தொடர் விபத்து எதிரொலி: 'போயிங் 737 மேக்ஸ் 8' ரக விமானங்களுக்கு சிங்கப்பூர் தடை


தொடர் விபத்து எதிரொலி: போயிங் 737 மேக்ஸ் 8 ரக விமானங்களுக்கு சிங்கப்பூர் தடை
x
தினத்தந்தி 12 March 2019 4:48 AM GMT (Updated: 12 March 2019 4:48 AM GMT)

சீனா, இந்தோனேசியா, எத்தியோப்பியாவை தொடர்ந்து சிங்கப்பூரும் ‘போயிங் 737 மேக்ஸ் 8’ ரக விமானங்களுக்கு தடை விதித்துள்ளது.

சிங்கப்பூர்,

எத்தியோப்பியா ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான ‘போயிங் 737 மேக்ஸ் 8’ ரக விமானம் அந்நாட்டின் தலைநகர் அடிஸ் அபாபாவில் இருந்து கென்ய தலைநகர் நைரோபிக்கு புறப்பட்டு சென்றது. இந்த விமானத்தில் இந்தியா உள்பட 33 நாடுகளை சேர்ந்த 149 பயணிகளும், 8 விமான ஊழியர்களும் இருந்தனர். விமானம் புறப்பட்டு சென்ற சில நிமிடங்களில் பிஷாப்டு நகருக்கு அருகே விழுந்து நொறுங்கியது.

இந்த கோர விபத்தில் இந்தியர்கள் 4 பேர் உள்பட விமானத்தில் இருந்த 157 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிர் இழந்தனர். விபத்துக்கான காரணம் குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது. இதே ‘போயிங் 737 மேக்ஸ் 8’ ரக விமானம் தான், கடந்த அக்டோபர் 29-ந் தேதி இந்தோனேசிய தலைநகர் ஜகார்த்தாவில் இருந்து புறப்பட்ட சிறிது நேரத்தில் ஜாவா கடலில் விழுந்து விபத்துக்கு உள்ளானது. இந்த விபத்திலும் விமானத்தில் இருந்த 189 பேரும் பலியாகினர்.

‘போயிங் 737 மேக்ஸ் 8’ ரக விமானங்கள் முதல்முறையாக 2017-ம் ஆண்டுதான் பயன்பாட்டுக்கு வந்தன. தொடக்க கட்டத்திலேயே இந்த விமானங்கள் தொடர்ந்து விபத்தில் சிக்கியுள்ளதுடன், இந்தோனேசியா மற்றும் எத்தியோப்பியாவில் நடந்த 2 விபத்துகளுக்கும் சில ஒற்றுமைகள் இருப்பதாகவும் கூறப்படுகிறது. 2 விபத்துகளுக்குமான காரணம் இன்னும் கண்டறியப்படாத நிலையில் அந்த ரக விமானங்களின் பாதுகாப்பு கேள்விக்கு உள்ளாகி உள்ளது.

இந்த நிலையில், தொடர் விபத்துகளை தொடர்ந்து ‘போயிங் 737 மேக்ஸ் 8’ ரக விமானங்களுக்கு சிங்கப்பூர் தடை விதித்துள்ளது. தங்கள் நாட்டு வான் வழியாக இந்த வகை விமானங்கள் செல்வதற்கும் சிங்கப்பூர் தடை விதித்துள்ளது என ஐஏஎன்எஸ் செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.  ஏற்கனவே, சீனா, இந்தோனேசியா, எத்தியோப்பியா ஆகிய நாடுகள் 'போயிங்  737 மேக்ஸ் 8' ரக விமானங்களுக்கு தடை விதித்தது  குறிப்பிடத்தக்கது. 

Next Story