ஈரான், உலகின் முன்னணி பயங்கரவாத ஆதரவாளர் - அமெரிக்க வெளியுறவு மந்திரி சாடல்


ஈரான், உலகின் முன்னணி பயங்கரவாத ஆதரவாளர் - அமெரிக்க வெளியுறவு மந்திரி சாடல்
x
தினத்தந்தி 23 Aug 2020 12:21 AM GMT (Updated: 23 Aug 2020 12:21 AM GMT)

உலகின் முன்னணி பயங்கரவாத ஆதரவாளராக ஈரான் விளங்குகிறது என்று அமெரிக்க வெளியுறவு மந்திரி குற்றம் சாட்டியுள்ளார்.

நியூயார்க்,

அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பான விவகாரத்தில் அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே தீரா பகையை உருவாகியுள்ளது. இரு நாடுகளுக்கும் இடையே கடுமையான மோதல் நீடிக்கிறது.

இதனிடையே அக்டோபரில் காலாவதியாகும் ஈரான் மீதான ஐ.நா. ஆயுத தடையை நீட்டிக்க கோரும் அமெரிக்காவின் முயற்சி தோல்வி அடைந்த நிலையில், ஈரானுக்கு எதிரான மாற்று நடவடிக்கைகளில் அமெரிக்கா கவனம் செலுத்தி வருகிறது. அந்த வகையில் அணுசக்தி ஒப்பந்தத்தின் முக்கிய அம்சமான மீள் தடையை பயன்படுத்தி ஈரான் மீதான ஐ.நா. பொருளாதார தடைகளை மீண்டும் அமல்படுத்த அமெரிக்கா முயற்சித்து வருகிறது.

இந்த நிலையில் ஈரானிய ஆட்சியின் சார்பாக மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாக கூறி அந்த நாட்டைச் சேர்ந்த மூத்த அதிகாரிகள் 13 பேர் அமெரிக்கா வருவதற்கு தடை விதித்து விசா கட்டுப்பாடுகளை அமெரிக்கா அறிவித்துள்ளது. இது தொடர்பான அறிவிப்பை அமெரிக்க வெளியுறவு மந்திரி மைக் பாம்பியோ வெளியிட்டார். அப்போது அவர் ஈரானை கடுமையாக சாடினார்.

அவர் தனது அறிக்கையில் “ஈரான் தனது பயங்கரவாத ஆட்சியை பரப்புவதற்காக மற்ற நாடுகளில் படுகொலைகளையும், பயங்கரவாதத்தையும் நடத்துகிறது. உலகின் முன்னணி பயங்கரவாத ஆதரவாளராக ஈரான் விளங்குகிறது. ஈரான் அதிகாரிகளுக்கு விசா கட்டுப்பாடு விதிப்பதன் மூலம் ஈரான் அரசால் நிகழ்த்தப்பட்ட பயங்கரவாதம் மற்றும் வன்முறையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அமெரிக்கா ஆதரவு செய்தியை அனுப்புகிறது” என கூறினார்.

Next Story