தடையை மீறி விளையாட்டு மைதானத்துக்கு சென்ற வழக்கு: தண்டனைக்கு பயந்து, கோர்ட்டில் பெண் தீக்குளித்து சாவு


தடையை மீறி விளையாட்டு மைதானத்துக்கு சென்ற வழக்கு: தண்டனைக்கு பயந்து, கோர்ட்டில் பெண் தீக்குளித்து சாவு
x
தினத்தந்தி 11 Sep 2019 11:30 PM GMT (Updated: 11 Sep 2019 7:44 PM GMT)

ஈரானில் தடையை மீறி விளையாட்டு மைதானத்துக்கு சென்ற வழக்கில் கைது செய்யப்பட்ட பெண், தண்டனைக்கு பயந்து, கோர்ட்டுக்குள்ளேயே தீக்குளித்து உயிர் இழந்தார்.

டெஹ்ரான்,

ஈரானில் பெண்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் உள்ளன. குறிப்பாக ஆண்கள் பங்கேற்கும் கால்பந்து உள்ளிட்ட விளையாட்டு போட்டிகளை மைதானத்துக்கு சென்று பார்க்க பெண்களுக்கு அனுமதி கிடையாது. இதனை மீறும் பெண்கள் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்படுவார்கள்.

இந்த தடையை நீக்கி பெண்களையும் கால்பந்து போட்டிகளில் பார்வையாளர்களாக அனுமதிக்க வேண்டும் என சர்வதேச கால்பந்து கூட்டமைப்பு ஈரானை பல ஆண்டுகளாக வலியுறுத்தி வருகிறது.

இந்த நிலையில், கடந்த மார்ச் மாதம் தலைநகர் டெஹ்ரானில் கால்பந்து போட்டி நடைபெற்றது.

இதில் தனக்கு விருப்பமான ஈரானின் ‘எஸ்டேக்லால்’ அணி விளையாடியதால் இந்த ஆட்டத்தை நேரில் பார்க்கவேண்டுமென சஹர் கொடயாரி (வயது 30) என்ற பெண் நினைத்தார்.

இதற்காக அவர் ஆண் போல் வேடமிட்டு மைதானத்துக்கு சென்றார். ஆனால் மைதானத்தில் இருந்த பாதுகாவலர்கள் அவரை பெண் என அடையாளம் கண்டுவிட்டனர்.

இதையடுத்து, தடையை மீறி மைதானத்துக்குள் நுழைய முயன்ற குற்றச்சாட்டில் அவர் கைது செய்யப்பட்டார். சிறையில் அடைக்கப்பட்ட 3 நாட்களுக்கு பிறகு அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இந்த நிலையில், சஹர் கொடயாரி மீதான வழக்கு டெஹ்ரான் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. இதற்காக அவர் கோர்ட்டுக்கு வந்தார்.

ஆனால் குடும்ப பிரச்சினை காரணமாக நீதிபதி பணிக்கு வராததால் விசாரணை ஒத்திவைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, சஹர் கொடயாரி கோர்ட்டில் இருந்து புறப்பட்டு சென்றார்.

ஆனால் அவர் தனது செல்போனை கோர்ட்டில் மறந்து வைத்துவிட்டார். அதை எடுப்பதற்காக அவர் மீண்டும் கோர்ட்டுக்கு வந்தார்.

அப்போது அங்கிருந்த சிலர் சஹர் கொடயாரி மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு 6 மாதம் முதல் 2 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்கும் என பேசிக்கொண்டிருந்தனர். இதனை கேட்டு சஹர் கொடயாரி அச்சம் அடைந்தார்.

ஒரு கட்டத்தில் அவர், சிறைக்கு சென்று கஷ்டப்படுவதை விட உயிரை மாய்த்துக்கொள்வது நல்லது என்ற முடிவுக்கு வந்தார். இதையடுத்து கோர்ட்டுக்குள்ளேயே அவர் தனது உடலில் தீவைத்துக்கொண்டார்.

இதனால் அங்கு பெரும் பதற்றம் உருவானது. அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் சஹர் கொடயாரி உடலில் எரிந்த தீயை அணைத்து, அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

90 சதவீத தீக்காயங்களுடன் சிகிச்சைப்பெற்று வந்த சஹர் கொடயாரி, சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த அந்நாட்டின் பெண்கள் மற்றும் குடும்ப விவகார துறை துணை தலைவர் மசூமெஹ் எப்டெக்கர் உத்தரவிட்டுள்ளார்.


Next Story