இந்தியா, வர்த்தகம் செய்ய சவாலான இடமாக உள்ளது: அமெரிக்கா


இந்தியா, வர்த்தகம் செய்ய சவாலான இடமாக உள்ளது: அமெரிக்கா
x
தினத்தந்தி 22 July 2021 9:57 PM GMT (Updated: 22 July 2021 9:57 PM GMT)

இந்தியா, வர்த்தகம் செய்வதற்கு சவாலான இடமாக இருப்பதாக அமெரிக்கா கூறியுள்ளது.

முதலீட்டு சூழல் அறிக்கை
இந்தியாவில் வர்த்தகம் செய்வதற்கான சூழல் குறித்த அறிக்கையை அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டு உள்ளது. இதில், வர்த்தகம் செய்ய சவாலான இடமாக இந்தியாவை அமெரிக்கா குறிப்பிட்டு உள்ளது.‘2021 முதலீட்டு சூழல் அறிக்கைகள்: இந்தியா’ என தலைப்பிடப்பட்டுள்ள அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:-

சர்ச்சைக்குரிய முடிவுகள்
அதிகரித்த வரி விகிதங்கள், போட்டி வாய்ப்புகளை கட்டுப்படுத்தும் கொள்முதல் விதிகள், அறிவியலுக்கு ஒவ்வாத சுகாதார மற்றும் பைட்டோசானிட்டரி நடவடிக்கைகள், சர்வதேச தரங்களுடன் ஒத்துப்போகாத இந்தியா-குறிப்பிட்ட தர நிலைகள் உள்ளிட்ட புதிய பாதுகாப்புவாத நடவடிக்கைகள், உலகளாவிய வினியோக சங்கிலிகளில் இருந்து உற்பத்தியாளர்களை திறம்பட நிறுத்திவிட்டு இருதரப்பு வர்த்தக விரிவாக்கத்தை கட்டுப்படுத்தின.தேசிய ஜனநாயக கூட்டணி அரசு 2-வது முறையாக பதவியேற்ற முதல் 100 நாட்களில் 2 சர்ச்சைக்குரிய முடிவுகளை மேற்கொண்டது. அதாவது காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து மற்றும் குடியுரிமை திருத்த சட்டம் நிறைவேற்றமே அவை.குடியுரிமை திருத்த சட்டத்தால் எழுந்த போராட்டங்கள் கொரோனாவின் தோற்றத்தால் 2020 மார்ச் மாதத்தில் முடிவுக்கு வந்தன. அத்துடன் தேசிய அளவில் கடுமையான ஊரடங்கும் பிறப்பிக்கப்பட்டது.

உற்பத்தியுடன் இணைந்த சலுகைகள்
பின்னர் பொருளாதார நடவடிக்கைகளில் வீழ்ச்சி உள்பட 2020-ம் ஆண்டில் கொரோனா நிர்வாகமே ஆதிக்கம் செலுத்தியது. எனினும் 2020 டிசம்பருக்குள் பொருளாதார நடவடிக்கைகள் நேர்மறை வளர்ச்சியின் அறிகுறிகளை காட்டத்தொடங்கியது.அதேநேரம் சமீபத்தில் அதிகரித்த கொரோனா தொற்றை கையாண்ட விதத்தில் பா.ஜனதா தலைமையிலான அரசு விமர்சனங்களை எதிர்கொண்டது. கொரோனா தொற்று ஏற்படுத்திய பொருளாதார சவால்கள் மற்றும் ஊரடங்கை எதிர்கொள்ளும் வகையில் விரிவான சமூக நலன் மற்றும் பொருளாதார உத்வேகம் அளிக்கும் திட்டங்களை இந்தியா மேற்கொண்டது. மேலும் உள்கட்டமைப்பு மற்றும் பொது சுகாதாரத்துக்கான செலவினங்களையும் அதிகரித்தது.மருந்துகள், ஆட்டோமொபைல், ஜவுளி, எலக்ட்ரானிக்ஸ் மற்றும் பிற துறைகளில் உற்பத்தியை மேம்படுத்துவதற்காக உற்பத்தியுடன் இணைந்த சலுகைகளை அரசு வழங்கியது.

மொத்த உள்நாட்டு உற்பத்தி
இந்த நடவடிக்கைகள் 2020 ஏப்ரல் முதல் 2021 மார்ச் வரையிலான ஓராண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியை சுமார் 8 சதவீத வீழ்ச்சியில் இருந்து மீட்க உதவியது. மேலும் 2021-ம் ஆண்டு ஜனவரிக்குள் நேர்மறையான வளர்ச்சியும் திரும்பியது.தனியார் மற்றும் வெளிநாட்டு நேரடி முதலீட்டை ஈர்க்க உதவும் புதிய தொழிலாளர் குறியீடுகள் மற்றும் முக்கிய விவசாய துறை சீர்திருத்தங்கள் உள்ளிட்ட லட்சிய கட்டமைப்பு பொருளாதார சீர்திருத்தங்களை இந்தியா மேற்கொண்டது.எனினும் இந்தியா வர்த்தகம் செய்ய சவாலான இடமாகவே உள்ளது. முதலீடுகளுக்கான தடைகள் மற்றும் அதிகார 
வர்க்கத்தினரின் தடைகளை குறைப்பதன் மூலம் ஒரு கவர்ச்சிகரமான மற்றும் நம்பகமான முதலீட்டு சூழலை வளர்க்க வேண்டும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.


Next Story