ஆப்கானிஸ்தானில் பயங்கரவாத தாக்குதலில் அமெரிக்க வீரர் பலி - தலீபான்கள் பொறுப்பேற்பு


ஆப்கானிஸ்தானில் பயங்கரவாத தாக்குதலில் அமெரிக்க வீரர் பலி - தலீபான்கள் பொறுப்பேற்பு
x
தினத்தந்தி 23 Dec 2019 11:15 PM GMT (Updated: 23 Dec 2019 9:15 PM GMT)

ஆப்கானிஸ்தானில் பயங்கரவாத தாக்குதலில் அமெரிக்க வீரர் ஒருவர் பலியானார். இந்த தாக்குலுக்கு தலீபான்கள் பொறுப்பேற்றுள்ளனர்.

காபூல்,

ஆப்கானிஸ்தானில் அமெரிக்க வீரர்களை குறிவைத்து தலீபான் பயங்கரவாதிகள் தாக்குதல்களை அரங்கேற்றி வந்ததால் அவர்களுடன் நடத்தி வந்த அமைதி பேச்சுவார்த்தையை முறித்துக்கொள்வதாக அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் கடந்த செப்டம்பர் மாதம் அதிரடியாக அறிவித்தார்.

ஆனால் இந்த மாத தொடக்கத்தில் அமெரிக்கா மீண்டும் தலீபான்களுடன் அமைதி பேச்சுவார்த்தையை தொடங்கியது. இந்த பேச்சுவார்த்தைக்கு மத்தியில் ஆப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்க விமானப்படை தளம் அருகே தலீபான்கள் தாக்குதல் நடத்தினர். இதனால் ஆத்திரம் அடைந்த அமெரிக்கா அமைதி பேச்சுவார்த்தையை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது.

இந்த நிலையில் ஆப்கானிஸ்தானின் குண்டூஸ் மாகாணத்தில் உள்ள சார் தாரா மாவட்டத்தில் நேற்று முன்தினம் அமெரிக்க ராணுவவீரர்களின் அணிவகுப்பை குறிவைத்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் அமெரிக்க வீரர் ஒருவர் பலியானார்.

இந்த தாக்குதல் எப்படி நடத்தப்பட்டது? இதில் அமெரிக்க வீரர்கள் வேறுயாரும் காயம் அடைந்தார்களா? என்பன உள்ளிட்ட தகவல்கள் வெளியாகவில்லை. இதற்கிடையே இந்த தாக்குதலுக்கு தலீபான் பயங்கரவாத அமைப்பு பொறுப்பு ஏற்று உள்ளது.

தலீபான் பயங்கரவாதிகளின் தாக்குதலில் அமெரிக்க வீரர் கொல்லப்பட்ட சம்பவம் அமெரிக்காவுக்கும், தலீபான்களுக்கும் இடையிலான அமைதி பேச்சுவார்த்தையில் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும் என கருதப்படுகிறது.


Next Story