பரபரப்பான நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாகின - இஸ்ரேலில் ஆட்சி அமைப்பது யார்?


பரபரப்பான நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாகின - இஸ்ரேலில் ஆட்சி அமைப்பது யார்?
x
தினத்தந்தி 18 Sep 2019 11:30 PM GMT (Updated: 18 Sep 2019 8:23 PM GMT)

பரபரப்பான நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் வெளியானநிலையில், இஸ்ரேலில் ஆட்சி அமைப்பது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.

ஜெருசலேம்,

இஸ்ரேலில் நாடாளுமன்ற தேர்தல் நடந்து முடிந்ததை தொடர்ந்து முடிவுகள் வெளியாகின. இதில் இரு முக்கிய கட்சிகளும் சம எண்ணிக்கையில் தொகுதிகளை கைப்பற்றியதால் அங்கு ஆட்சி அமைக்கப்போவது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.

இஸ்ரேலில் கடந்த 2009-ம் ஆண்டு முதல் பெஞ்சமின் நேட்டன்யாஹூ பிரதமராக இருந்து வருகிறார். இவரது ஆட்சி காலம் முடிவடைந்ததை தொடர்ந்து, 120 இடங்களை கொண்ட இஸ்ரேல் நாடாளுமன்றத்துக்கு கடந்த ஏப்ரல் மாதம் 9-ந்தேதி தேர்தல் நடந்தது.

இதில் பெஞ்சமின் நேட்டன்யாஹூவின் வலதுசாரி கட்சியான ‘லிகுட்’ கட்சி அதிகபட்சமாக 37 இடங்களை கைப்பற்றியது. எனினும் ஆட்சியமைப்பதற்கு 61 இடங்கள் தேவைப்பட்டதால் பழமைவாத கட்சியான ஐக்கிய டோரா யூத கட்சி உள்ளிட்ட சிறிய கட்சிகளுடன் கூட்டணி ஏற்படுத்தினார்.

எனினும், இஸ்ரேல் ராணுவத்தில் கட்டாய சேவையாற்றுவதில் இருந்து பழமைவாத யூத மதப் பள்ளி மாணவர்களுக்கு விலக்கு அளிக்கும் விவகாரத்தில் பெய்டனு என்ற கட்சி பெஞ்சமின் நேட்டன்யாஹூ அரசுக்கு அளித்து வந்த ஆதரவை திரும்பப் பெற்றது.

இதனால் நாடாளுமன்றத்தில் அவருக்கான பெரும்பான்மை பலம் 60 ஆக குறைந்தது. எனவே நாடாளுமன்றத்தை கலைத்துவிட்டு திடீர் தேர்தலை பெஞ்சமின் நேட்டன்யாஹூ அறிவித்தார். இஸ்ரேல் வரலாற்றிலேயே, தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு, மறுதேர்தல் நடத்தப்படுவது இதுவே முதல் முறையாகும்.

அதன்படி இஸ்ரேலில் கடந்த 5 மாதங்களில் 2-வது முறையாக நேற்று முன்தினம் பொதுத்தேர்தல் நடந்து முடிந்தது. இந்த தேர்தலில் சுமார் 92 சதவீத வாக்குகள் பதிவானது.

தேர்தலுக்கு முன்னர் வெளிவந்த கருத்துக்கணிப்பு முடிவுகளில் பிரதமரின் ‘லிகுட்’ கட்சிக்கும் முன்னாள் ராணுவ தளபதி பென்னி கன்ட்ஸ் தலைமையிலான ‘புளூ அன்ட் ஒயிட்’ கட்சிக்கும் இடையில் கடுமையான போட்டி நிலவும் என்று தகவல்கள் வெளியாகின.

இந்த நிலையில் தேர்தல் முடிவுகள் நேற்று வெளியாகின. இதில் பெஞ்சமின் நேட்டன்யாஹூவின் ‘லிகுட்’ கட்சியும், பென்னி கன்ட்சின் ‘புளூ அன்ட் ஒயிட்’ கட்சியும் தலா 32 இடங்களில் வெற்றி பெற்றன.

இதனால் ஆட்சி அமைப்பது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. மேலும் புதிய அரசை அமைப்பதில் சிறிய கட்சிகள் முக்கிய பங்கு வகிக்கும் என தெரிகிறது.

குறிப்பாக நாடாளுமன்றம் கலைக்கப்படுவதற்கு காரணமாக இருந்த பெய்டனு கட்சிதான் யார் ஆட்சி அமைக்க வேண்டும்? என்பதை முடிவு செய்யும் என கூறப்படுகிறது.

ஏனெனில் இருகட்சிகளுக்குமே பெரும்பான்மை இல்லாததால் பெய்டனு கட்சியின் ஆதரவை யார் பெறுகிறார்களோ அவர்களே ஆட்சியமைக்க முடியும் என்கிற சூழல் உருவாகி உள்ளது.

எனவே அக்கட்சியின் ஆதரவை பெற பெஞ்சமின் நேட்டன்யாஹூ மற்றும் பென்னி கன்ட்ஸ் ஆகிய இருவருமே தீவிர முனைப்பு காட்டி வருகின்றனர்.

இதற்கிடையே பிரதமர் பெஞ்சமின் நேட்டன்யாஹூ, “ஒரு வலுவான அரசாங்கத்தை அமைக்க கூட்டணி கட்சி தலைவர்களுடன் பேச்சுவார்த்தையை தொடங்கிவிட்டேன்” என கூறி உள்ளார்.

அதே போல் இஸ்ரேலில் ஒரு ஒற்றுமையான அரசை உருவாக்க பெய்டனு கட்சியின் தலைவரான அவிக்டர் லிபெர்மன் உள்பட அனைத்து கட்சித் தலைவர்களுடனும் பேசத் தயாராக இருப்பதாக ‘புளூ அன்ட் ஒயிட்’ கட்சி தலைவர் பென்னி கன்ட்ஸ் தெரிவித்துள்ளார்.

எனவே கூட்டணி கட்சிகளின் ஆதரவை பெற்று, இஸ்ரேலில் ஆட்சியமைக்கப்போவது யார் என்கிற பரபரப்பு நிலவுகிறது.


Next Story