சைபர் தாக்குதல்களை தடுக்காவிட்டால் ரஷியா மிகவும் மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும்: அமெரிக்கா எச்சரிக்கை


சைபர் தாக்குதல்களை தடுக்காவிட்டால் ரஷியா மிகவும் மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும்: அமெரிக்கா எச்சரிக்கை
x
தினத்தந்தி 10 July 2021 11:50 PM GMT (Updated: 10 July 2021 11:50 PM GMT)

ரஷியாவில் இருந்து வரும் சைபர் தாக்குதல்களை தடுக்க முறையான நடவடிக்கைகளை எடுக்காவிட்டால் மிகவும் மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று ரஷியாவை அமெரிக்கா எச்சரித்துள்ளது.

‘ரான்சம்வேர்’ தாக்குதல்
அமெரிக்காவில் சமீப காலமாக சைபர் தாக்குதல் மிக பெரும் அச்சுறுத்தலாக மாறி வருகிறது.‌ கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் அமெரிக்க அரசின் முக்கிய துறைகளின் கம்ப்யூட்டர்களில் ஹேக்கர்கள் ஊடுருவி உளவு பார்த்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.அமெரிக்காவின் உள்துறை, பாதுகாப்பு, உள்நாட்டு பாதுகாப்பு, நிதி மற்றும் வணிகம் போன்ற 9 அரசு துறைகள் மற்றும் மைக்ரோசாப்ட் உள்பட 17 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் மீது இந்த சைபர் தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த சைபர் தாக்குதலின் பின்னணியில் ரஷியா இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டது. ஆனால் ரஷியா அதனை திட்டவட்டமாக மறுத்தது.இந்த நிலையில் அமெரிக்காவின் மிகப்பெரிய மென்பொருள் நிறுவனமான ‘கசேயா' மீது கடந்த 2 வாரங்களுக்கு முன்பு ‘ரான்சம்வேர்' தாக்குதல் நடத்தப்பட்டது. இது கடந்த டிசம்பர் மாதம் அரசு துறைகளை குறிவைத்து நடத்தப்பட்ட சைபர் தாக்குதலை விட பல மடங்கு பெரிது என சைபர் பாதுகாப்பு வல்லுனர்கள் தெரிவித்தனர்.

புதினுடன் ஜோ பைடன் பேச்சு
‘கசேயா' நிறுவனம் பெரிய மற்றும் சிறிய வர்த்தக நிறுவனங்களின் மென்பொருள் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு பணியை மேற்கொள்ளும் நிறுவனம் என்பதால் இந்த நிறுவனம் மீதான சைபர் தாக்குதலால் 1,500-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பாதிக்கப்பட்டன.இதனிடையே ரஷியாவை சேர்ந்த ஆர்இவில் எனும் ஹேக்கர் குழுதான் இந்த ‘ரான்சம்வேர்' தாக்குதலை நடத்தியதாகவும், அந்த ஹேக்கர் குழுவுக்கு ரஷிய அரசு பாதுகாப்பு வழங்கி வருவதாகவும்‌ குற்றம் சாட்டப்பட்டது. ஆனால் ரஷியா வழக்கம்போல் இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ளது.இந்த நிலையில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ 
பைடன் ரஷிய அதிபர் புதினை நேற்று முன்தினம் தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு பேசினார். இருவருக்கும் இடையிலான இந்த தொலைபேசி உரையாடல் சுமார் 1 மணி நேரம் நீடித்ததாக வெள்ளை மாளிகை தெரிவித்தது.

மிகவும் மோசமான விளைவுகள்
இந்த உரையாடலின்போது ரஷியாவில் இருந்து வரும் சைபர் தாக்குதல்களை தடுக்க முறையான நடவடிக்கைகளை எடுக்காவிட்டால் மிகவும் மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும் என ஜோ பைடன் புதினை எச்சரித்தார்.புதினுடனான தொலைபேசி உரையாடலுக்கு பின் வெள்ளை மாளிகையில் பத்திரிகையாளர்களை சந்தித்த ஜோ பைடன் இது குறித்து கூறுகையில், “அவரது (புதின்) மண்ணில் இருந்து சைபர் தாக்குதல் வரும்போது, அதனை தடுப்பதற்கான நடவடிக்கைகளை ரஷிய அரசிடம் இருந்து அமெரிக்கா எதிர்பார்க்கிறது என்பதை அவருக்கு மிக தெளிவுப்படுத்தினேன். அந்த சைபர் தாக்குதலில் ரஷிய அரசுக்கு தொடர்பு இல்லை என்றாலும், தாக்குதல் நடத்தியது யார் என்பதை உறுதி செய்ய போதுமான தகவல்களை நாங்கள் அவர்களுக்கு வழங்கினால், அதனைக் கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்” என கூறினார்.

பொருளாதார தடை விதிக்கப்படலாம்
அதனை தொடர்ந்து நிருபர் ஒருவர், “இந்த விவகாரத்தில் ரஷியா ஏதேனும் விளைவுகளை எதிர்கொள்ள நேரிடுமா?” என கேள்வி எழுப்பினார்.அதற்கு பதில் அளித்த ஜோ பைடன், “ஆம், சைபர் தாக்குதல்களை தடுக்க ரஷிய அரசு நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் அந்த நாடு பொருளாதார தடை உள்ளிட்ட மிகவும் மோசமான விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும்” என்றார்.

Next Story