இஸ்ரேல் தேர்தலில் விறுவிறுப்பான ஓட்டு பதிவு பெஞ்சமின் நேட்டன்யாஹூ 5–வது முறையாக பிரதமர் ஆவாரா?


இஸ்ரேல் தேர்தலில் விறுவிறுப்பான ஓட்டு பதிவு பெஞ்சமின் நேட்டன்யாஹூ 5–வது முறையாக பிரதமர் ஆவாரா?
x
தினத்தந்தி 9 April 2019 11:30 PM GMT (Updated: 9 April 2019 7:16 PM GMT)

120 இடங்களைக் கொண்ட இஸ்ரேல் நாடாளுமன்றத்துக்கு நேற்று தேர்தல் நடந்தது. கடந்த 13 ஆண்டுகளாக பிரதமர் பதவியில் நீடிக்கும் பெஞ்சமின் நேட்டன்யாஹூ, 5–வது தடவையாக பதவியை தக்கவைத்துக்கொள்ள போட்டியிடுவதால் இந்த தேர்தல் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

ஜெருசலேம்,

நாடு முழுவதும் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடிகளில் மக்கள் அதிகாலை முதலே நீண்ட வரிசையில் காத்திருந்து ஓட்டு போட்டனர். மக்கள் ஆர்வத்துடன் தங்களின் ஜனநாயக கடமையை ஆற்றியதால் தேர்தலில் விறுவிறுப்பான வாக்கு பதிவு நடந்ததாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இத்தேர்தலில் பெஞ்சமின் நேட்டன்யாஹூ வெற்றிபெற்றால் இஸ்ரேல் வரலாற்றில் அதிக ஆண்டுகள் பிரதமராக பதவி வகித்தவர் என்ற பெருமையை பெறுவார். ஆனால், அவர் மீதான ஊழல் வழக்குகள் இந்த வெற்றிக்கு சவாலாக காணப்படுகின்றன.

அத்துடன், யூதர்களுக்கு ஆதரவான வலதுசாரி கட்சியான லிகுட் கட்சி சார்பில் களம் இறங்கி உள்ள பெஞ்சமின் நேட்டன்யாஹூவுக்கு, மையவாத நீல வெள்ளை கூட்டணியின் தலைவரான ஓய்வுபெற்ற ஜெனரல் பென்னி கான்ட்ஸ் கடும் சவாலாக உள்ளார்.

தான் வெற்றிபெற்றால் நாட்டில் தூய்மையான அரசியலை கட்டமைப்பேன் என்றும், நாட்டின் பாதுகாப்பை பலப்படுத்துவேன் என்றும் பென்னி கான்ட்ஸ் குறிப்பிட்டுள்ளார். அதேபோல் தான் மீண்டும் பிரதமரானால் மேற்குக்கரையிலுள்ள யூதக்குடியேற்றங்களை இஸ்ரேலுடன் இணைப்பதாக பெஞ்சமின் நேட்டன்யாஹூ வாக்குறுதி அளித்து இருக்கிறார்.

எப்படி இருந்தாலும், இரு தரப்பிற்கும் பெரும்பான்மை கிடைக்காது என்றும் கூட்டணி அரசு அமைவதற்கே சாத்தியக்கூறுகள் அதிகம் இருப்பதாகவும் கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன.


Next Story