நேபாளத்தில் கொரோனா பாதிப்பு உயர்வு; வரும் மே 12 வரை தடை உத்தரவு நீட்டிப்பு


நேபாளத்தில் கொரோனா பாதிப்பு உயர்வு; வரும் மே 12 வரை தடை உத்தரவு நீட்டிப்பு
x
தினத்தந்தி 4 May 2021 7:56 PM GMT (Updated: 4 May 2021 7:56 PM GMT)

நேபாளத்தில் கொரோனா பாதிப்பு உயர்வை அடுத்து ஒரு வார காலத்திற்கு தடை உத்தரவு நீட்டிக்கப்பட்டு உள்ளது.

காத்மண்டு,

இந்தியாவின் அண்டை நாடான நேபாளத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்து வருகிறது.  அந்நாட்டின் சுகாதார மற்றும் மக்கள் தொகை அமைச்சகம் நேற்று மாலை வெளியிட்ட செய்தியில், கடந்த 24 மணிநேரத்தில் 7,660 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.  55 பேர் உயிரிழந்து உள்ளனர் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,51,005 ஆகவும் மொத்த உயிரிழப்பு 3,417 ஆகவும் உயர்வடைந்து உள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரசின் 2வது அலை தீவிரமடைந்த சூழலில், இந்தியாவுடனான 22 எல்லைகளை மூடுவதாக நேபாள அரசு அண்மையில் அறிவித்தது.  இந்தியா மற்றும் நேபாளம் இடையே 13 எல்லை பகுதிகளில் மட்டுமே தற்போது போக்குவரத்துக்கு அனுமதி அளிக்கப்படுகிறது.

இந்நிலையில், காத்மண்டு, பக்தபூர் மற்றும் லலித்பூர் ஆகிய மாவட்டங்களின் தலைமை மாவட்ட அதிகாரிகள் அடங்கிய ஆலோசனை கூட்டம் ஒன்று நேற்று நடந்தது.  இதன் முடிவில், கடந்த ஏப்ரல் 29ந்தேதி முதல் விதிக்கப்பட்டு அமலில் உள்ள தடை உத்தரவை வருகிற மே 12ந்தேதி வரை நீட்டிக்க முடிவானது.

இதன்படி, காத்மண்டு பள்ளத்தாக்கில் உணவு மற்றும் மளிகை கடைகள் காலை 7 மணி முதல் 9 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.  அனைத்து வகையான தனியார் மற்றும் பொது வாகன போக்குவரத்துக்கு அனுமதி இல்லை.

நேபாளத்தில் வங்கிகள், நிதி அமைப்புகள் மற்றும் அரசு அலுவலகங்களில் மொத்த ஊழியர்களில் 4ல் ஒரு பங்கு ஊழியர்களே பணிபுரிய அனுமதி அளிக்கப்படுகிறது.


Next Story