ஜப்பானை தாக்கிய ‘ஹகிபிஸ்’ புயல்: 2 ஆயிரம் விமானங்கள் ரத்து, 42 லட்சம் பேர் வெளியேற்றம்


ஜப்பானை தாக்கிய ‘ஹகிபிஸ்’ புயல்: 2 ஆயிரம் விமானங்கள் ரத்து, 42 லட்சம் பேர் வெளியேற்றம்
x
தினத்தந்தி 12 Oct 2019 11:15 PM GMT (Updated: 12 Oct 2019 8:35 PM GMT)

ஜப்பானில் நேற்று ‘ஹகிபிஸ்‘ புயல் தாக்கியது. இதன் காரணமாக 2 ஆயிரம் விமானங்கள் ரத்து செய்யப்பட்டதுடன், 42 லட்சம் பேர் வெளியேற்றப்பட்டனர்.

டோக்கியோ,

ஜப்பானை அச்சுறுத்தி வந்த ‘ஹகிபிஸ்‘ புயல் நேற்று தாக்கியது. தலைநகர் டோக்கியோவுக்கு தென்மேற்கில் உள்ள இசு தீபகற்பத்தில், உள்ளூர் நேரப்படி இரவு 7 மணிக்கு புயல் கரையை கடந்தது. இதனால், பலத்த காற்றுடன் மழை கொட்டித் தீர்த்தது.

கடந்த 60 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய புயலாக இது கருதப்படுகிறது. கடந்த சில நாட்களாகவே மழை பெய்து வந்ததால், வெள்ளப்பெருக்கும், நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது. டோக்கியோ, மிய், ஷிசுவோகா, குன்மா, சிபா உள்பட 7 பிராந்தியங்களில் வசிக்கும் சுமார் 42 லட்சம்பேர் ஏற்கனவே பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டு உள்ளனர்.

டோக்கியோவில் ஓட்டல்கள், கடைகள், மருந்தகங்கள் மூடப்பட்டு இருந்தன. முன்னெச்சரிக்கையாக, ஜப்பான் முழுவதும் சுமார் 2 ஆயிரம் சர்வதேச, உள்நாட்டு விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

இதற்கிடையே, சிபா பிராந்தியத்தில் நேற்று நிலநடுக்கம் ஏற்பட்டது. அது ரிக்டர் அளவுகோலில் 5.7 ஆக பதிவானது.

Next Story