பாகிஸ்தானில் மீண்டும் குண்டுவெடிப்பு: 4 பேர் பலி, 11 பேர் காயம்


பாகிஸ்தானில் மீண்டும் குண்டுவெடிப்பு: 4 பேர் பலி, 11 பேர் காயம்
x
தினத்தந்தி 14 May 2019 5:28 AM GMT (Updated: 14 May 2019 5:28 AM GMT)

பாகிஸ்தானின் பலோசிஸ்தான் மாகாணத்தில் போலீசாரை குறிவைத்து வெடிகுண்டு தாக்குதல் நிகழ்த்தப்பட்டுள்ளது.

கராச்சி, 

பாகிஸ்தானின் பதற்றம் நிறைந்த பலோசிஸ்தான் மாகாணத்தின் தலைநகர் குவெட்டாவை ஒட்டிய நகரத்தில், நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில் 4 போலீஸார் பலியாகினர். 11 பேர் காயம் அடைந்தனர். உள்ளூரில் உள்ள மசூதியில் தொழுகை நடத்த மக்கள் பெருமளவில் நேற்று இரவு கூடினர். அந்த மக்களுக்கு பாதுகாப்பு அளிப்பதற்காக போலீசார் வேனில் வந்தனர். அப்போது, ஏற்கனவே வெடிகுண்டுகளுடன் நிறுத்தப்பட்டு இருந்த மோட்டார் சைக்கிளை ரிமோட் கட்டுப்பாடு மூலம் வெடிக்கச் செய்து அடையாளம் தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தினர். 

போலீஸ் வேனை குறிவைத்து நடத்தப்பட்ட இந்த தாக்குதலில், 4  போலீசார் உடல் சிதறி பலியாகினர். 11 பேர் காயம் அடைந்தனர். காயம் அடைந்தவரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக குவெட்டா  காவல்துறை அதிகாரி தெரிவித்தார். மூன்று தினங்களில் பாகிஸ்தானின் குவெட்டா நகரில் நடத்தப்படும் 2-வது மிகப்பெரிய தாக்குதல் இதுவாகும். போலீசாரை குறிவைத்து நடத்தப்பட்ட இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கடும் கண்டனம் தெரிவித்தார். 

கடந்த சில தினங்களுக்கு முன் பலோசிஸ்தான் மாகாணத்தில் உள்ள கவாதர் துறைமுக நகரத்தில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் தங்கும் சொகுசு விடுதிக்குள்  துப்பாக்கியுடன் பயங்கரவாதிகள் புகுந்து கண்மூடித்தனமாக சுடத் தொடங்கினர். அவர்களைத் தடுக்க முயன்ற பாதுகாவலரை முதலில் சுட்டுக் கொன்றனர். பின்னர், அவர்களின் துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து, பயங்கரவாதத் தடுப்புப் பிரிவு வீரர்கள் ஹோட்டலுக்குள் புகுந்து பயங்கரவாதிகளை சுட்டு வீழ்த்தினர் என்று அந்த போலீஸார் தெரிவித்தனர்.

Next Story