கொரோனா வைரஸ்: இத்தாலியில் பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு


கொரோனா வைரஸ்: இத்தாலியில் பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு
x
தினத்தந்தி 24 Feb 2020 10:24 PM GMT (Updated: 24 Feb 2020 10:24 PM GMT)

இத்தாலியில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது.

வியன்னா,

ஐரோப்பிய நாடான இத்தாலியில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. அந்த நாட்டின் வடக்கு பிராந்தியங்களை கொரோனா ஆக்கிரமித்துள்ளது. அங்கு கடந்த சனிக்கிழமை ஒரே நாளில் 2 பேர் கொரோனா வைரசுக்கு பலியான நிலையில், நேற்று முன்தினமும், நேற்றும் அடுத்தடுத்து 5 பேர் உயிரிழந்தனர்.

இதன் மூலம் அங்கு கொரோனா வைரசுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 7 ஆக அதிகரித்துள்ளது. மேலும், 170 பேருக்கு வைரஸ் தொற்று இருப்பதை அந்த நாட்டு சுகாதாரத்துறை அமைச்சகம் உறுதிபடுத்தியுள்ளது.

இந்த நிலையில், இத்தாலியின் வெனிஸ் நகரில் இருந்து அண்டை நாடான ஆஸ்திரியாவின் முனிச் நகருக்கு ரெயில் ஒன்று சென்றுகொண்டிருந்தது.

இந்த ரெயிலில் உள்ள 2 பயணிகளுக்கு திடீரென காய்ச்சல் ஏற்பட்டதால், அவர்களுக்கு கொரோனா தொற்று இருக்குமோ என்ற அச்சம் எழுந்தது.

இதுபற்றி ஆஸ்திரிய அதிகாரிகளுக்கு தெரியவந்ததும், அவர்கள் இத்தாலி ரெயிலை தங்கள் நாட்டுக்குள் அனுமதிக்க மறுத்துவிட்டனர். இதனால் ஆஸ்திரியாவின் எல்லையில் உள்ள இத்தாலியின் ஆல்ப்ஸ் மலைத்தொடரின் பிரின்னீர் பாஸ் பகுதியில் ரெயில் நிறுத்தப்பட்டது.

மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இத்தாலியில் இருந்து வரும் மற்றும் இத்தாலிக்கு செல்லக்கூடிய அனைத்து ரெயில் சேவைகளும் தற்காலிமாக நிறுத்தப்படுவதாக ஆஸ்திரிய அரசு தெரிவித்துள்ளது.


Next Story