காங்கோ நாட்டில் ஏரியில் படகு கவிழ்ந்து விபத்து: 33 பேர் பலி


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 24 Dec 2020 9:59 PM GMT (Updated: 24 Dec 2020 9:59 PM GMT)

காங்கோ நாட்டில் ஏரியில் படகு கவிழ்ந்த விபத்தில் சிக்கி 33 பேர் உயிரிழந்தனர்.

கின்‌ஷாசா, 

மத்திய ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்று காங்கோ. கொரோனா வைரஸ் காரணமாக அண்டை நாடான உகாண்டாவுடனான அனைத்து விதமான போக்குவரத்துகளுக்கும் காங்கோ தடை விதித்துள்ளது.

இந்த நிலையில் உகாண்டா சென்றிருந்த காங்கோ நாட்டைச் சேர்ந்த சிலர் கொரோனா கட்டுப்பாடுகளை மீறி சட்டவிரோதமாக காங்கோவுக்கு திரும்ப முடிவு செய்தனர். அதன்படி 40 பேர் உகாண்டாவில் இருந்து ஆல்பர்ட் ஏரி வழியாக காங்கோவுக்கு படகில் புறப்பட்டனர்.

நேற்று முன்தினம் நள்ளிரவு காங்கோவின் இட்டூரி மாகாணத்துக்கு அருகே சென்ற போது சற்றும் எதிர்பாராத வகையில் படகு ஏரியில் கவிழ்ந்தது. இதில் படகில் பயணம் செய்த அனைவரும் நீரில் மூழ்கினர்.

இதுபற்றி தகவல் கிடைத்ததும் காங்கோ கடலோர காவல்படை வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். ஆனால் அதற்குள் பெண்கள் சிறுவர்கள் உள்பட 33 பேர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.

அதேசமயம் நீரில் தத்தளித்துக்கொண்டிருந்த 7 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர். அவர்கள் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளனர். பலத்த காற்று வீசியதால் படகு ஏரியில் கவிழ்ந்ததாக முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

Next Story