பாகிஸ்தானில் வாசனை திரவிய தொழிற்சாலையில் பயங்கர தீவிபத்து: 11 பேர் உடல் கருகி சாவு


பாகிஸ்தானில் வாசனை திரவிய தொழிற்சாலையில் பயங்கர தீவிபத்து: 11 பேர் உடல் கருகி சாவு
x
தினத்தந்தி 28 Jan 2020 10:15 PM GMT (Updated: 28 Jan 2020 10:15 PM GMT)

பாகிஸ்தானில் வாசனை திரவியம் தயாரிக்கும் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 11 பேர் உடல் கருகி உயிரிழந்தனர்.

இஸ்லாமாபாத்,

பாகிஸ்தானில் பஞ்சாப் மாகாணத்தின் தலைநகர் லாகூரில் ஷதாரா என்ற இடத்தில் குடியிருப்பு பகுதிகளையொட்டி வாசனை திரவியம் தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்று இயங்கி வந்தது. இங்கு ஆண்கள், பெண்கள் என ஏராளமான தொழிலாளர்கள் வேலை பார்த்து வந்தனர்.

நேற்று காலை வழக்கம் போல் தொழிற்சாலைக்கு வந்த தொழிலாளர்கள் வாசனை திரவியம் தயார் செய்யும் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். பெண் தொழிலாளர்கள் தங்கள் குழந்தைகளுடன் வந்து, வேலை பார்த்துக்கொண்டிருந்தனர்.

குழந்தைகளை விளையாடவிட்டு விட்டு, அவர்கள் பணிகளை செய்து கொண்டிருந்தனர். அப்போது சற்றும் எதிர்பாரத வகையில் தொழிற்சாலையில் இருந்த கியாஸ் சிலிண்டர் திடீரென வெடித்து சிதறியது. இதில் தொழிற்சாலைக்குள் தீப்பிடித்தது.

கண்இமைக்கும் நேரத்தில் மளமளவென தொழிற்சாலை முழுவதும் பரவிய தீ, கொழுந்து விட்டு எரிந்தது. வேலை பார்த்துக்கொண்டிருந்த தொழிலாளர்கள் அனைவரும் உயிரை காப்பாற்றிக்கொள்ள நாலாபுறமும் சிதறி ஓடினர்.

ஆனால் அதற்குள் தீ நாலாபுறமும் சூழந்துகொண்டதால் சிலர் உள்ளே சிக்கி கொண்டனர். இதற்கிடையில் தீ விபத்தில் தொழிற்சாலையின் மேற்கூரை இடிந்து விழுந்தது.

தீ விபத்து குறித்து குடியிருப்பு வாசிகள் அளித்த தகவலின் பேரில் 10-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்களில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.

அவர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர். எனினும் பெண்கள், குழந்தைகள் உள்பட 11 பேரை பிணமாகத்தான் மீட்க முடிந்தது. அவர்களது உடல் அடையாளம் காண முடியாதபடிக்கு கரிக்கட்டைகளாகி இருந்தன.

மேலும் 4 பேர் பலத்த தீக்காயங்களுடன் மீட்கப்பட்டனர். அவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு உள்ளனர். அவர்களில் 2 பேரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை உயரலாம் என கருதப்படுகிறது.

இதனிடையே தீ விபத்து நடந்த வாசனை திரவியம் தயாரிக்கும் தொழிற்சாலை முறையான உரிமம் பெறாமல் இயங்கி வந்ததாக அங்குள்ள குடியிருப்பு வாசிகள் குற்றம் சாட்டி உள்ளனர்.

இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து தொழிற்சாலை நிர்வாகத்திடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story