வங்காளதேச நாடாளுமன்ற தேர்தலில் அபார வெற்றி: ஷேக் ஹசினா மீண்டும் பிரதமரானார் - நரேந்திர மோடி வாழ்த்து


வங்காளதேச நாடாளுமன்ற தேர்தலில் அபார வெற்றி: ஷேக் ஹசினா மீண்டும் பிரதமரானார் - நரேந்திர மோடி வாழ்த்து
x
தினத்தந்தி 31 Dec 2018 11:30 PM GMT (Updated: 31 Dec 2018 9:38 PM GMT)

வங்காளதேசத்தில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்றதன் மூலம் ஷேக் ஹசினா 4-வது முறையாக பிரதமரானார்.

டாக்கா,

வங்காளதேசத்தில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் அவாமி லீக் கட்சி அபார வெற்றி பெற்றதன் மூலம் ஷேக் ஹசினா 4-வது முறையாக பிரதமரானார். அவருக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்தார்.

வங்காளதேசத்தில் 300 உறுப்பினர்களை கொண்ட நாடாளுமன்றத்துக்கு நேற்று முன்தினம் தேர்தல் நடந்தது. ஆளும் அவாமி லீக் கட்சிக்கு எதிராக தேசிய ஐக்கிய முன்னணி என்கிற பெயரில் கூட்டணி அமைத்து எதிர்க்கட்சிகள் தேர்தலை எதிர்கொண்டன.

தேர்தலையொட்டி 6 லட்சத்துக்கும் மேற்பட்ட போலீசார் மற்றும் ராணுவத்தினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். எனினும் தேர்தலின் போது நடந்த வன் முறைச்சம்பவங்களில் 18 பேர் பலியாகினர். 200-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.

இந்த நிலையில், தேர்தலில் பதிவான ஓட்டுகள் அனைத்தும் உடனடியாக எண்ணப்பட்டன. தேர்தல் நடந்த 299 தொகுதிகளில் 288 இடங்களை கைப்பற்றி ஆளும் அவாமி லீக் கட்சி அபார வெற்றிப்பெற்றது. இதன் மூலம் ஆளும் அவாமி லீக் கட்சியின் தலைவரான ஷேக் ஹசினா (வயது 71) தொடர்ந்து பிரதமர் ஆனார். அவர் பிரதமர் ஆவது இது 4-வது முறையாகும்.

எதிர்க்கட்சிகளின் தேசிய ஐக்கிய முன்னணி கூட்டணிக்கு 7 இடங்கள் மட்டும் கிடைத்தன. பிற கட்சிகள் 3 தொகுதிகளில் வெற்றி பெற்றன. வேட்பாளர்களின் மரணம் காரணமாக ஒரு தொகுதியில் வாக்கு பதிவு ஒத்திவைக்கப்பட்டதும், மற்றொரு தொகுதியில் ஓட்டு எண்ணிக்கை நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

தேர்தலில் பதிவான மொத்த ஓட்டுகளில் 82 சதவீத ஓட்டு அவாமி லீக் கட்சிக்கு கிடைத்ததாக தேர்தல் ஆணையம் தெரிவித்து உள்ளது. அக்கட்சியின் தலைவரும், பிரதமருமான ஷேக் ஹசினாவுக்கு 2 லட்சத்து 29 ஆயிரத்து 539 ஓட்டுகள் கிடைத்தது. அவரை எதிர்த்து போட்டியிட்ட வேட்பாளருக்கு வெறும் 123 ஓட்டுகள் மட்டுமே கிடைத்தன.

இந்த தேர்தல் முடிவுகளை ஏற்க மறுத்த தேசிய ஐக்கிய முன்னணி கூட்டணி தேர்தலை ரத்து செய்துவிட்டு, புதிய தேர்தலை நடத்த வேண்டும் என தேர்தல் ஆணையத்தை வலியுறுத்தி உள்ளது. அந்த கூட்டணியின் தலைவர் கமால் உசேன் (81) இந்த தேர்தல் கேலிகூத்தானது என சாடினார்.

இது குறித்து அவர் கூறுகையில், “அனைத்து தொகுதிகளிலும் முறைகேடு நடந்ததாக எங்களுக்கு தெரியவந்துள்ளது. இந்த தேர்தலை ரத்து செய்வது தான் சரியானதாக இருக்கும். நாங்கள் இந்த தேர்தல் முடிவுகளை புறக்கணிப்பதோடு, புதிய தேர்தலை நடத்தவும் தேர்தல் ஆணையத்தை வலியுறுத்துகிறோம்” என கூறினார்.

இந்த தேர்தலில், வங்காளதேச ஒருநாள் கிரிக்கெட் அணியின் கேப்டன் மோர்தசா(35), அவாமி லீக் கட்சி சார்பில் நரைல்-2 தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். சர்வதேச போட்டியில் தற்போது விளையாடிக்கொண்டிருக்கும் வங்காளதேச கிரிக்கெட் வீரர் ஒருவர் நாடாளுமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டிருப்பது இதுவே முதல் முறையாகும்.

இதற்கிடையே, வங்காளதேச நாடாளுமன்ற தேர்தலில் வெற்றிப் பெற்ற ஷேக் ஹசினாவுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக ஷேக் ஹசினாவை தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசிய நரேந்திரமோடி வங்காள தேசத்தின் வளர்ச்சி திட்டங்களுக்கு இந்தியா தொடர்ந்து ஒத்துழைப்பு வழங்கும் என தெரிவித்தார்.


Next Story