இங்கிலாந்து இளவரசர் பிலிப் மறைவுக்கு அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் இரங்கல்


இங்கிலாந்து இளவரசர் பிலிப் மறைவுக்கு அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் இரங்கல்
x
தினத்தந்தி 11 April 2021 11:06 AM GMT (Updated: 11 April 2021 11:06 AM GMT)

இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்தின் கணவரும் இளவரசருமான பிலிப் நேற்று முன்தினம் உயிரிழந்தார்.‌ அவருக்கு வயது 99. இவர் இங்கிலாந்து அரச குடும்ப வரலாற்றில் இளவரசராக நெடுங்காலம் சேவையாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

வாஷிங்டன்,

இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்தின் கணவரும் இளவரசருமான பிலிப் நேற்று முன்தினம் உயிரிழந்தார்.‌ அவருக்கு வயது 99. இவர் இங்கிலாந்து அரச குடும்ப வரலாற்றில் இளவரசராக நெடுங்காலம் சேவையாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தநிலையில் இளவரசர் பிலிப் மரணத்துக்கு உலகெங்கிலும் உள்ள மன்னர்கள், அரச தலைவர்கள் முன்னாள் மற்றும் இந்நாள் ஜனாதிபதிகள் மற்றும் பிரதமர்கள் என பல தரப்பினரும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தனது இரங்கல் செய்தியில் ‘‘இளவரசர் பிலிப்பை இழந்து வாடும் ராணி இரண்டாம் எலிசபெத்துக்கு நான், எனது மனைவி மற்றும் எனது ஒட்டு மொத்த நிர்வாகமும் இரங்கலை தெரிவிக்கிறோம்’’ என கூறினார்.

அதேபோல் துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் ‘‘இளவரசர் பிலிப் ஒரு நீண்ட குறிப்பிடத்தக்க வாழ்க்கையை நடத்தினார். விசுவாசமும் சேவையும் அவற்றின் அடையாளங்கள். அவர் தனது குடும்பம் அவரது நாடு மற்றும் காமன்வெல்த் ஆகியவற்றுக்காக தன்னை முழுமையாக அர்ப்பணித்தார்" எனக்கூறி தனது வருத்தத்தை வெளிப்படுத்தினார்.‌

அதேபோல் ஒபாமா உள்பட வாழும் முன்னாள் அமெரிக்க ஜனாதிபதிகள் அனைவரும் இளவரசர் பிலிப் மறைவுக்கு அனுதாபம் தெரிவித்துள்ளனர்‌.

ஸ்பெயின் நாட்டின் மன்னர் பிலிப்பே மற்றும் ராணி லெடிசியா ஆகிய இருவரும் ராணி இரண்டாம் எலிசபெத்துக்கு தந்தி அனுப்பி தங்களது இரங்கலை தெரியப்படுத்தினர்.

அதேபோல் பெல்ஜியம், சூடான் உள்ளிட்ட நாடுகளின் அரச குடும்பத்தினர் இளவரசர் பிலிப் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே இளவரசர் பிலிப் மறைவையொட்டி ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் அந்த நாட்டு தேசியக் கொடி அரை கம்பத்தில் பறக்க விடப்பட்டதோடு, 41 குண்டுகள் முழங்க பிலிப்புக்கு மரியாதை செலுத்தப்பட்டது.

 


Next Story