கொரோனா வைரஸ் தாக்கம் பற்றிய தகவல்கள் பகிர்வில் அமெரிக்கா- சீனா இடையே மோதல்


கொரோனா வைரஸ் தாக்கம் பற்றிய தகவல்கள் பகிர்வில் அமெரிக்கா- சீனா இடையே மோதல்
x
தினத்தந்தி 20 March 2020 11:05 PM GMT (Updated: 20 March 2020 11:05 PM GMT)

கொரோனா வைரஸ் தாக்கம்பற்றிய தகவல்கள் பகிர்வில் ஒருவர் மீது ஒருவர் குற்றம்சாட்டுவதால், அமெரிக்கா, சீனா இடையே மோதல் உருவாகி உள்ளது.

பீஜிங்,

சீனாவின் உகான் நகரில் கொரோனா வைரஸ் தோன்றிய ஆரம்ப கால கட்டத்தில், அதுபற்றிய தகவல்களை வெளிப்படையாக பகிர்ந்து கொள்ளாமல் அடக்கியதற்காகவும், தகவல்களை வெளியிட்டவர்களை தண்டித்ததற்காகவும் சீனா மீது கடும் விமர்சனங்கள் எழுந்தன.

இப்போது இதில் அமெரிக்கா, சீனா இடையே வார்த்தை மோதல் வெடித்துள்ளது.

கொரோனா வைரஸ் பரவிவருவது குறித்து அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் நேற்று முன்தினம் சீனா மீது குற்றம்சாட்டினார்.

அப்போது அவர், “சீனாவின் மத்திய பகுதியில் உள்ள நகரமான உகானில் கொரோனா வைரஸ் கடந்த ஆண்டு கடைசியில் தோன்றியது. ஆனால் அது பற்றிய தகவல்களை பகிர்ந்து கொள்வதில் சீனாவிடம் வெளிப்படைத்தன்மை இல்லாமல்போனது. அதற்கான விலையை இப்போது உலகம் கொடுத்துக்கொண்டிருக்கிறது” என்று சாடினார்.

இதற்கு சீனா நேற்று பதிலடி கொடுத்தது.

இதையொட்டி சீனாவின் வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் கெங் சுவாங் கூறியதாவது:-

கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிரான சீனாவின் போராட்டத்தை அமெரிக்க தரப்பில் சிலர் களங்கப்படுத்த முயற்சி செய்கின்றனர். மேலும், பழியை சீனா மீது மாற்றுகின்றனர்.

இந்த அணுகுமுறை, மனித குலத்தின் ஆரோக்கியத்துக்காகவும், பாதுகாப்புக்காகவும் சீன மக்கள் செய்த மாபெரும் தியாகத்தை புறக்கணிப்பதாகும். மேலும், உலகளாவிய பொது சுகாதாரத்துக்கு சீனாவின் பெரும்பங்களிப்பை அவதூறு செய்வதாகும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கொரோனா வைரஸ் தகவல் பகிர்வில், சீனா, அமெரிக்கா இடையே மோதல் போக்கு ஏற்பட்டிருப்பது சர்வதேச அரங்கில் அதிர்வுகளை உருவாக்கி உள்ளது.


Next Story