இங்கிலாந்தில் சிறைபிடிக்கப்பட்ட ஈரான் எண்ணெய் கப்பல் விடுவிப்பு


இங்கிலாந்தில் சிறைபிடிக்கப்பட்ட ஈரான் எண்ணெய் கப்பல் விடுவிப்பு
x
தினத்தந்தி 16 Aug 2019 11:00 PM GMT (Updated: 16 Aug 2019 11:00 PM GMT)

இங்கிலாந்தில் சிறைபிடிக்கப்பட்ட ஈரான் எண்ணெய் கப்பல் விடுவிக்கப்பட்டது.

ஜிப்ரால்டர்,

ஈரான் நாட்டின் எண்ணெய் கப்பல் ‘கிரேஸ்-1’, கடந்த மாதம் 4-ந் தேதி இங்கிலாந்தின் கட்டுப்பாட்டில் உள்ள ஜிப்ரால்டர் பிராந்திய கடல் பகுதியில் சென்றபோது சிறைபிடிக்கப்பட்டது. ஐரோப்பிய கூட்டமைப்பின் பொருளாதார தடையை மீறி, சிரியாவுக்கு கச்சா எண்ணெய் கொண்டு செல்லப்படுவதாக கூறி, அந்த கப்பலை சிறைபிடித்தனர்.

இந்த விவகாரத்தில் ஈரானுக்கும், இங்கிலாந்துக்கும் இடையே மோதல் வெடித்தது. தங்களது கப்பலை விடுவிக்காவிட்டால் மோசமான பின்விளைவுகளை சந்திக்க நேரிடும் என ஈரான் எச்சரித்தது. ஆனால், இந்த விவகாரத்தை ஜிப்ரால்டர் அரசுதான் கையாள்வதாக இங்கிலாந்து கூறிவிட்டது. எனினும் இதற்கு பதிலடியாக, பாரசீக வளைகுடா பகுதியில் ஹோர்முஸ் ஜலசந்தியில் சென்ற இங்கிலாந்து நாட்டின் எண்ணெய் கப்பலை ஈரான் சிறைபிடித்தது. இதனால் ஈரான்-இங்கிலாந்து இடையிலான மோதல் மேலும் வலுத்தது. இருநாடுகளும் சிறைபிடிக்கப்பட்ட கப்பல்களை உடனடியாக விடுவிக்க பரஸ்பர கோரிக்கையை முன்வைத்தன.

இந்த நிலையில், ஈரானின் ‘கிரேஸ்-1’ எண்ணெய் கப்பலை ஜிப்ரால்டர் அரசு நேற்று விடுவித்தது. சிரியாவில் தனது கப்பல் சரக்குகளை வெளியேற்றாது என்று ஈரானிடமிருந்து எழுத்துப்பூர்வ உத்தரவாதம் கிடைத்ததை தொடர்ந்து கப்பல் விடுவிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

முன்னதாக சிறைபிடிக்கப்பட்ட ஈரானின் எண்ணெய் கப்பலை விடுவிக்கக்கூடாது என்று உத்தரவிடக்கோரி, ஜிப்ரால்டர் நாட்டு சுப்ரீம் கோர்ட்டில் அமெரிக்கா வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு தொடரப்பட்ட சில மணி நேரத்தில் கப்பல் விடுவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.


Next Story