பிறந்த நகரமான ஹாங்காங்கையும் பிறந்த நாடான சீனாவையும் ஒரே மாதிரி நேசிக்கிறேன் - ஜாக்கிசான்


பிறந்த நகரமான ஹாங்காங்கையும் பிறந்த நாடான சீனாவையும் ஒரே மாதிரி நேசிக்கிறேன் - ஜாக்கிசான்
x
தினத்தந்தி 15 Aug 2019 6:28 AM GMT (Updated: 15 Aug 2019 6:28 AM GMT)

பிறந்த நகரமான ஹாங்காங்கையும் பிறந்த நாடான சீனாவையும் ஒரே மாதிரி விரும்புவதாக ஜாக்கிசான் தனது பெருமிதத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

ஹாங்காங் வாசிகளை சீனாவுக்கு நாடு கடத்தி விசாரிக்க அனுமதிக்கும் சட்டத்தை முற்றிலும் கைவிட வலியுறுத்தி போராட்டம் நடந்து வருகிறது.போராட்டங்களின் போது போலீசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே வன்முறை மூள்வதால் ஹாங்காங் கலவர பூமியாக மாறி வருகிறது.

கைதிகள் பரிமாற்ற சட்டத்திருத்த மசோதாவை முழுவதுமாக கைவிடுவது மட்டும் அல்லாமல், குற்ற வழக்குகளில் சிக்குபவர்களுக்கு வெளிப் படையான விசாரணை, கலவர குற்றச்சாட்டுக்கு ஆளான ஜனநாயக ஆதரவாளர்களுக்கு பொது மன்னிப்பு மற்றும் ஹாங்காங்கின் நிர்வாக தலைவர் கேரி லாம் ராஜினாமா என போராட்டக்காரர்கள் தங்களின் கோரிக்கைகளை விரிவுபடுத்தி இருப்பதால் போராட்டத்துக்கு ஆதரவு பெருகி வருகிறது.

இதனால் ஆரம்பத்தில் வார இறுதிநாட்களில் மட்டும் நடந்து வந்த போராட்டம், தற்போது வாரத்தின் மற்ற நாட்களிலும் தொடர்ந்து வருகிறது.

இதற்கிடையில் ஹாங்காங் சர்வதேச விமான நிலையத்தில் அமைதியான முறையில் உள்ளிருப்பு போராட்டம் நடத்தியவர்கள் மீது போலீசார் கண்மூடித்தனமான தாக்குதல் நடத்தியது போராட்டக்காரர்கள் இடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது. ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் விமான நிலையத்தை முற்றுகையிட்டனர்.

இதனால் 2 நாட்களுக்கு விமான சேவை முழுவதுமாக முடங்கி விமான நிலையம் மூடப்பட்டது. இதன் மூலம் ஹாங்காங் போராட்டக் காரர்கள் சர்வதேச கவனத்தை ஈர்த்துள்ளனர்.

எனினும் போராட்டம் மூலமாக ஹாங்காங் மீண்டு வர முடியாத படுகுழியில் தள்ளப்பட்டு விடும் என நிர்வாக தலைவர் கேரி லாம் போராட்டக்காரர்களுக்கு எச்சரிக்கை விடுத்தார்.

இந்த நிலையில் அதிதீவிர மக்கள் போராட்டம் நடந்து வரும் ஹாங்காங்கில் அமைதி நிலை திரும்ப வேண்டும் என்று பிரபல  நடிகர் ஜாக்கிசான் விருப்பம் தெரிவித்துள்ளார்.

போராட்டம் குறித்து தனது கவலையை தெரிவித்துள்ளார் உலகப் புகழ் பெற்ற நடிகர் ஜாக்கிசான். 5 நட்சத்திரம் பொறித்த சிவப்பு சீனக் கொடியின் மகத்துவத்தை காக்கும் வகையில் நடந்து வரும் பிரச்சாரத்தில் இணையம் வாயிலாக பங்கேற்றுள்ள ஜாக்கிசான், தான் பிறந்தது ஹாங்காங் என்றாலும் உலக அளவில் சீனாவை சேர்ந்தவராகவே சிறப்பிக்கப்படுவதாக தெரிவித்துள்ளார்.

தன்னுடைய பிறந்த நகரமான ஹாங்காங்கையும் பிறந்த நாடான சீனாவையும் ஒரே மாதிரி விரும்புவதாக ஜாக்கிசான் தனது பெருமிதத்தை வெளிப்படுத்தியுள்ளார். பாதுகாப்பு, நிலைப்புத்தன்மை மற்றும் அமைதியை இழக்கும் வரை அதன் அருமைகள் புரியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இது போல் ஹாங்காங் நடிகர் டோனி லியுங் கா-ஃபையும் போராட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து உள்ளார்.

Next Story