நன்றியுணர்வை நிரூபித்த நாய்; கார் விபத்தில் சிக்கி 3 நாட்களாக தவித்த பெண் மீட்பு


நன்றியுணர்வை நிரூபித்த நாய்; கார் விபத்தில் சிக்கி 3 நாட்களாக தவித்த பெண் மீட்பு
x
தினத்தந்தி 20 Jun 2019 12:39 PM GMT (Updated: 20 Jun 2019 12:39 PM GMT)

கார் விபத்தில் சிக்கி 3 நாட்களாக பள்ளத்தில் கிடந்த பெண்ணை மீட்க அவரது வளர்ப்பு நாய் உதவியுள்ளது.

நியூசிலாந்து நாட்டில் வெல்லிங்டன் பகுதியில் மாஸ்டர்டன் என்ற இடத்தில் கெர்ரி ஜோர்டான் (வயது 63) என்ற பெண் வசித்து வருகிறார்.  இவர் பார்டர் கோலி வகையை சேர்ந்த நாய் ஒன்றை பேட் என பெயரிட்டு தனது மகன் போல் வளர்த்து வருகிறார்.

கடந்த வியாழ கிழமை இவர் தனது வளர்ப்பு நாயுடன் வடக்கு பால்மர்ஸ்டன் பகுதியை நோக்கி காரில் சென்றுள்ளார்.  அந்த கார் பஹியாதுவா என்ற பகுதியில் செல்லும்பொழுது திடீரென 45 மீட்டர் ஆழமுள்ள பள்ளத்தில் கவிழ்ந்தது.

இந்த விபத்தில் கால், நெஞ்சு மற்றும் மார்பெலும்பு ஆகிய பகுதிகளில் கெர்ரிக்கு படுகாயமேற்பட்டது.  இதனால் அவரால் எதுவும் செய்ய முடியவில்லை.  3 இரவுகளை அந்த பள்ளத்திலேயே அவர் கழித்துள்ளார்.  அவரை வளர்ப்பு நாய் பேட் காவல் காத்துள்ளது.  அவரை சுற்றி சுற்றி வந்து ஊக்கமளித்து கொண்டே இருந்துள்ளது.

அதிர்ஷ்டவச முறையில், 2 பேர் அந்த வழியே வந்துள்ளனர்.  அவர்களை நோக்கி பேட் குரைத்துள்ளது.  இதனால் அங்கு வந்த அவர்கள் சம்பவம் பற்றி அறிந்து அதிகாரிகளுக்கு தெரிவித்துள்ளனர்.  இதனை அடுத்து ஹெலிகாப்டர் ஒன்று உடனடியாக வந்து கெர்ரியை மீட்டு வடக்கு பால்மர்ஸ்டன் பகுதியிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றது.  சிகிச்சைக்கு பின் அவர் உடல்நலம் தேறி வருகிறார்.

Next Story