இலங்கையில் கனமழை: உயிரிழந்தோர் எண்ணிக்கை 17 ஆக உயர்வு: 2.71 லட்சம் பேர் பாதிப்பு


இலங்கையில் கனமழை: உயிரிழந்தோர் எண்ணிக்கை 17 ஆக உயர்வு: 2.71 லட்சம் பேர் பாதிப்பு
x
தினத்தந்தி 7 Jun 2021 5:57 AM GMT (Updated: 7 Jun 2021 5:57 AM GMT)

இலங்கையில் கனமழை காரணமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 17 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 2.71 லட்சம் பேர் பாதிக்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

கொழும்பு,

இலங்கையில் கடந்த சிலதினங்களாக பெய்து வரும் கனமழையால் களனி, தெதரு, களு ஆகிய ஆறுகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அணைகளில் இருந்து அதிக அளவில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால்,  கம்பா, ரத்னபுரா, கொழும்பு, பட்டாளம், கலுட்ரா உள்ளிட்ட 10 மாவட்டங்கள் பெரும் வெள்ள பாதிப்பை சந்தித்துள்ளது. இதன் காரணமாக இந்த மாவட்டங்களின் அனைத்து பகுதிகளும் வெள்ளக்காடாய் காட்சியளிக்கிறது.

இதனால் 10 மாவட்டங்களில் உள்ள 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்த சுமார் 2.71 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 800 வீடுகள் சேதமடைந்துள்ளன. 16 ஆயிரம் பேர் வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். 

இதுவரை கனமழை மற்றும் நிலச்சரிவில் சிக்கி 17 பேர் உயிரிழந்துள்ள நிலையில், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ராணுவம் மற்றும் கப்பல்படையினர் போர்கால அடிப்படையில் மீட்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். தொடர்ந்து சில தினங்களுக்கு கனமழை பெய்யும் என அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ள நிலையில், பல இடங்களில் நிலச்சரிவு ஏற்படும் அபாயம் உள்ளதாகவும் அறிவிப்பு வெளியாகியுள்ளது

Next Story