உலக செய்திகள்

அணு ஆயுத திறனை மேம்படுத்த சீனா நடவடிக்கை; அமெரிக்கா கவலை + "||" + China is building a 2nd base for nuclear missiles, say analysts

அணு ஆயுத திறனை மேம்படுத்த சீனா நடவடிக்கை; அமெரிக்கா கவலை

அணு ஆயுத திறனை மேம்படுத்த சீனா நடவடிக்கை; அமெரிக்கா கவலை
அணு ஆயுத திறனை மேம்படுத்துவதற்கு சீனா நடவடிக்கை எடுத்து வருகிறது. இதை செயற்கைக்கோள் படங்கள் அம்பலப்படுத்தி உள்ளன. இதில் அமெரிக்கா கவலை வெளியிட்டுள்ளது.
வல்லரசு நாடுகள் இடையே பகை
உலகின் இரு பெரும் வல்லரசு நாடுகளான அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையே தீராப்பகை நிலவி வருகிறது. ஏற்கனவே இரு நாடுகளும், ஒன்றுக்கு எதிராக மற்றொன்று கடுமையான வரிகளை விதித்து வர்த்தகப்போரில் ஈடுபட்டு உலக அரங்கை அதிர வைத்தன.இப்போது கொரோனா வைரஸ் பெருந்தொற்று பரவலுக்கு பின்னர் இரு தரப்பு உறவு மேலும் மோசமாகி உள்ளது. கொரோனா வைரசை உகான் நகரில் உள்ள பரிசோதனைக்கூடத்தில் சீனா உருவாக்கி கசிய விட்டுள்ளதாக அமெரிக்கா சந்தேகிக்கிறது. இதுபற்றி உளவு அமைப்புகள் விசாரித்து அறிக்கை அளிக்குமாறு அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் உத்தரவிட்டுள்ளார். ஆனால் சீனா இந்த குற்றச்சாட்டை மறுத்து வருகிறது.

அணு ஆயுத திறனை மேம்படுத்த நடவடிக்கை
இந்த தருணத்தில் சீனா அணு ஆயுத திறனை மேம்படுத்த அதிரடியாக களம் இறங்கி உள்ளது. சீனாவின் மேற்கு பகுதியில் அமைந்துள்ள சின்ஜியாங் மாகாணத்தின் மேலிருந்து எடுக்கப்பட்ட செயற்கைக்கோள் படங்கள், சீனா அணு ஏவுகணைகளை ஏவுகிற தளத்தினை கட்டமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளதை காட்டுவதாக எப்.ஏ.எஸ். என்று அழைக்கப்படுகிற அமெரிக்க விஞ்ஞானிகள் அமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது.மேற்கு சீனாவில் கடந்த 2 மாதங்களில் அந்த நாடு கட்டுகிற இரண்டாவது அணு ஏவுகணை தளம் இது என கூறப்படுகிறது.இந்த ஏவுதளத்தில் ஏவுகணைகளை சேமித்து வைப்பதற்கும், ஏவுவதற்கும் வசதியாக 110 குழிகள் இருப்பதாகவும் தெரிய வந்துள்ளது.கடந்த மாதம் சீனாவின் கான்சு மாகாணத்தில் யுமென் என்ற பாலைவன பகுதியில் சீனா இப்படி 120 குழிகளை அமைத்துள்ளதாக அமெரிக்காவின் ‘தி வாஷிங்டன் போஸ்ட்’ பத்திரிகை செய்தி வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியது.அதைத் தொடர்ந்து இப்போது சீனா கட்டமைத்து வருகிற அணு ஏவுகணை ஏவுதளம், யுமெனுக்கு வட மேற்கில் 380 கி.மீ. தொலைவில் ஹாமி என்ற இடத்தில் இருப்பதாக தெரிய வந்துள்ளது.

அதிரவைக்கின்றன...
கடந்த ஆண்டு அமெரிக்க ராணுவ தலைமையகம் பென்டகன், சீனா தனது அணு ஆயுதங்களின் எண்ணிக்கையை இரு மடங்காக உயர்த்துவதற்கு தயாராகி வருவதாக தெரிவித்தது. சீனா கடந்த ஆண்டு 200-க்கும் மேற்பட்ட அணுகுண்டுகளை குவித்துள்ளதாகவும், அதை இருமடங்காக உயர்த்த திட்டமிட்டிருப்பதாகவும் பென்டகன் அப்போது கூறியது நினைவுகூரத்தக்கது. அமெரிக்காவும், ரஷியாவும் ஆயுத கட்டுப்பாடு பற்றி பேச தயாராகி வருகிற நிலையில், சீனா அணு ஆயுத திறனை மேம்படுத்த நடவடிக்கை எடுத்து வருவதைக் காட்டுகிற செயற்கைக்கோள் படங்களும், தகவல்களும் அதிர வைக்கின்றன.சீனா ஆயுதக்கட்டுப்பாடு தொடர்பாக எந்தப் பேச்சிலும் அங்கம் வகிக்கவில்லை.

அமெரிக்கா கவலை
சீனா அணு ஆயுத திறனை மேம்படுத்தும் நடவடிக்கையை மேற்கொண்டிருப்பதற்கு அமெரிக்கா கவலை தெரிவித்துள்ளது. இது பற்றி அமெரிக்க பாதுகாப்பு துறையின் அங்கமான அமெரிக்க மூலோபாய கட்டளை மையம் டுவிட்டரில் வெளியிட்ட பதிவில், “2 மாதங்களில் இரண்டாவது முறையாக சீனா அணு ஏவுகணை தளத்தினை அமைக்கும் நடவடிக்கையில் இறங்கி உள்ளது. இது உலகுக்கு அச்சுறுத்தலாக அமைந்துள்ளது” என கூறி உள்ளது.