விக்ரம் லேண்டரை கண்டுபிடிக்க முடியவில்லை: நாசா


விக்ரம் லேண்டரை கண்டுபிடிக்க முடியவில்லை: நாசா
x
தினத்தந்தி 27 Sep 2019 3:00 AM GMT (Updated: 27 Sep 2019 3:00 AM GMT)

விக்ரம் லேண்டரை கண்டுபிடிக்க முடியவில்லை என்று அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா தெரிவித்துள்ளது.

நியூயார்க், 

உலகின் எந்தவொரு நாட்டினாலும் இதுவரை ஆராய்ந்து அறியப்படாத நிலவின் தென் துருவப்பகுதிக்கு செல்வதற்காக சந்திரயான்-2 என்ற விண்கல திட்டத்தை இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பு ‘இஸ்ரோ’ தீட்டி செயல்படுத்தியது.

கடந்த 7-ந் தேதி திட்டமிட்டபடி சந்திரயான்-2 விண்கலத்தின் விக்ரம் லேண்டர், நிலவின் தென்துருவப்பகுதியில் மெல்ல மெல்ல தரை இறங்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தரை இறங்க வேண்டிய இடத்தில் இருந்து 2.1 கி.மீ. தொலைவில் இருந்தபோது, விக்ரம் லேண்டரின் தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டு விட்டது பேரதிர்ச்சியாக அமைந்தது.

அதைத்தொடர்ந்து விக்ரம் லேண்டர், அதன் 4 கால்களில் நிற்காமல், ஒரே துண்டாக விழுந்து சாய்ந்து கிடந்தது தெரிய வந்தது. அதை சந்திரயான்-2 ஆர்பிட்டர் எடுத்து அனுப்பிய படங்கள் உறுதி செய்தன.

அதைத்தொடர்ந்து விக்ரம் லேண்டருடன் தகவல் தொடர்பை மீண்டும் ஏற்படுத்தும் முயற்சியில் இஸ்ரோவும், அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி அமைப்பு நாசாவும் ஈடுபட்டன. ஆனால் அந்த முயற்சி வெற்றி பெறவில்லை. 14 நாட்கள் ஆன நிலையில் கடந்த 20-ந் தேதி அதன் ஆயுளும் முடிந்து விட்டது.

இந்த நிலையில், விக்ரம் லேண்டர் ஹார்டு லேண்டிங் ஆன இடத்தை நாசாவின்  ஆர்பிட்டர் புகைப்படம் எடுத்துள்ளது. எனினும் விக்ரம் லேண்டரை கண்டறிய முடியவில்லை என்று நாசா தெரிவித்துள்ளது. ஆர்பிட்டர் எடுத்த புகைப்படங்களில் விக்ரம் லேண்டர் இருக்கும் இடம் தெரியவில்லை என்று நாசா வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. 


Next Story