அவசர நிலைக்கு எதிரான நாடாளுமன்ற தீர்மானத்தை நிராகரித்தார் டிரம்ப் - மறுப்பு ஓட்டு உரிமையை பயன்படுத்தினார்


அவசர நிலைக்கு எதிரான நாடாளுமன்ற தீர்மானத்தை நிராகரித்தார் டிரம்ப் - மறுப்பு ஓட்டு உரிமையை பயன்படுத்தினார்
x
தினத்தந்தி 16 March 2019 10:30 PM GMT (Updated: 16 March 2019 7:34 PM GMT)

மறுப்பு ஓட்டு உரிமையை பயன்படுத்தி, அவசர நிலைக்கு எதிரான நாடாளுமன்ற தீர்மானத்தை டிரம்ப் நிராகரித்தார்.

வாஷிங்டன்,

அமெரிக்காவில் மெக்சிகோ எல்லையில் பிரமாண்ட தடுப்புச்சுவர் கட்டும் திட்டத்துக்கு ஜனாதிபதி டிரம்ப் கூறியபடி, 5.7 பில்லியன் டாலர் (சுமார் ரூ.40 ஆயிரம் கோடி) நிதி ஒதுக்க முடியாது என அந்த நாட்டின் நாடாளுமன்றம் கை விரித்தது. இதையடுத்து நிதி ஒதுக்கீடு வகை செய்ய ஏதுவாக டிரம்ப் அவசர நிலையை பிரகடனம் செய்தார். ஆனால் இதை ஜனநாயக கட்சியினரை பெரும்பான்மையாக கொண்ட அமெரிக்க நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் சபை ஏற்றுக்கொள்ள மறுத்து விட்டது. அதே போன்று, டிரம்பின் குடியரசு கட்சியினரை பெரும்பான்மையாக கொண்ட செனட் சபையும் ஏற்க மறுத்து விட்டது. இது டிரம்புக்கு அதிர்ச்சியை அளித்தது. ஏனென்றால், அவரது கட்சியை சேர்ந்த உறுப்பினர்கள் 12 பேர் ஜனநாயக கட்சியினருடன் கரம் கோர்த்து அவசர நிலைக்கு எதிராக செனட் சபையில் வாக்களித்துள்ளனர்.

இந்த நிலையில் நாடாளுமன்றத்தின் இரு சபைகளிலும் அவசர நிலை பிரகடனத்துக்கு எதிராக நிறைவேற்றப்பட்ட தீர்மானம், ஜனாதிபதி டிரம்பின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் அதை அவர் தனது ‘வீட்டோ’ உரிமையை (மறுப்பு ஓட்டு உரிமை) பயன்படுத்தி நிராகரித்து விட்டார். டிரம்ப் முதன்முதலாக இப்போதுதான் தனது மறுப்பு ஓட்டு உரிமையை பயன்படுத்தி உள்ளார்.

இதுபற்றி அவர் கூறுகையில், “ஜனாதிபதி என்னும் முறையில் முதலில் நாட்டை காப்பாற்றுவதுதான் எனது கடமை. நாடாளுமன்றம் ஒரு ஆபத்தான தீர்மானத்தை நிறைவேற்றி உள்ளது. அதை நான் கையெழுத்திட்டு சட்டம் ஆக்கினால், எண்ணற்ற அமெரிக்கர்களுக்கு அது ஆபத்தாக முடிந்து விடும். தீர்மானத்தை நிறைவேற்றுவதற்கு நாடாளுமன்றத்துக்கு சுதந்திரம் இருக்கிறது. அதை மறுப்பது எனது கடமை. அதை மறுப்பதில் பெருமிதம் அடைகிறேன்” என கூறி உள்ளார்.

Next Story