வங்காளதேசத்தில் கோர விபத்து: 2 எக்ஸ்பிரஸ் ரெயில்கள் நேருக்கு நேர் மோதல் - 16 பேர் உடல் நசுங்கி பலி


வங்காளதேசத்தில் கோர விபத்து: 2 எக்ஸ்பிரஸ் ரெயில்கள் நேருக்கு நேர் மோதல் - 16 பேர் உடல் நசுங்கி பலி
x
தினத்தந்தி 12 Nov 2019 7:23 AM GMT (Updated: 12 Nov 2019 7:21 PM GMT)

வங்காளதேசத்தில் 2 எக்ஸ்பிரஸ் ரெயில்கள் நேருக்கு நேர் மோதியதில் 16 பேர் பலியாகினர்.

டாக்கா,

வங்காளதேசத்தில் 2 எக்ஸ்பிரஸ் ரெயில்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் 16 பேர் உடல் நசுங்கி உயிர் இழந்தனர்.

வங்காளதேசத்தின் வட கிழக்கு பகுதியில் உள்ள சில்ஹெட் நகரில் இருந்து, துறைமுக நகரான சிட்டகாங்குக்கு ‘உதயன் எக்ஸ்பிரஸ்’ ரெயில் நேற்று முன்தினம் இரவு புறப்பட்டது.

அதே போல் சிட்டகாங் நகரில் இருந்து தலைநகர் டாக்காவுக்கு ‘டர்னா நிஷிதா’ எக்ஸ்பிரஸ் ரெயில் புறப்பட்டு சென்றது. 200-க்கும் அதிகமான பயணிகளுடன் 2 ரெயில் களும் எதிர் எதிர் திசையில் பயணித்தன.

இந்த நிலையில் நேற்று அதிகாலை 3.30 மணி அளவில் பிராமன்பாரியா மாவட்டத்தில் உள்ள மோன்டோபாக் ரெயில் நிலையத்துக்கு ‘உதயன் எக்ஸ்பிரஸ்’ ரெயில் வந்தது.

அதே நேரத்தில் ‘டர்னா நிஷிதா எக்ஸ்பிரஸ்’ ரெயிலும் மோன்டோபாக் ரெயில் நிலையம் நோக்கி வந்து கொண்டிருந்தது.

இதற்கிடையே ‘உதயன் எக்ஸ்பிரஸ்’ ரெயில் ஏற்கனவே நிறுத்தப்பட்டிருந்த தண்டவாளத்தில் இருந்து மற்றொரு தண்டவாளத்துக்கு சென்று கொண்டிருந்தது.

அப்போது யாரும் எதிர் பாராத வகையில் ‘டர்னா நிஷிதா எக்ஸ்பிரஸ்’ ரெயிலும் அதே தண்டவாளத்தில் வேகமாக வந்தது. இதனால் கண் இமைக்கும் நேரத்தில் 2 ரெயில்களும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன.

மோதிய வேகத்தில் 2 ரெயில்களும் தடம் புரண்டன. இந்த கோர விபத்தில் 16 பயணிகள் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிர் இழந்தனர். மேலும் 60-க்கும் மேற்பட்ட பயணிகள் பலத்த காயம் அடைந்தனர்.

விபத்து குறித்த தகவல் அறிந்ததும் ரெயில்வே அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தீவிர மீட்புபணியில் ஈடுபட்டனர்.

விபத்து நடந்தது அதிகாலை நேரம் என்பதால் ரெயில்களில் இருந்த பயணிகள் பெரும்பாலானோர் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தனர். இதனால் அவர்கள் உடனடியாக வெளியேற முடியாமல் தடம்புரண்ட ரெயில்களின் பெட்டிகளுக் குள் சிக்கிக்கொண்டனர்.

மீட்பு குழுவினர் நீண்ட நேரம் போராடி அவர்களை மீட்டனர். படுகாயம் அடைந்த நபர்கள் அனைவரும் சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டு உள்ளனர்.

விபத்து குறித்து பிராமன்பாரியா மாவட்ட துணை கமிஷனர் ஹயத் உத் டவுலா கான் கூறுகையில், “முதல்கட்ட விசாரணையில் ரெயில் என்ஜின் டிரைவர்கள் சிக்னலை கவனிக்காமல் சென்றதே விபத்துக்கு காரணம் என தெரியவந்துள்ளது” என்றார்.

மேலும் அவர், “விபத்துக்குள்ளான ரெயில்களின் இடிபாடுகளுக்குள் மேலும் பல பயணிகள் சிக்கியிருக்கலாம் என நம்பப்படுவதால் பலி எண்ணிக்கை உயரும் என கருதுகிறோம். எனினும் அவர்களை மீட்பதற்கான பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது” என கூறினார்.

இதற்கிடையே டர்னா நிஷிதா எக்ஸ்பிரஸ் ரெயில் என்ஜின் டிரைவர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டு உள்ளதாகவும், விபத்து குறித்து விசாரிக்க 4 விசாரணை குழுக்கள் அமைக்கப்பட்டிருப்பதாகவும் ரெயில்வே வாரியம் தெரிவித்துள்ளது.

அந்த நாட்டின் அதிபர் அப்துல் ஹமீது, பிரதமர் ஷேக் ஹசினா, சபாநாயகர் ஷிரின் சவுத்ரி ஆகியோர் விபத்தில் உயிரிழந்த பயணிகளின் குடும்பத்தாருக்கு அனுதாபம் தெரிவித்துள்ளதோடு, படுகாயமடைந்த நபர்கள் விரைவாக குணமடைய பிரார்த்தனை செய்வதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையில் விபத்தில் பலியானவர்கள் மற்றும் படுகாயம் அடைந்தவர்களின் குடும்பங்களுக்கு உரிய இழப்பீடு வழங்கப்படும் என ரெயில்வே வாரியம் அறிவித்துள்ளது.


Next Story