்டியாக இருந்தபோது அதனை வளர்த்தவர் சரியாக பராமரிக்காததால் அங்குள்ள மலாங் இஸ்லாமியப் பள்ளிக்கு நன்கொடையாக வழங்கப்பட்டிருக்கிறது. அந்த புலியை பராமரிக்கும் பொறுப்பு அப்துல்லாவிடம் ஒப்படைக்கப்பட்டது. அந்த புலியை வளர்ப்பதற்கு அப்துல்லா ஷோலே காட்டிய அன்பும், அக்கறையும் இருவரையும் பிரிக்க முடியாத ஜோடியாக மாற்றியிருக்கிறது.

‘‘ஆரம்பத்தில் நான் பகுதி நேர வேலையாகத்தான் ஜமீலாவைக் கவனிக்க ஆரம்பித்தேன். விரைவிலேயே அதற்கு என்னை பிடித்து போனது. பகுதி நேர வேலையிலேயே முழு நேர நட்பைப் பெற்றேன். எங்கள் நட்பைப் பார்த்து ஜமீலாவை பராமரிப்பதற்கான முழு நேர வேலையை கொடுத்துவிட்டனர்.

நான் வீட்டுக்கு செல்லும் நேரத்தில் ஜமீலா மிகவும் வருத்தப்படும். அதற்காகவே என் தங்குமிடத்தை இங்கேயே மாற்றிக் கொண்டேன். நாள் முழுவதும் நாங்கள் ஒன்றாகவே இருக்கிறோம். எங்கள் இருவருக்கும் எங்களைத் தவிர வேறு உலகம் இல்லை.

என்னிடம் புலியாக அல்லாமல் பூனையாக நெருங்கி பழகினாலும் நான் கண்மூடித்தனமான அன்பை அதன் மீது வைக்கவில்லை. எந்த நேரமும் எனக்கு ஆபத்து நேரலாம் என்பதையும் புரிந்து வைத்திருக்கிறேன். ஜாக்கிரதையாகத்தான் ஒவ்வொரு விஷயத்தையும் கையாளுகிறேன்.

நமக்குதான் இந்த புரிதல் வேண்டும். புலிக்கு அதெல்லாம் தெரியாது. என்னுடன் விளையாடும்போது அதன் நகங்களும் பற்களும் முகம், கை, கால்களில் பட்டு, காயத்தை ஏற்படுத்தியிருக்கின்றன. என் தோளில் தலை வைத்துக்கொண்டுதான் அதிகம் விளையாடும். அப்போது கழுத்தில் காயம் ஏற்படக்கூடாது என்று தடிமனான துணியால் கழுத்தைச் சுற்றிக்கொள்வேன். ஒரு புலியின் அத்தனை குணங்களும் எனக்கு நன்றாகத் தெரியும்’’ என்கிறார் அப்துல்லா ஷோலே. 

Next Story