மது குடிப்பதைத் தடுக்க மனைவியால் சிறை வைக்கப்பட்டவர் உயிரிழந்தார்.
லண்டன்,
இங்கிலாந்துக்கு உட்பட்ட வேல்ஸ் பிராந்தியத்தை சேர்ந்தவர் கிம் டான்டர் (வயது 50). 3 குழந்தைகளுக்கு தந்தையான இவர் அண்மை காலமாக குடி பழக்கத்துக்கு அடிமையாகிவிட்டார். இந்த நிலையில் கிம் டான்டரின் மனைவி குடும்பத்தோடு ‘ஷாப்பிங்’ செல்ல முடிவு செய்தார். ஆனால் கணவரை அழைத்து சென்றால் தன்னை ஏமாற்றிவிட்டு மது குடிக்க சென்றுவிடுவாரோ என அவர் பயந்தார். எனவே அவர் கணவர் கிம் டான்டரை, வீட்டு அருகில் உள்ள வாகனங்கள் நிறுத்தும் அறையில் சிறைவைத்து விட்டு, குழந்தைகளை அழைத்துக்கொண்டு ‘ஷாப்பிங்’ சென்றார்.
அவர்கள் ஒரு மணி நேரம் கழித்து வீடு திரும்பி வந்து பார்க்கையில், சிறைவைக்கப்பட்ட கிம் டான்டர் மயங்கிக் கிடந்தார். இதையடுத்து, தகவலின் பேரில் மருத்துவர்கள் விரைந்து வந்து, பரிசோதித்தபோது அவர் ஏற்கனவே இறந்துவிட்டது தெரியவந்தது.
அந்த அறையில் மோட்டார் சைக்கிளை கிம் டான்டர் இயக்கியபோது அதில் இருந்து வெளியேறிய புகையினால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு அவர் இறந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.