அணுசக்தி ஒப்பந்த விவகாரம்; ஈரானுக்கு எந்தவித சலுகைகளும் வழங்கப்படாது; அமெரிக்கா திட்டவட்டம்


அமெரிக்க வெளியுறவு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் நெட் பிரைஸ்
x
அமெரிக்க வெளியுறவு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் நெட் பிரைஸ்
தினத்தந்தி 12 March 2021 6:02 PM GMT (Updated: 12 March 2021 6:02 PM GMT)

ஈரானுடனான அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா கடந்த 2018-ம் ஆண்டு வெளியேறியது. அப்போது முதல் இரு நாடுகளுக்கும் இடையே மோதல் போக்கு உருவானது. இந்த விவகாரத்தில் அமெரிக்காவின் அப்போதைய ஜனாதிபதி டிரம்ப் ஈரான் மீது கடுமையான போக்கை கையாண்டு வந்தார்.

இந்தநிலையில் அமெரிக்காவில் புதிதாக ஆட்சிப் பொறுப்பை ஏற்றுள்ள ஜனாதிபதி ஜோ பைடன் தலைமையிலான நிர்வாகம் ஈரான் அணுசக்தி ஒப்பந்தத்துக்கு முழுமையாக இணங்கி நடந்தால் அந்த ஒப்பந்தத்தில் மீண்டும் இணைவது குறித்து பேச்சுவார்த்தை நடத்த தயார் என அறிவித்துள்ளது.

ஆனால் ஈரான் பேச்சுவார்த்தைக்கு திரும்புவது குறித்து எந்தவித அறிவிப்பையும் வெளியிடாமல் தங்கள் நாட்டின் மீது விதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத் தடைகளை திரும்பப் பெற வேண்டும் என அமெரிக்காவை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.இந்தநிலையில் பேச்சுவார்த்தைக்கு திரும்புவதற்காக ஈரானுக்கு எந்தவித சலுகைகளையும் வழங்க முடியாது என அமெரிக்கா திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அமெரிக்க வெளியுறவு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் நெட் பிரைஸ் கூறுகையில் ‘‘ஈரானை பேச்சுவார்த்தைக்கு வரவைப்பதற்கு நாங்கள் ஒருதலை பட்சமாக எந்தவித சலுகைகளையும் வழங்க மாட்டோம். ஒப்பந்தத்துக்கு முழுமையாக இணங்கி நடப்பது பேச்சுவார்த்தைக்கான கட்டாய நிபந்தனையாகும். அமெரிக்கா இணக்கத்துக்கான இணைக்க நிலையில் நிலையாக நிற்கிறது. ஈரான் அணுசக்தி ஒப்பந்தத்தில் முழு இணக்கத்துடன் பேச்சுவார்த்தைக்கு திரும்பினால் அமெரிக்காவும் அவ்வாறே செய்யும்’’ என கூறினார்.

Next Story