நேபாளத்தில் கோர விபத்து: ஆற்றுக்குள் பஸ் விழுந்த விபத்தில் பலி எண்ணிக்கை 17 ஆக உயர்வு


நேபாளத்தில் கோர விபத்து: ஆற்றுக்குள் பஸ் விழுந்த விபத்தில் பலி எண்ணிக்கை 17 ஆக உயர்வு
x
தினத்தந்தி 4 Nov 2019 11:00 PM GMT (Updated: 4 Nov 2019 11:00 PM GMT)

நேபாளத்தில் ஆற்றுக்குள் பஸ் விழுந்த விபத்தில் பலி எண்ணிக்கை 17 ஆக உயர்ந்துள்ளது.

காத்மாண்டு,

நேபாள நாட்டின் டோலாகா மாவட்டத்தில் இருந்து தலை நகர் காத்மாண்டுவுக்கு நேற்று முன்தினம் பஸ் ஒன்று புறப்பட்டு சென்றது.

பஸ்சில் சிறுவர்கள், பெண்கள் உள்பட 70-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். சிந்துபால்சவுக் மாவட்டத்தில் உள்ள மலைப்பாங்கான சாலையில் பஸ் வேகமாக சென்றுகொண்டிருந்தது.

அப்போது, பஸ் திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்தது. இதனால் தறிக்கெட்டு ஓடிய பஸ், சாலையில் இருந்து விலகி 165 அடி ஆழத்தில் உள்ள சன்கோஷி ஆற்றுக்குள் விழுந்தது.

ஆற்றில் ஆழம் அதிகமாக இருந்ததால் பஸ் நீரில் மூழ்கியது. விபத்து குறித்து தெரியவந்ததும் அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் விரைந்து சென்று, தீவிர மீட்பு பணியில் இறங்கினர்.

மேலும் அவர்கள் அளித்த தகவலின் பேரில் போலீசார் மற்றும் மீட்பு குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். அவர்கள் மீட்பு படகுகளில் பஸ்சுக்குள் சிக்கியிருந்தவர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

எனினும் 3 மாத பச்சிளம் குழந்தை மற்றும் 6 சிறுவர்கள் உள்பட 15 பேரின் உடல்கள் முதலில் மீட்கப்பட்டது. அதைத்தொடர்ந்து மேலும் இரண்டு உடல்கள் மீட்கப்பட்டதால் பலி எண்ணிக்கை 17 ஆக உயர்ந்தது. மேலும் படுகாயங்களுடன் 56 பேர் மீட்கப்பட்டனர்.

அவர்கள் உடனடியாக ஆம்புலன்சுகள் மூலம் அருகில் உள்ள மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைக்கப்பட்டனர். அவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் உயரலாம் என அஞ்சப்படுகிறது.

மேலும் ஆற்றுக்குள் பஸ் விழுந்து விபத்துக்குள்ளானதில் சிலர் மாயமாகி இருக்கிறார்கள். அவர்கள் கதி என்ன? என்பது தெரியவில்லை. அவர்களை தேடும் பணி முடுக்கிவிடப்பட்டு உள்ளது.

விபத்துக்கான காரணம் என்ன? என்பது உடனடியாக தெரியவில்லை. இது குறித்து தீவிரமாக விசாரிக்கப்படுகிறது.

கடந்த மாதம் தலைநகர் காத்மாண்டுவுக்கு அருகே அளவுக்கு அதிகமான ஆட்களை ஏற்றி சென்ற பஸ், பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 11 பேர் பலியானதும், 100-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்ததும் நினைவுகூரத்தக்கது.


Next Story