இத்தாலியில் சுற்றுலா பயணிகள் கூட்டத்துக்குள் கார் புகுந்தது: 6 பேர் உடல் நசுங்கி சாவு


இத்தாலியில் சுற்றுலா பயணிகள் கூட்டத்துக்குள் கார் புகுந்தது: 6 பேர் உடல் நசுங்கி சாவு
x
தினத்தந்தி 6 Jan 2020 10:45 PM GMT (Updated: 6 Jan 2020 8:10 PM GMT)

இத்தாலியில் சுற்றுலா பயணிகள் கூட்டத்துக்குள் கார் புகுந்து விபத்து ஏற்பட்டதில் 6 பேர் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.

ரோம், 

இத்தாலியின் தெற்கு டைரோல் மாகாணத்தில் உள்ள மலைப்பிரதேசமான லூடாகோ நகர் புகழ்பெற்ற சுற்றுலா தலமாக விளங்குகிறது. இங்கு பனிச்சறுக்கு விளையாட்டுகள் மிகவும் பிரபலம். இதனால் பல்வேறு நாடுகளில் இருந்து ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் இங்கு வந்து செல்கின்றனர்.

இந்த நிலையில் ஜெர்மனியைச் சேர்ந்த ஒரு குழுவினர் லூடாகோ நகருக்கு சுற்றுலா வந்தனர். இவர்கள் நேற்று முன்தினம் பல்வேறு இடங்களை சுற்றி பார்த்து விட்டு, உள்ளூர் நேரப்படி நள்ளிரவு 1 மணிக்கு அங்குள்ள ஒரு சாலையில் பஸ்சுக்காகக் காத்திருந்தனர்.

அப்போது, அங்கு அதிவேகமாக வந்த கார் ஒன்று சுற்றுலா பயணிகளின் கூட்டத்துக்குள் புகுந்தது. இதில் கார் சக்கரங்களில் சிக்கி 6 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர். மேலும் 11 பேர் பலத்த காயம் அடைந்தனர்.

ஆரம்பத்தில் இதை ஒரு பயங்கரவாத தாக்குதல் என்று நினைத்து மக்கள் கடும் பீதியடைந்தனர். இதுபற்றி தகவல் கிடைத்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று காரை ஓட்டி வந்த நபரை மடக்கிப் பிடித்தனர். அப்போது அவர் அளவுக்கு அதிகமான மதுபோதையில் இருந்தது தெரியவந்தது.

இதையடுத்து, இது பயங்கரவாத தாக்குதல் இல்லை என்றும் மதுபோதை மற்றும் அதிவேகத்தால் ஏற்பட்ட விபத்து என்றும் தெரியவந்தது. அதனை தொடர்ந்து, விபத்தை ஏற்படுத்திய உள்ளூரைச் சேர்ந்த 28 வயதான வாலிபரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story